ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதியா? – தி.மு.க – வை சாடிய மாணிக்கம் தாகூர் எம்.பி

By Pandeeswari Gurusamy

|

Published on 26 Nov 2026, 12:42 PM

அதிகாரம் கையில் இருந்தபோது “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்று கொள்கை முழக்கமிட்ட திமுக இன்று பதவி போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது என மாணிக்கம் தாகூர் எம்பி விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி முதல் முறையாகத் தனது ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பெண் எம்.பி-க்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலரும், எதிர்க்கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ “பாவம்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின் பாதிக்கப்பட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ள நிலையில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நேற்று டி.ஜி.பி அலுவலகத்தில் தி.மு.க சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தொட்டதெற்கொல்லாம் கைது நடவடிக்கை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

கார்த்தி சிதம்பரத்தின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக ஒட்டுமொத்த கட்சியின் சுயமரியாதையையும் அடகு வைத்து, தவெக-வின் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுப்பதுதான் தமிழக காங்கிரஸின் அரசியலா? பணியிடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக நின்று நீதி பெற்றுத் தருவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. மாறாக, கைது நடவடிக்கை கூடாது என்று முன்கூட்டியே வக்காலத்து வாங்குவது அல்ல!

கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதைச் சட்டமும், காவல்துறையும், நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும் என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்து 48 மணி நேரம் கடந்த நிலையிலும் அவர் கைது செய்யப்படாத நிலையில், இன்று எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் என்றும், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் தி.மு.க சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் பதிவில், “”யூ ஆர் ஜஸ்ட் எ போஸ்ட்மேன்!” என்று மேடையில் முழங்கியவர்கள், இன்று அதே ‘தபால்காரரிடம்’ தபால் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள்!

அன்று அதிகாரம் கையில் இருந்தபோது “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்று கொள்கை முழக்கம்; இன்று பதவி போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது திமுக!

மொத்தத்தில், உதயநிதியின் வழி அது ஆளுநர் வழி மற்றும் பாஜக வழி!” என விமர்சித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel