ராஜன் குறை
கலைஞரின் 103-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாடு போற்றும் நல்லாட்சியை ஐந்தாண்டுகாலம் தந்த தி.மு.க தேர்தலுக்குப் பின் ஆட்சியைத் தொடர இயலாத இந்தத் தருணத்தில் கலைஞர் பிறந்த தினம் கொண்டாடப் படுகிறது. தி.மு.க இவ்வாறு எதிர்நீச்சல் போடுவது புதிதல்ல என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம்.
ஒவ்வொரு முறையும் ஆட்சியில் தமிழ்நாட்டை ஏற்றம் பெறச் செய்யும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க. ஆனாலும் அடுத்த முறை ஆட்சியில் தொடராது. இந்த புதிருக்கு என்ன காரணம் என்பதை விளங்கிக்கொள்ள நாம் கலைஞர் எவ்வாறு ஒரு வரலாற்று ஆளுமை என்ற அடையாளத்தைப் பெறுகிறார், வரலாறு என்றால் என்ன ஆகிய வினாக்களை எழுப்பிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
தி.மு.க உருவான 1949-ஆம் ஆண்டிலிருந்து இருபதாண்டு காலம் அறிஞர் அண்ணா அதன் ஒப்பற்ற தலைவராக விளங்கினார். தி.மு.க-வின் தனித்துவமிக்க அரசியல் கோட்பாடுகளை வடிவமைத்தார். பதினெட்டு ஆண்டுகளில் எந்த பணபலமும், சமூக ஆதிக்கப் பின்புலமும் இல்லாமல், எளிய சாமானியர்களை அணிதிரட்டி, மிக உறுதியான ஒரு கட்சிக் கட்டமைப்பை மாநிலம் முழுவதும் உருவாக்கி, அதனை கொள்கை வழி நெறிப்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் காலம் அவரை அழைத்துக்கொண்டது. அதன் பின், ஐம்பதாண்டுகாலம், தி.மு.க-வை வழி நடத்தி, நவீன தமிழ்நாட்டின் வரலாற்றைச் செதுக்கியவர் கலைஞர்.

சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் இவ்வாறு அரை நூற்றாண்டுக்காலம் ஒரு கட்சியை வழி நடத்தியவர், ஒரு மாநிலத்தின் வரலாற்றை நிர்ணயித்தவர் என்று வேறு எவரையும் சொல்ல இயலாது. உலக அளவில் கூட ஃபிடல் காஸ்ட்ரோ என்ற ஒருவர் பெயர்தான் உடனடியாக ஒப்புமை சொல்ல முடிகிறது. இது வெறும் ஆண்டுக் கணக்கு மட்டுமல்ல. தொடர்ந்து ஒவ்வொரு சூழலிலும், தமிழ்நாட்டு நலன்களை காத்து நின்று அதன் வளர்ச்சிக்கு வழிவகுத்த இலட்சியப் பயணம் என்பதை கவனிக்க வேண்டும். இந்த பின்னணியில்தான் நாம் வரலாறு என்றால் என்ன, வரலாற்று ஆளுமை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வரலாறு என்றால் என்ன?
வரலாறு என்பதை கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் என்பதாகவே பெரும்பாலும் புரிந்துகொள்கிறோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்ன நிகழ்ந்தது என்ற பண்டைய வரலாறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்ன நிகழ்ந்தது என்ற மத்திய கால வரலாறு, நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன நிகழ்ந்தது என்ற சமகால வரலாறு என்றெல்லாம் வகைப்படுத்தி, அந்நிகழ்வுகளை ஆராயும் அறிவுத்துறையே வரலாறு எனப்படுகிறது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதுவது வரலாற்று எழுதியல் (historiography) எனப்படுகிறது. இது வரலாறு என்பதற்கான ஒரு பொருள் மட்டுமே.
வரலாறு என்பதற்கு மற்றொரு பொருள் இருக்கிறது. அது என்னவென்றால், மானுடர்களின் தன்னுணர்வு மூலம், அவர்கள் தங்கள் ஆற்றல்களை உணர்ந்து புதிய சாத்தியங்களை செயல்படுத்தி வாழ்வை மேம்படுத்திக்கொள்வது. சமூக மாற்றத்தை உருவாக்குவது. சமூகத்தை சீர்திருத்துவது. அரசியலமைப்பை மேம்படுத்துவது. வன்முறையும், நெருக்கடியும் மிகுந்த வாழ்வை சீரமைத்து, அமைதியும் செழுமையும் கொண்ட சகவாழ்வை உருவாக்குவது என பலவாறு கூறலாம். இப்படி குறைகளைக் களைந்து மேம்படுவதையே முன்னால் செல்வது, முற்போக்கு என்று கூறுகிறோம். இதுவே வரலாற்று உருவாக்கம்.

இந்த இரண்டு பொருள்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன. கார்ல் மார்க்ஸ் அதனை சிறப்பாக வெளிப்படுத்தினார். “மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடியெல்லாம் அதனை உருவாக்குவதில்லை; அவர்கள் விரும்பும் சூழ்நிலையில் அவர்கள் அதனை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளில்தான் உருவாக்குகிறார்கள். இறந்து போன தலைமுறைகள் உருவாக்கிய மரபுகள் துர்க்கனவுகள் போல வாழ்பவர்களின் மனங்களின் சுமைகளாக உள்ளன” என்ற அவருடைய மேற்கோள் புகழ் பெற்றது.
தமிழ்நாட்டை எண்ணிப் பார்த்தால் மார்க்ஸ் மேற்கோள் சிறப்பாகப் புரியும். பார்ப்பனீயம், வர்ண தர்மம், சனாதனம், ஆணாதிக்கம், ஜாதீயம் எல்லாமே துர்க்கனவுகளாக வாழ்பவர்களின் ஆன்மாவைப் பீடித்துள்ளன. அந்த சூழ்நிலையை எதிர்கொண்டுதான் சமூக நீதியும், சமத்துவமும் நிலவும் புதிய மக்களாட்சி சமூகத்தை உருவாக்க வேண்டும். பல நூறாண்டுகளாக, ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகளாக மொழியில், சொல்லாடலில், கதையாடலில் ஊடுறுவிய எண்ணற்ற மூட நம்பிக்கைகள், கற்பிதங்கள், ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல் அமைப்புகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் புதிய வரலாற்றை உருவாக்க வேண்டும்.

இதுதான் மக்களாட்சியின் எதிர்நீச்சல். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியைவிடவும் எந்த சவாலையும் சிறப்பாக எதிர்கொண்ட கட்சி தி.மு.க எனலாம். காரணம் அது பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சுயமரியாதைப் பேரொளியில் பிறந்த இயக்கம். மக்களாட்சியில் சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால், அரசதிகாரத்தை சாமானியர்கள் கைப்பற்றி அவர்கள் அரசாங்கத்தை அமைப்பது அவசியம் என்று உணர்ந்த அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி. அப்படி அமைத்த அரசாங்கத்தின் மூலம் பெரியார், அண்ணா எண்ண ங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டு வரலாற்றை வடிவமைத்த கலைஞர் வழிநடத்திய கட்சி.
ஆனால் இந்த இலட்சியப் பயணம் சுலபமானதல்ல. உலகில் எங்குமே ஏற்றத்தாழ்வு நீங்கி, அரசியல் பொருளாதார சமத்துவம் நிலவும் சமூகத்தை உருவாக்க முடியவில்லை என்பதே இருபத்தோராம் நூற்றாண்டின் துல்லியமான நிலை. காரணம் முதலீட்டிய திரட்சி என்பதே வளர்ச்சியின் அடிப்படையாக உள்ளது.
அப்படி முதலீட்டிய திரட்சி தொடர்ந்து நிகழவேண்டுமானால் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வை பயன்படுத்தியே மக்களின் உழைப்பாற்றலை திரட்ட வேண்டியுள்ளது. அதனால் ஒரு புறம் அனைவருக்கும் சம வாய்ப்பு என்று அரசியல் கட்சிகள் முயற்சிக்கும்போது, பொருளாதாரத்தில் முதலீட்டிய சக்திகள் அந்த வாய்ப்புகளின் கதவுகளை பலருக்கும் அடைக்கிறது. பல்வேறு அடையாளங்களில் மக்களை சிறைப்படுத்தி அவர்கள் ஒன்றிணைந்து உரிமைகளைப் பெறுவது தடுக்கப் படுகிறது. உலக நாடுகளிலெல்லாம் எவ்வளவு தூரம் சமத்துவம் நிலவுகிறது என்பதை ஆராய்ந்த பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சமத்துவம் அதிகரித்தது என்றும், கடந்த முப்பதாண்டுகளில் மீண்டும் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார்.
இந்த உலகளாவிய வரலாற்றின் பின்னணியில்தான் தமிழ்நாட்டில் கலைஞர் எப்படி ஒரு வரலாற்று ஆளுமையாக விளங்கினார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் தி.மு.க-விற்கு கடந்தகாலத்தின் சுமையாக வந்து சேர்ந்த சூழ்நிலைகள் என்ன, அவற்றை எந்த அளவு மாற்றுவதற்கு அதனால் போராட முடிந்தது, தி.மு.க-விற்கு எதிராக திரளும் எதிர்புரட்சி சக்திகளின் வடிவங்கள் என்ன என்பதையெல்லாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

வரலாற்று ஆளுமை என்பது என்ன?
தத்துவியலாளர் ஹெகல் வரலாற்று ஆளுமை, ஹிஸ்டாரிகல் பெர்சனேஜ் (historical personage) என்ற கருத்தாக்கத்தை விவாதித்தார். இதன் முக்கியமான கூறு என்னவென்றால் இவ்வாறான ஆளுமைகள் அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட முரண்பாடுகளில், அதிகாரப் போட்டிகளில்தான் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனாலும் அவர்களது செயல்பாடுகள், ஆட்சியின் செயல்பாடுகள் பெரும் சமூக மாற்ற ஆற்றல்களை உருவாக்கும்.
ஒரு தனி நபராக அவர்களது அன்றாட அரசியல் நகர்வுகளை மட்டும் கவனம் கொண்டால் அவர்களின் வரலாற்றுப் பங்களிப்பு என்பது புரியாது. ஏனெனில் முரணரசியல், நடைமுறை அரசியல் போன்றவற்றில் எத்தனையோ விருப்பு, வெறுப்புகள், சந்தர்ப்பத்திற்கேற்ற நடைமுறைகள் என பல விவாத த்திற்குரிய அம்சங்கள் இருக்கும். அவற்றை மட்டும் பார்த்தால் அவர்களது வரலாற்று ஆளுமை என்பது புரியாது, ஏனெனில் ஒரு மக்கள் தொகுதியின் வரலாறு உருக்கொள்ளும்போது அவர்கள் அதில் காரணியாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் வடிவில் சமூக ஆற்றல் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்று கருதினார் ஹெகல்.
தமிழ் மொழி சார்ந்த ஈராயிரம் ஆண்டுக்கும் முற்பட்ட பண்பாட்டு சேகரத்தின் உள்ளுறை ஆற்றல் என்பது அதற்கான வரலாற்றை வடிவமைக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. அந்த திறன் ஒரு குறிப்பிட்ட நபரின் வடிவில் இயக்கம் கொள்கிறது. அவரால் அந்த மக்கள் தொகுதியின், சமூகத்தின் வரலாறு தன்னை வடிவமைத்துக் கொள்ளத் தேவையான தலைமையினை வழங்க முடிகிறது. இதுதான் வரலாற்று ஆளுமையின் அடையாளம்.
இந்த அடிப்படயில்தான் நாம் காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் என அனைவரையும் பார்க்க வேண்டும். அவர்களது அன்றாட செயல்பாடுகளில், அரசியல் முரண்களில் எத்தனையோ சர்ச்சைக்குறிய நிலைபாடுகள் இருக்கலாம். தவறான முடிவுகள் கூட இருக்கலாம். சமரசங்கள், பலவீன ங்கள் என பலவற்றைக் கூற இயலலாம். இத்தகைய ஆளுமைகளே ஒருவருக்கொருவர் முரண்பட்டு இயங்கியிருக்கலாம். ஆனாலும் அனைவருமே வரலாற்று ஆற்றல்களின் வெளிப்பாடுகள் என்றுதான் நாம் கருத வேண்டும். ஏனெனில் அவர்கள் செயல்கள் மிகப் பரவலானது, அருவமானதுமான சமூக ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து வரலாற்றுப் பாதைகளை வடிவமைத்தன என்பதுதான் முக்கியமானது.

கலைஞர் வடிவமைத்த வரலாறு
தொன்மையான தமிழ் மொழி தன் ஆற்றலை கலைஞர் மூலம் வெளிப்படுத்தியதுதான் அவரது அனைத்துச் சாதனைகளுக்கும் அடிப்படை எனலாம். அதனால்தான் அவர் தமிழ்த்தாயின் தலைமகன் என்றெல்லாம் போற்றப்படுகிறார். யார் வேண்டுமானாலும் ஒரு கட்சித் தலைவராகலாம்; ஆட்சிக்குக் கூட வந்துவிடலாம். ஆனால் கலைஞர் போல கருத்தோவியங்களை மொழியில் செதுக்கித் தர ஒரு ஆளுமை தோன்றுவது மிக, மிக அரிதான நிகழ்வாகும். அதிலும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவிலிருந்து தோன்றி, பள்ளியில் சேர்வதற்கே போராட வேண்டியிருந்த ஒருவர் ஒட்டுமொத்த சமூகத்தை வழி நட த்தும் இடத்திற்குபெற்ற ஏற்றம் என்பது வரலாற்றின் ஆகச்சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று எனலாம்.
கலைஞர் போல தினம் தோறும் கட்சி உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி கருத்துக்களை பகிரும் தலைவர்களைக் காண்பது அரிது என்றால், அதன் மூலம் அவர் கட்சியை அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து கட்டிக் காத்தவிதம்தான் முக்கியமானது. அவர் தி.மு.க தலைமையேற்ற நேரம் இந்தியாவில் கருத்தியல் முரண்கள் தீவிர வடிவமெடுத்த காலம். காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளந்தது. கம்யூனிஸ்டு கட்சியும் பிளவை சந்தித்தது. நக்ஸல் இயக்கம் பரவத் தொடங்கி இருந்தது. வலதுசாரி சிந்தனைகளும், கட்சிகளும் ஆங்காங்கே வேரூன்ற முயன்று கொண்டிருந்தன. கலைஞர் கட்சியைக் கொந்தளிக்கும் கடலில் எந்த பாறையின் மீதும் மோதாமல் கப்பலைச் செலுத்தும் மாலுமியைப் போல திறம்பட நடத்திச் சென்றார்.
அவரது தனித்துவம் கருத்தியல் மோதல்கள் ஒரு புறம், நடைமுறை அரசியல் சவால்கள் ஒரு புறம், முரணரசியல் மோதல்கள் மற்றொருபுறம் என அனைத்தையும் சரியான விதத்தில் எதிர்கொண்டதுதான். இந்திரா காந்தி, காமராஜர், ராஜாஜி, சோ ராமசாமி என யாராக இருந்தாலும் தன்னுடைய நிலையிலிருந்து உறுதிப்பாட்டுடன் அவரால் உறவு கொள்ளவும், முரண்படவும் முடிந்தது. மாநில சுயாட்சி, சமூக நீதி, மக்கள் நல அரசு ஆகிய இலக்குகளை நோக்கி தொடர்ந்து இயங்கவும் முடிந்தது. பகுதி நலன்கள், கட்சி நலன்கள் ஆகியவற்றைக் கடந்த ஒட்டுமொத்த சமூக நலன் குறித்த விரிந்த பார்வை இருந்தால்தான் இப்படியான தலைமைத்துவத்தை சாதிக்க முடியும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய, ஜாதீயமும் ஆணாதிக்கமும் ஊறிப்போன, கல்வியறிவு பரவாத சமூகத்தில் பகுத்தறிவின், முற்போக்கு சிந்தனையின் விதைகளை ஊன்றி கட்சி அமைப்பினை கட்டிக் காப்பது என்பது சுலபமல்ல. நாள்பட்ட நோயினை மருந்து கொடுத்த உடனேயே குணப்படுத்த முடியாது. அதனால் மருத்துவர் சரியில்லை என்று கருதினால் நோய் குணமேயாகாது. தமிழ்நாட்டில் கலைஞர் மீதான விமர்சனங்கள் இப்ப டித்தான் வைக்கப்பட்டன. இன்றும் தி.மு.க மீது அப்படித்தான் வைக்கப் படுகின்றன. தி.மு.க-விற்கு மாற்றாக ஆட்சிக்கு வருபவர்கள் மட்டும் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடுகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. ஆனால் தி.மு.க-வை மட்டும் கூடுதலாகக் குறை சொல்வது என்பது தமிழ்நாட்டில் பலருடைய வினோத பழக்கம்.

கலைஞர் உருவாக்கிய வரலாற்று வழித்தடம்
திராவிடத் தமிழர் என்ற வரலாற்றுத் தன்னுணர்வை தி.மு.க உருவாக்கியது என்றும், கலைஞர் அந்த தன்னுணர்வை மங்கிவிடாமல் காப்பதையே வரலாற்று வழித்தடமாகக் காட்டினார் என்பதும் முக்கியமானது. இதைச் சொல்லும்போது சிலர் திராவிட த் தமிழர் என்ற தன்னுணர்வு ஒருபடித்தானது, அனைத்து மக்களும் அந்த அடையாளத்தை ஏற்கிறார்களா என்றெல்லாம் விதண்டாவாதம் பேசுகிறார்கள்.
காந்தியும், நேருவும் உருவாக்கிய இந்தியத் தேசியத் தன்னுணர்வு என்பதை மட்டும் அனைத்து மக்கள் பிரிவினரும் ஒருபடித்தானதாக ஏற்றுக்கொண்டுவிட்டார்களா என்பதை சிந்திக்க வேண்டும்,. ஒரு கருத்தாக்கம், உருவகம் சமூகத்தில் முதன்மை பெரும்போது அது வரலாற்று விசையைக் கைக்கொள்கிறது. அதற்கு முரண்படும் சக்திகளும் அந்த விசையினால் இயக்கப்பட்டு பயணிப்பது தவிர்க்க முடியாதது. அதுவே முரணரசியலின் ஊற்றுக்கண்ணாக மாறுகிறது. மக்களாட்சியில் சமூக முழுமை என்பது முரணற்ற முழுமையல்ல. அது முரண்களின் களமாகவே வடிவம் பெரும். அதனைத்தான் முரணரசியல் வடிவமைப்பு, Formations of the Political என்று கூறுகிறோம். முதன்மை பெரும் கருத்தாக்கம் சமூக முழுமையை கட்டமைக்கும் போதுதான் அதனுள் முரணரசியல் வடிவம் பெறும்.
முரணரசியலில் பல்வேறு கட்சிகளின் அணிசேர்க்கைகள் மாறி, மாறி நடக்கலாம். அந்தந்த சூழலுக்கேற்ப கூட்டணிகள் அமையலாம். அதெல்லாம் வரலாற்று வழித்தடத்தை மாற்றி விடாது. இதனை நிரூபித்தவரே கலைஞர். அவர் 1999-2004 ஆண்டுகளில் பாஜக-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டார் என்று ஓயாமல் பேசுபவர்கள் உள்ளார்கள். அது ஏன் நிகழ்ந்தது என்பதை பேசமாட்டார்கள். பல நிகழ்வுகளை சிந்தித்துப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.
உதாரணமாக 1989-ஆம் ஆண்டு அமைந்த தி.மு.க ஆட்சி இலங்கை ஆயுதக்குழுக்கள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கலைக்கப்பட்டது. ஆளுனர் மூலமாக ஒன்றிய ஆட்சியே நடந்தது. ஒன்றிய ஆட்சியில் நடந்த 1991 தேர்தலின் போது ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது ஒன்றிய அரசுதானே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்? ஆனால் தி.மு.க அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. தேர்தலில் தி.மு,க பெரும் சரிவை சந்தித்தது. தி.மு.க ஆட்சியிலிருந்து இந்த துயர சம்பவம் நடந்திருந்தால் அதனை பொறுப்பாக்குவது நியாயம். ஆட்சியைக் கலைத்துவிட்டு அதன் பின்னரும் தி.மு.க-வை பொறுப்பாக்குவது எப்படி நியாயமாக இருக்கும் என்பதே கேள்வி.
ராஜீவ் காந்தி அனுதாப அலையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அவராகவேதான் பல கோளாறுகளைச் செய்து மக்களின் கடும் அதிருப்தியை சந்தித்தார். அதற்கு அடுத்த 1996 தேர்தலில் காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தபோது, மூப்பனார், சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினர். தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியும் ஒன்றியத்தில் தி.மு.க பங்கேற்ற ஐக்கிய முன்னணி ஆட்சியும் 1996 தேர்தலின் விளைவாக உருவானது. இரண்டே ஆண்டுகளில் தி.மு.க ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெறக்கூடாது என்று சொல்லி காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டது. 1998 தேர்தலில் ஜெயல லிதா பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். முதன்முறையாக பாஜக ஆட்சி ஒன்றியத்தில் வாஜ்பேயி தலைமையில் உருவானது. ஜெயல லிதா தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியை அகற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்தார். அதனை வாஜ்பேயி செய்ய மறுத்தபோது ஆதரவை விலக்கிக் கொண்டு, காங்கிரசுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். தி.மு.க-வை தனிமைப்படுத்த வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்று பல்வேறு சக்திகள் இணைந்து இயங்கின. இந்தச் சூழலில்தான் பாஜக-வுடன் கூட்டணி வைக்க தி.மு.க நிர்பந்திக்கப்பட்டது.

கலைஞர் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தை உருவாக்கிய பின்னரே வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றார். அப்படியும் மதவாதம் தீவிரமாக தலைதூக்கிய நிலையில், மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 2004-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் பங்கேற்றார். இந்த கூட்டணி மாறுபாடுகளால் தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கைகளோ, வரலாற்று வழித்தடமோ எந்தவகையிலும் மாறிவிடவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் கட்சியை தேர்தலில் வெல்லச்செய்வது இந்த மாறுதல்களால் பல சவால்களை சந்திக்கவே செய்தது.
அனைத்து சவால்களையும் கடந்து, தான் உருவாக்கிய செயல்படுத்திய திட்டங்களால் தமிழ்நாட்டின் சமூக அமைப்பை தொடர்ந்து மேம்படுத்திக் காட்டினார் கலைஞர். ஒவ்வொரு தி.மு.க ஆட்சியும் தமிழ்நாட்டின் மேன்மைக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியது. கன்னியாகுமரியில் நெடுந்தோங்கி நிற்கும் ஐயன் வள்ளுவர் சிலைபோல தமிழ் பண்பாட்டினை நிலைநிறுத்திக் காட்டியது. இனி வரும் காலங்களிலும் கழகம் அவ்வழியிலே தொடரும், மீண்டும் வெற்றி வாகை சூடும் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
