தூணில் தீபம் ஏற்றக் கூடாது என விஜய் உத்தரவா? உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு!

By Mathi

|

Published on 26 Nov 2026, 12:25 PM

Thiruparankundram Deepam (1)

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என உத்தரவிட்டது முதல்வர் விஜய்யா? அல்லது அவரது அமைச்சர்களா? என்பதை வெளிப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நவம்பர் 20-ந் தேதி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

ADVERTISEMENT

இதன்படி நவம்பர் 24-ந் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் சர்வே கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் மூலம் இந்தத் தீபத்தை ஏற்றவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதனையடுத்து, திருப்பரங்குன்றம் சர்வே கல் தூணில் தீபம் ஏற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான ராம ரவிக்குமார், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT

விஜய் உத்தரவிட்டாரா?

ராம ரவிக்குமார் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெறுமனே செயல்படுத்தப்படாமல் விடப்படவில்லை; திட்டமிட்டே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாதது தொடர்பாக தமிழக அரசு மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? இந்த முடிவுகளை எடுத்தது யார்? என்பது குறித்த அனைத்து விவரங்களையும் தமிழக தலைமைச் செயலாளர் தனிப்பட்ட பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் அல்லது அவரது அமைச்சர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருந்தால் அதனையும் வெளிப்படுத்த வேண்டும்.

உளவுத்துறை அறிக்கைகள்

இது தொடர்பான அரசின் கோப்புக் குறிப்புகள், ஆலோசனைக் கூட்டங்களின் பதிவுகள், உளவுத்துறை அறிக்கைகள், அரசியல் நிர்வாகத் தலைமையினருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையேயான மின்னணு தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை மீறியதற்கான பொறுப்பை, அந்த உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளுடன் மட்டும் நிறுத்திவிடக் கூடாது. நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான முடிவு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய வேண்டும்.

முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்

1994-ஆம் ஆண்டு முகமது அஸ்லாம் என்கிற பூரே எதிர் மத்திய அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் தனிப்பட்ட பொறுப்பு நிரூபிக்கப்பட்டால் ஒரு மாநிலத்தின் முதல்வரைக்கூட தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்க முடியும்.

அறங்காவலர் குழு தீர்மானம்

கார்த்திகை தீபத் திருநாளன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனும் உறுதியளித்த போதிலும் சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபத்தை ஏற்றுவது என கோவில் அறங்காவலர் குழு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது எந்தச் சூழ்நிலையில்?

மத மரபுகள், ஆகம விதிகள், சமய வல்லுநர்கள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி சர்வே கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாகத் தாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என கோவிலின் ஸ்தானிக பட்டர்கள் மறுத்துள்ளனர். அறங்காவலர் குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீற முடியாது.

11 பேர் மீது நடவடிக்கை

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன், காவல் துணை ஆணையர் இனிகோ விஜயன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் அறங்காவலர்கள் 5 பேர் என மொத்தம் 11 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு அனுமதி அளித்தவர்கள், உத்தரவிட்டவர்கள் அல்லது வேண்டுமென்றே தூண்டியவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

7 நாட்களுக்குள் தீபம் ஏற்ற வேண்டும்

நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதுடன், அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 7 நாட்களுக்குள் திருப்பரங்குன்றம் சர்வே கல் தூணில் தீபம் ஏற்றுவதற்குப் புதிய தேதியை நிர்ணயிக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சாதிக்க முடியாததை, நீதிமன்ற உத்தரவை மீறுவதன் மூலம் அதிகாரிகள் சாதித்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு ராம ரவிக்குமார் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த வழக்கறிஞர் பி.வள்ளியப்பன் தயாரித்த இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை வழக்கறிஞர் ஜி.பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel