தமிழகத்தை சீண்டும் கர்நாடகா! காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை முடக்க உச்சநீதிமன்றத்தில் மனு!

By Mathi

|

Published on 26 Nov 2026, 7:35 AM

Cauvery-Gundar-Karnataka

தமிழகத்தின் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளுக்குத் தடை விதிக்கவும், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடிக்கவும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு புதிய இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளது. கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவிரியில் வெள்ள காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீரை வறட்சியால் பாதிக்கப்படும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதுதான் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் நோக்கம். கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து சுமார் 255.60 கி.மீ. தொலைவுக்கு இணைப்புக் கால்வாய் அமைக்கப்படுவது இத்திட்டமாகும்.

ADVERTISEMENT

இதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதற்கு அப்போதே கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.

ADVERTISEMENT

இவ்வழக்கில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி, தமிழகத்தின் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு இதுவரை கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து கர்நாடகா அரசின் இடைக்காலத் தடை கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் புதிய இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளது கர்நாடகா அரசு.

ADVERTISEMENT

கர்நாடகா அரசின் புதிய மனு

மேட்டூர் அணையின் உபரி நீரில் 8.60 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் காவிரியின் உபரி நீரைத் தமிழகம் தன்னிச்சையாகப் பயன்படுத்தினால், எதிர்காலத்தில் அந்த நீருக்கும் தமிழகம் உரிமை கோரக்கூடும். இதனால் காவிரி உபரி நீர் மீதான கர்நாடகாவின் உரிமை பாதிக்கப்படும் என அம்மாநில அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய அரசின் கொள்கை அளவிலான அனுமதியைப் பெறாமலேயே தமிழக அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கர்நாடகா அரசு குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக திட்டங்களுக்கு தடை கோரும் கர்நாடகா

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என கர்நாடகா அரசு கோரியுள்ளது.

  • காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்.
  • சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டம்.
  • புதிய கட்டளை நீர்ப்பாசனத் திட்டம்.
  • கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூரில் தடுப்பணை கட்டும் திட்டம்.
  • ராஜவாய்க்கால் வடிகால் நீர்ப்பாசனத் திட்டம்.
  • நொய்யல் ஆறு மற்றும் கல்லணை வடிகால் நீர்த் திட்டங்கள்.

அத்துடன் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட வேண்டும்; இத்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவும், தேசியத் திட்டமாக அறிவிக்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் கர்நாடகா அரசு வலியுறுத்தியுள்ளது.

கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்

கர்நாடகா காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தடை கோரும் கர்நாடகா அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

கடலில் வீணாகக் கலக்கும் 8.60 டிஎம்சி உபரி நீரைத் தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே பயன்படுத்தும் திட்டத்தை எதிர்ப்பது நியாயமற்றது; 7 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடையும் வகையிலான இத்திட்டத்தை முடக்க முயற்சிப்பது தென் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

2026-27 நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர், இந்த சட்டப் போராட்டத்தை கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கர்நாடகா அரசின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமது தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை முடக்க கர்நாடகா காங்கிரஸ் அரசு முயற்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ள தவெக இந்த நடவடிக்கையை ஏற்கிறதா? கர்நாடகா காங்கிரஸ் அரசின் முயற்சியை முறியடிக்கும் தைரியம் தவெக அரசுக்கு இருக்கிறதா? எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதுடன் தமிழகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களைப் பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel