இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 26-ந் தேதி அரசியல் சாசன தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் 1957-ஆம் ஆண்டு இதே நவம்பர் 26-ந் தேதிதான் சாதியைப் பாதுகாப்பதாகக் கருதிய இந்திய அரசியல் சாசனப் பிரிவுகளைத் தீயிட்டு எரிக்கும் போராட்டத்தைத் தமிழகத்தில் நடத்தினார் தந்தை பெரியார்.
இந்தப் போராட்டத்தில் 10,000 பேர் பங்கேற்றனர். 4,000 பேர் கைது செய்யப்பட்டனர். 2,997 பேருக்கு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சாதி ஒழிப்புக்கான இந்தப் போராட்டத்தில் 18 மாவீரர்கள் தங்களது இன்னுயிரை ஈந்தனர்.
1950-களில் போராட்டக் களமான தமிழகம்
1950-களில் திராவிடர் கழகமும் திமுகவும் தமிழகத்தில் அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தின. அந்த 10 ஆண்டுகளையே தமிழகத்தின் போராட்ட ஆண்டுகள் எனக் குறிப்பிடலாம். இந்தப் போராட்டங்களின் உச்சகட்டமாக அமைந்ததுதான் பெரியார் அறிவித்த அரசியல் சாசன எரிப்புப் போராட்டம்.
சாதியற்ற, மதமற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற, ஆண்டான் அடிமை முறையற்ற சமத்துவ, சமதர்ம, சுயமரியாதைச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே பெரியார் கண்ட இயக்கத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் தொடர்வதையும், சாதியை ஒழிப்பதற்குப் பதிலாக அதற்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசியல் சாசனப் பிரிவுகள் அமைந்திருப்பதாகவும் பெரியார் விமர்சித்தார்.
தஞ்சையில் லட்சக்கணக்கானோர் திரண்ட மாநாடு
1957-ஆம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சிறப்பு மாநாட்டைக் கூட்டினார் பெரியார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். தஞ்சை ரயில் நிலையம் அருகே இருந்த கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து பெரியாரைச் சாரட்டு வண்டியில் அமர வைத்து பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது.
நடிகவேள் எம்.ஆர்.ராதா வெள்ளைக் குதிரையில் அமர்ந்து இந்த ஊர்வலத்தை வழிநடத்தினார். ஆங்காங்கே வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன. பாராசூட்டுகள் மூலம் வானிலிருந்து திராவிடர் கழகத்தின் கருங்கொடிகள் இறக்கப்பட்டன. பெங்களூரைச் சேர்ந்த திராவிடர் கழகப் பேச்சாளர் விசாலக்குமதி சிவலிங்கம் அம்மையார், மகளிரணியை வழிநடத்தி முழக்கமிட்டபடி ஊர்வலத்தில் பங்கேற்றார். தஞ்சை அரண்மனை மைதானத்தை ஊர்வலம் நெருங்கியபோது மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.
பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள்
இந்த மாநாட்டில் பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன. திராவிடர் கழகப் பொதுச்செயலாளரும் ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியருமான குத்தூசி குருசாமி, விழாவுக்காக நிதி திரட்டியவர்களின் பெயர்களைப் படிக்க, அவர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து பெரியார் அமர்ந்திருந்த தராசின் மறுதட்டில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயங்களைக் கொட்டினர். தராசு சமநிலையை அடைந்ததும் மாநாட்டில் பங்கேற்றிருந்த தொண்டர்களின் கைதட்டல் விண்ணைப் பிளந்தது.
அப்போதைய திராவிட மாணவர் கழகத் தலைவரும் ‘தோழன்’ இதழின் ஆசிரியருமான ஏ.பி.ஜனார்த்தனம் எழுதிய ‘தென்னாட்டுச் சாக்கரட்டீஸ் பெரியார்’ என்ற நூலும் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது. ஊர்வலம், பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் வழங்கிய நிகழ்ச்சி, அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்துக்கான அறிவிப்பு ஆகியவற்றை நடிகவேள் எம்.ஆர்.ராதா தமது சொந்தச் செலவில் திரைப்படமாகப் பதிவு செய்தார்.
அரசியல் சாசனத்தைக் கொளுத்தத் தயாரா?
மாநாட்டில் தமக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய பெரியார், சாதிக்குப் பாதுகாப்பாக இந்திய அரசியல் சாசனம் இருப்பதாகக் குறிப்பிட்டார். “அரசியல் சட்டத்தைக் கொளுத்துவதற்குத் தயாரா?” எனப் பெரியார் கேட்டார். “கொளுத்துவோம்” எனத் தொண்டர்கள் முழக்கமிட்டனர். “கொளுத்துவதற்குத் தயாராக உள்ளோர் கை உயர்த்துங்கள்” எனப் பெரியார் கூறியதும் பல்லாயிரக்கணக்கானோரின் கரங்கள் உயர்ந்தன.
அரசியல் சாசனத்தை எரித்தால் என்ன தண்டனை என்பது இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தண்டனையை நிர்ணயிக்க அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுப்போம் எனப் பெரியார் தெரிவித்தார்.
அரசியல் சாசனத்தை எரிப்பவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படலாம் அல்லது 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம். அத்தகைய கடுமையான தண்டனை விதிக்கப்பட்டாலும் எரிப்பீர்களா? எனப் பெரியார் கேட்டார்.
“எரிப்போம்.. எரிப்போம்” என மாநாட்டில் திரண்டிருந்த தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
அரசுக்கு 15 நாட்கள் கெடு – தஞ்சை மாநாட்டுத் தீர்மானம்
இந்திய அரசியல் சாசனத்தின் 13(2), 25(1), 26, 29(1), 29(2), 368 ஆகிய பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, மதத்துக்கும் சாதிக்கும் அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதிய பாதுகாப்புகளை நீக்க அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார்.
அந்தத் தீர்மானம் வருமாறு:
“இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, ஜாதி, மதம், ஆகியவை காரணமாக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் அளிக்கப்படாததாய் இருப்பதால், இவைகளை முன்னிட்டு இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு கேடானது என்று கருதுவதால் இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்று முதல் 15 நாள் வாய்தாவுக்கு இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1949 நவம்பர் 26 ஆம் தேதி அன்று அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து இந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.”
இந்தத் தீர்மானம் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு அரசுக்குப் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
எந்த அரசியல் சாசனப் பிரிவுகளை எதிர்த்தார் பெரியார்?
தஞ்சை மாநாட்டில் பெரியார் சுட்டிக்காட்டிய அரசியல் சாசனப் பிரிவுகள்:
- 13(2) – அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அல்லது குறைக்கும் சட்டங்களை அரசு இயற்றுவதற்கான தடை.
- 25(1) – மனசாட்சி சுதந்திரம், மதத்தைப் பின்பற்றுதல், கடைப்பிடித்தல், பரப்புதல் ஆகியவற்றுக்கான உரிமை.
- 26 – மத அமைப்புகள் தங்களது மத விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
- 29(1) – தனித்துவமான மொழி, எழுத்து, பண்பாட்டைப் பாதுகாக்கும் உரிமை.
- 29(2) – அரசு நடத்தும் அல்லது அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மறுக்கத் தடை.
- 368 – அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கான நடைமுறை.
அரசியல் சாசனத்தின் 15-வது பிரிவு சாதி அடிப்படையிலான பாகுபாட்டையும், 17-வது பிரிவு தீண்டாமையையும் தடை செய்துள்ள போதும், மதம் சார்ந்த உரிமைகள் மற்றும் மரபுகளுக்கான பாதுகாப்புகள் சாதி அமைப்பு தொடர்வதற்கு வழிவகுப்பதாகப் பெரியார் விமர்சித்தார்.
மதச் சுதந்திரத்தின் பெயரால் சாதிக்குப் பாதுகாப்பா?
அரசியல் சாசனத்தின் 13, 19, 25, 26, 372(1) ஆகிய பிரிவுகள் தொடர்பாகவும் பெரியாரிய இயக்கங்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
மதச் சுதந்திரம், மதம் சார்ந்த பழக்கவழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றுக்கான சட்டப் பாதுகாப்புகள் சாதியக் கட்டமைப்பையும் பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும் நீடிக்கச் செய்வதாகப் பெரியாரிய இயக்கங்கள் வாதிடுகின்றன.
அரசியல் சாசனத்தின் 26-வது பிரிவில் மத அமைப்புகளின் உரிமைகள் தொடர்பான வாசகங்கள் இடம்பெறுவதன் பின்னணியில் அப்போதைய காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் தலையீடு இருந்ததாகவும் பெரியாரிய இயக்கத்தினரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையை நிலைநாட்ட தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட முயற்சிகள், ஆகம விதிகள் தொடர்பாக நடைபெற்ற நீதிமன்றப் போராட்டங்கள் உள்ளிட்டவையும் இந்த விவாதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
தீண்டாமையை ஒழிப்பதாக அரசியல் சாசனம் அறிவித்தாலும், மதம் சார்ந்த மரபுகளின் பெயரால் பிறப்பு அடிப்படையிலான பாகுபாடுகள் தொடர்வதை எப்படித் தடுக்க முடியும் என்பதே பெரியார் எழுப்பிய அடிப்படைக் கேள்வி. அரசியல் விடுதலை கிடைத்துவிட்ட போதும் சமூக விடுதலை கிடைக்கவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த பெரியார், சாதி ஒழிப்புக்கான அரசியல் சாசனத் திருத்தங்களை வலியுறுத்தினார். இந்தப் பின்னணியில்தான் அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார்.
காமராஜர் அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம்
பெரியாரால் ‘பச்சைத் தமிழர்’ எனக் குறிப்பிடப்பட்ட காமராஜர் அப்போது தமிழக முதல்வராக இருந்தார். பெரியாரின் அரசியல் சாசன எரிப்புப் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு புதிய சட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்தது.
அரசியல் சாசனத்தை எரிப்பதற்குத் தனிப்பட்ட தண்டனை விதிக்கும் சட்டம் அதுவரை இல்லாத நிலையில், பெரியாரின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தேசிய அவமதிப்புத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1957-ஆம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி இது தொடர்பாகச் சென்னை மாநில சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது.
அரசியல் சாசனத்தை எரிக்கும் போராட்டத்தைப் பெரியார் எதற்காக நடத்துகிறார் என்பதற்கான காரணத்தை ஆட்சியாளர்கள் ஆராய வேண்டும் என அறிஞர் அண்ணா சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். 1957-ஆம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி தேசிய அவமதிப்புத் தடுப்புச் சட்டம் (The Prevention of Insults to National Honour Act, 1957 – Act XIV of 1957) இயற்றப்பட்டது.
அரசியல் சாசனத்தை எரிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்தச் சட்டம் வகை செய்தது. போராட்டத்துக்கு முன்னதாகவே கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டதால், போராட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என அரசு கருதியது. ஆனால் அரசின் கணிப்புக்கு மாறாகப் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
10,000 பேர் எரித்தனர்.. சாம்பலை அரசுக்கு அனுப்பினர்!
1957-ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தமிழகம் முழுவதும் பெரியார் அறிவித்த அரசியல் சாசன எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் ஆண், பெண் தொண்டர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், முதியவர்கள், சிறுவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். சாதிக்குப் பாதுகாப்பாக இருப்பதாகப் பெரியார் சுட்டிக்காட்டிய அரசியல் சாசனப் பிரிவுகள் அச்சிடப்பட்ட கையளவுத் தாள்களை 10,000 கருஞ்சட்டைத் தொண்டர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். அரசியல் சாசனப் பிரிவுகளை எரித்ததுடன் அதன் சாம்பலையும் அரசுக்கு அனுப்பி வைத்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சுமார் 4,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியார் முன்னெச்சரிக்கையாக கைது
அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்தை அறிவித்த பெரியாரால் அந்தப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை. குளித்தலை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பெரியார் பேசியது தொடர்பாக அவர் மீது ஏற்கெனவே வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
நவம்பர் 25-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, சென்னை சென்று மறுநாள் நடைபெறும் அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்கப் பெரியார் திட்டமிட்டிருந்தார். ஆனால் போராட்டத்துக்கு முதல் நாளான நவம்பர் 25-ந் தேதி மாலை திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார். 3 நாட்கள் சிறைக்காவலுக்குப் பின்னர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். பின்னர் அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திராவிடர் கழகத் தொண்டர்களைப் பெரியார் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன் – நீதிமன்றங்களில் முழங்கிய போராளிகள்
அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நீதிமன்றத்தில் எத்தகைய வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்பதை 1957-ஆம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ‘விடுதலை’ நாளிதழில் பெரியார் வெளியிட்டிருந்தார்.
அதன்படி நீதிமன்றங்களில் போராட்டக்காரர்கள் அளித்த வாக்குமூலம் வருமாறு:
“நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தை திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தை கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”
இந்த வாக்குமூலத்தை அளித்துவிட்டு நீதிமன்றங்களில் தங்களுக்காக எதிர்வழக்காடாமல் சிறை தண்டனையை ஏற்றுக்கொண்டனர் போராட்டக்காரர்கள்.
2,997 பேருக்கு சிறை தண்டனை – மன்னிப்புக் கேட்க மறுப்பு
அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 2,997 பேருக்கு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மன்னிப்புக் கேட்டால் சிறையிலிருந்து விடுதலை செய்வதாகக் கூறப்பட்டபோதும் போராட்டக்காரர்கள் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அனுபவித்தனர். குடும்பங்களையும் வாழ்வாதாரத்தையும் பிரிந்து சாதி ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கைக்காக ஆயிரக்கணக்கானோர் சிறைக்குச் சென்றனர்.
சிறைக்கு வெளியேயும் தொடர்ந்த சாதி ஒழிப்புப் பிரச்சாரம்
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் இருந்தபோதும் திராவிடர் கழகத்தின் சாதி ஒழிப்புப் பிரச்சாரம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றது. திருவாரூர் கே.தங்கராசு, கி.வீரமணி, எஸ்.டி.விவேகி, எம்.கே.குப்தா உள்ளிட்ட திராவிடர் கழகப் பேச்சாளர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசினர். இவர்களது மாதாந்திரச் சுற்றுப்பயண விவரங்கள் தொடர்ந்து ‘விடுதலை’ நாளிதழில் வெளியிடப்பட்டன.
சிறைக் கொட்டடிகளில் தொடர்ந்த துயரம்
அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்பட்டது. போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் பலரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் தங்களது உறுதியைக் கைவிடவில்லை. ஓய்வுபெற்ற ஆசிரியர் பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் 1958-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சி மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் பெரியார் இயக்கத் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின.
மாவீரர்களின் உடல்களை மீட்கப் போராடிய மணியம்மையார்
சிறையில் உயிரிழந்த பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இருவரது உடல்களையும் ஒப்படைக்க முதலில் அரசு மறுத்தது. இதனையடுத்து இருவரது உடல்களையும் மீட்பதற்காக அன்னை மணியம்மையார் நடவடிக்கை மேற்கொண்டார். அப்போதைய முதல்வர் காமராஜரைச் சந்தித்து இருவரது உடல்களையும் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மணியம்மையார், நடிகவேள் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பெரியார் இயக்கத்தினரின் தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் இருவரது உடல்களும் ஒப்படைக்கப்பட்டன.
1958-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சியில் மணியம்மையார் தலைமையில் இருவரது உடல்களும் பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. சிறையில் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தொண்டர்கள் உணவு உண்ண மறுத்துப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
16 வயது சிறுவனின் உறுதி.. ஆளுநரையே அதிர வைத்த பதில்!
திருச்சி வாளாடியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பெரியசாமி, தனது தாய்க்கு ஒரே மகன். தீவிரமான கருஞ்சட்டைத் தொண்டரான பெரியசாமி, பெரியாரின் பொதுக்கூட்டங்கள் எங்கு நடைபெற்றாலும் தவறாமல் பங்கேற்பவர். பெரியாரின் ஆணையை ஏற்று அரசியல் சாசன நகலைத் தீயிட்டு எரித்த பெரியசாமி, கைது செய்யப்பட்டு தட்டப்பாறை சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒருநாள் தட்டப்பாறை சிறையைப் பார்வையிட அப்போதைய தமிழக ஆளுநர் விஷ்ணுராம் மேதி வந்தார். சிறையில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய ஆளுநர், பெரியசாமியிடமும் உரையாடினார். பெரியாரின் ஆணையை ஏற்றுப் போராடி, சிறுவர் சிறைக்கு வந்த ஒரே அரசியல் கைதி என்பதால் பெரியசாமியிடம் தனிப்பட்ட அக்கறை காட்டினார் ஆளுநர். “உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். இனிமேல் இதுபோன்ற காரியம் செய்ய மாட்டாய் அல்லவா?” என ஆளுநர் கேட்டார்.
மொழிபெயர்ப்பாளர் மூலமாக நடைபெற்ற இந்த உரையாடலில், அரசியல் சாசனத்தை எரித்ததற்கான காரணத்தை ஆளுநரிடம் தெளிவாக விளக்கிய பெரியசாமி, “வெளியே அனுப்பினால் மீண்டும் கொளுத்துவேன்” என உறுதியாகப் பதிலளித்தார். 16 வயது சிறுவனின் இந்தப் பதிலைக் கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த ஆளுநர் விஷ்ணுராம் மேதி, பெரியசாமியைத் தட்டிக்கொடுத்து, “கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக” எனக் கூறிவிட்டுச் சென்றார்.
மரணத்தின் விளிம்பிலும் விடுதலையை மறுத்த பெரியசாமி!
சிறையில் கடுமையான கோடை வெயில், புழுக்கள் நிறைந்த சோளக் கஞ்சி ஆகியவற்றால் பெரியசாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. வயிற்றுக்கடுப்பால் அவதிப்பட்ட பெரியசாமிக்குப் போதிய மருத்துவ வசதியும் கிடைக்கவில்லை. ரத்தப்போக்கு ஏற்பட்டு, நினைவு தடுமாறும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. அப்போது சிறை அதிகாரிகள் பெரியசாமியிடம், “விடுதலை செய்கிறோம். வெளியே போகிறாயா?” எனக் கேட்டனர். பேச முடியாத நிலையிலும் மௌனமாகத் தனது கையை அசைத்து விடுதலையை மறுத்தார் பெரியசாமி. அடுத்த சில மணி நேரங்களில் அந்த 16 வயது இளம் போராளியின் உயிர் பிரிந்தது.
தனது தாய்க்கு ஒரே மகனான பெரியசாமி, சாதி ஒழிப்பு என்ற கொள்கைக்காகச் சிறை சென்று, ஆளுநரே முன்வந்து விடுதலை செய்வதாகக் கூறியபோதும் மறுத்து, இறுதி மூச்சு வரை தனது கொள்கையில் உறுதியாக இருந்து உயிர்த்தியாகம் செய்தார். அந்த இளம் போராளியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் திருச்சி–லால்குடி சாலையில் இன்றும் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது.

சாதி ஒழிப்புக்காக உயிர்நீத்த 18 மாவீரர்கள்
அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிறையிலேயே உயிரிழந்த 5 போராளிகள்:
- பட்டுக்கோட்டை இராமசாமி
- மணல்மேடு வெள்ளைச்சாமி
- நன்னிமங்கலம் கணேசன்
- திருச்சி சின்னச்சாமி
- வாளாடி பெரியசாமி
- இடையாற்றுமங்கலம் தெய்வானையம்மாள்
- இடையாற்றுமங்கலம் நாகமுத்து
- மாதிரிமங்கலம் ரெத்தினம்
- கோவில்தேவராயன்பேட்டை நடேசன்
- திருவையாறு மஜீத்
- காரக்கோட்டை இராமய்யன்
- புதுமணக்குப்பம் கந்தசாமி
- பொறையாறு தங்கவேலு
- மணல்மேடு அப்பாத்துரை
- கண்டராதித்தம் சிங்காரவேலு
- திருச்சி டி.ஆர்.எஸ்.வாசன்
- தராநல்லூர் மஜீத்
- கீழவாளாடி பிச்சை
இவர்கள் தவிர, சிறையில் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விடுதலையான பின்னர் மேலும் 13 பேர் உயிரிழந்தனர். சாதி ஒழிப்புப் போராட்டத்தில் பெரியார் இயக்கம் கொடுத்த களப்பலி மொத்தம் 18 பேர்.
சாதி ஒழிப்புக்காகத் தங்களது இன்னுயிரை ஈந்த இந்த 18 பேரையும் சாதி ஒழிப்புப் போராட்ட மாவீரர்களாகப் பெரியாரிய இயக்கங்கள் நினைவுகூர்ந்து வருகின்றன.
பெரியாருக்கு 6 மாத சிறை தண்டனை
அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்துக்கு முன்னர் பெரியார் ஆற்றிய உரைகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளில் அவருக்கு 3 சட்டப் பிரிவுகளின் கீழ் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி பெரியார் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தது. திருச்சியிலிருந்து இரவோடு இரவாகச் சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட பெரியார், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சிறையிலிருந்து வெளியே வந்து என்ன பயன்?
சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த பின்னரும் சாதியைப் பாதுகாக்கும் நிலை அப்படியே நீடிக்கிறதே; நான் வெளியே வந்து என்ன பயன் எனப் பெரியார் வேதனைப்பட்டார். அரசியல் சாசன எரிப்புப் போராட்டம் அதன் இறுதி இலக்கை அடைந்துவிடவில்லை என்றாலும் தமிழக மக்களிடையே சாதி ஒழிப்பு தொடர்பாக மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கானோர் சிறை தண்டனையை ஏற்று, தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து, சாதி ஒழிப்பு என்ற கோரிக்கைக்காகப் போராடியது இந்தியாவின் சமூக சீர்திருத்தப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.

2,547 பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்ட போராட்ட வரலாறு
பெரியார் நடத்திய அரசியல் சாசன எரிப்புப் போராட்டத்தின் விரிவான வரலாற்றை 2,547 பக்கங்களில் 3 தொகுதிகளாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. அக்காலத்தில் வெளியான ‘விடுதலை’ நாளிதழ் செய்திகள், போராட்டத்தில் பங்கேற்றவர்களின் நேரடி அனுபவங்கள், சிறை அனுபவங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மாநிலம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் 556 இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வரலாறு, அவர்களது உடல்களை மீட்க மணியம்மையார் மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசியல் சாசன தினமும் சாதி ஒழிப்பு மாவீரர்கள் நினைவு நாளும்
1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியல் சாசனம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி அரசியல் சாசனம் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 26-ந் தேதி அரசியல் சாசன தினமாக மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் பெரியாரிய இயக்கங்கள் நவம்பர் 26-ந் தேதியைச் சாதி ஒழிப்புப் போராட்ட மாவீரர்கள் நினைவு நாளாகக் கடைப்பிடித்து வருகின்றன.
திருச்சியில் உள்ள பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரது நினைவிடங்களில் ஆண்டுதோறும் பெரியாரிய இயக்கத்தினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பெரியார் நடத்திய அரசியல் சாசன எரிப்புப் போராட்டம் நடைபெற்று இன்றுடன் 69 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 10,000 பேர் அரசியல் சாசனப் பிரிவுகளை எரித்து, 4,000 பேர் கைதாகி, 2,997 பேர் சிறை தண்டனையை ஏற்று, 18 பேர் இன்னுயிரை ஈந்த இந்தச் சாதி ஒழிப்புப் போராட்டம் தமிழகத்தின் சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத அத்தியாயமாகத் திகழ்கிறது.









