ஐபோன் தயாரிக்கும் ஃபாக்ஸ்கானுக்கு இந்தியாவில் புது தலைவலி! ரூ.1,400 கோடி பாக்கி கேட்டு திவால் வழக்கு!

By Minnambalam Desk

|

Published on 26 Nov 2026, 11:58 AM

ஆப்பிள் ஐபோன்களைத் தயாரிக்கும் உலகின் பெரிய ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் (Foxconn), இந்தியாவில் புது சிக்கலில் மாட்டியுள்ளது.

தன் இந்தியப் பிரிவிடமிருந்து நிலுவைப் பணத்தை வசூலிக்க முடியாமல் தவித்த ஒரு ஒப்பந்த நிறுவனம், தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLT) திவால் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இன்னும் சில நிறுவனங்களுக்கும் பல மாதங்களாகப் பணம் தரப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

BCD Emprasa கேட்கும் பணம்

ADVERTISEMENT

பெங்களூரு ஆலை ஊழியர்களுக்காகத் தங்கும் விடுதிகளை வாடகைக்கு விட்ட BCD Emprasa LLP நிறுவனம்தான் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது.

ஆகஸ்ட் 12 அன்று சென்னை NCLT அமர்வில் தாக்கல் செய்த மனுவில், வாடகை, பயன்பாட்டுக் கட்டணமாகச் சுமார் 1.43 பில்லியன் ரூபாய் (15.3 மில்லியன் டாலர்) நிலுவையில் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வட்டி, சேவைக் கட்டணம், இழப்பீடு ஆகியவற்றையும் அந்த நிறுவனம் கேட்டுள்ளது.

2024 ஏப்ரலில் போட்ட ஒப்பந்தப்படி, பெண் ஊழியர்களுக்காக 700 குடியிருப்புகளை ஃபாக்ஸ்கான் வாடகைக்கு எடுத்திருந்தது. ஊழியர்கள் தங்கினாலும் தங்காவிட்டாலும் வாடகை கட்ட வேண்டும் என்பதும் அந்த ஒப்பந்த நிபந்தனைகளில் ஒன்று.

மற்றவர்களுக்கும் பாக்கியா?

BCD Emprasa மட்டுமில்லை, குறைந்தது நான்கு நிறுவனங்கள் ஃபாக்ஸ்கானிடமிருந்து சில மாதங்கள் முதல் ஓராண்டுக்கும் மேலாகப் பணம் வராமல் காத்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. இவற்றில் சில, பெங்களூரு ஆலையின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவை.

வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் வெளியேறியதால் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கான பணப் பரிமாற்றங்கள் தாமதமாகியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸோடு போட்டி

இந்தியாவில் ஆப்பிளின் உற்பத்திச் சங்கிலியில் பெரிய இடத்தைப் பிடிக்க ஃபாக்ஸ்கானும் டாடா எலக்ட்ரானிக்ஸும் போட்டி போடுகின்றன. இந்தச் சூழலில் பணம் தராமல் இழுத்தடிக்கப்படுவது ஃபாக்ஸ்கானின் செயல்பாடுகள் பற்றிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆனால், இந்த வழக்கு ஃபாக்ஸ்கானின் இந்திய வளர்ச்சித் திட்டங்களைப் பாதிக்கும் என்று இப்போதைக்கு எதிர்பார்க்கப்படவில்லை. இந்தியாவில் தாக்கல் செய்யப்படும் இதுபோன்ற திவால் மனுக்கள் பெரும்பாலும் நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றன. எல்லாமே நிறுவனத்தைத் திவாலாக்குவதில்லை. இந்த விவகாரம் பற்றி ஃபாக்ஸ்கான் எந்தக் கருத்தும் சொல்லவில்லை.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel