டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏர் இந்தியாவில் உயர்மட்ட நிர்வாகக் குழுவை மாற்றியமைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் சொல்கின்றன.
புதிய தலைமைச் செயல் அதிகாரி டெவோல்டே கெப்ரேமரியம் (Tewolde Gebremariam), தனக்கான புதிய நிர்வாகக் குழுவைத் தானே அமைத்துக்கொள்ள டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நிதி இழப்பைக் குறைத்து, விமானச் சேவையின் செயல்திறனைக் கூட்டுவதுதான் இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம்.
நிபுன் அகர்வாலின் எதிர்காலம்?
ஏர் இந்தியாவின் தலைமை வர்த்தக மற்றும் மாற்றத்துறை அதிகாரியாக இருக்கும் நிபுன் அகர்வால், இந்தப் பொறுப்பிலிருந்து விலகி, டாடா குழுமத்தின் வேறு பொறுப்புக்குப் போகக்கூடும் என்று தகவல்கள் சொல்கின்றன. ஏர் இந்தியாவை டாடா குழுமம் எடுத்துக்கொண்ட காலத்திலிருந்தே அதன் வளர்ச்சித் திட்டங்களில் அவர் முக்கியப் பங்காற்றியவர். புதிய விமானங்கள் வாங்குவது, வழித்தடத் திட்டமிடல், வருவாய் மேலாண்மை, கூட்டணிகள், விற்பனை என்று பல பிரிவுகளை அவர்தான் கவனித்து வந்தார். ஆனாலும் அவரது பதவி மாற்றம் பற்றி நிறுவனம் எதுவும் அறிவிக்கவில்லை.
ரூ.22,238 கோடி நஷ்டம்
2025-26 நிதியாண்டில் ஏர் இந்தியா குழுமத்தின் ஒருங்கிணைந்த நிகர நஷ்டம் ரூ.22,238 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.10,859 கோடி. வருவாயும் ரூ.78,636 கோடியிலிருந்து ரூ.71,870 கோடியாகக் குறைந்துள்ளது.
- பயணிகள் எண்ணிக்கை 4.38 கோடியிலிருந்து 3.6 கோடியாகக் குறைந்தது.
- விமான இருக்கைப் பயன்பாட்டு விகிதம் 85 சதவீதத்திலிருந்து 81 சதவீதமாகச் சரிந்தது.
- மொத்தச் செலவுகள் ஏறியுள்ளன.
இந்த நிலையை மாற்றுவதுதான் புதிய சிஇஓ-வின் முதல் பெரிய வேலையாக இருக்கும்.
டெல்லி மட்டுமில்லை, மும்பை, ஹைதராபாத்தும் மையங்களாகுமா?
விமானங்களின் பயன்பாட்டைக் கூட்டுவது, பராமரிப்புத் தரத்தை உயர்த்துவது, செலவைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு, சேவைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் டெவோல்டே கவனம் செலுத்தவுள்ளார். டெல்லியை மையமாக வைத்து நடக்கும் விமானச் செயல்பாடுகளின் அழுத்தத்தைக் குறைத்து, மும்பை, ஹைதராபாத்தை வலுவான விமான மையங்களாக மாற்றும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது. இதனால் பயண இணைப்புகள் மேம்படும், விமானங்களும் நன்றாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
புதிய நிர்வாகக் குழுவின் முடிவுகள் ஏர் இந்தியாவின் நிதிநிலையையும் சேவைத் தரத்தையும் எவ்வளவு மாற்றும் என்பதைத்தான் இனி எல்லோரும் உற்றுப் பார்ப்பார்கள்.









