திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவிக்கும் பிரச்சாரம் கூட்டம் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இன்று (ஜூன் 1) நடைபெற்றது.
அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மருத்துவரணிச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், “பிரதமரைச் சந்தித்தால் பின்னர் செய்தியாளர்களைச் சந்திப்பதுதான் வழக்கம். ஆனால் முதலமைச்சர் விஜயோ செய்தியாளர்களை சந்திக்காமல் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பினார்.
தவெக தலைவர் விஜயைத் மக்கள் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர் திருச்சியில் முதல்வராகப் பேசினாரா அல்லது தவெக தலைவராகப் பேசினாரா என்ற குழப்பம் நிலவுகிறது.
அவர் பிரச்சாரத்தின்போது பேசிய அதே போன்றதொரு பேச்சையே தற்போதும் பேசியிருக்கிறார்.
‘திருமண மேடையில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்கிறார். திருமண மேடை என்பது சுயமரியாதை மேடைதான். எங்களுடைய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துத் திருமண மேடைகளும் எங்களுடைய பிரச்சார மேடைகள்தான்.
ஆறு மாத காலம் நேரம் தருவதாகக் கூறிவிட்டு இப்போதே எதிர்க்க ஆரம்பித்துவிட்டீர்கள்’ என்று விஜய் கூறியிருக்கிறார். பிரச்சாரத்தின்போது பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துவிட்டு, தற்போது எதையும் செயல்படுத்தாமல் இருக்கிறார் விஜய்.
ஒரு மாத காலத்தில் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள், கொலை மற்றும் கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன.
சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. சோபா மாடல் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களும் இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து வருகிறார்கள். வெளிப்படையான குதிரை பேரமே நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பது திராவிட மாடல்தான்.
ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாமா, வேண்டாமா என்று பாஜக. பிரதமர் மோடியிடம்அனுமதி வாங்கிக் கொண்டு வருகிறீர்கள். மக்கள் சார்ந்த உரிமை, மாநில உரிமை, தமிழ் ஆகியவற்றிற்காகக் குரல் கொடுப்பது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.
ஒரு முதலமைச்சராக மாவட்டங்களுக்குச் செல்லும்போது மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து ரசிகர் மனப்பான்மையுடன், ரசிகர் தன்மையோடு விஜய் பேசியிருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது.
இன்றும் கூட விஜய் தான் ஆட்சியில் இருப்பதை மறந்துவிட்டு, இன்னும் திமுகதான் ஆட்சியில் இருப்பது போன்று பேசி வருகிறார்.
மேகதாது விவகாரத்தில் எந்தவொரு தெளிவான நிலைப்பாட்டையும் தெரிவிக்காமல், மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறார் விஜய். விஜய் முதலில் முதல்வர் மோடுக்கு மாற வேண்டும். திமுக ஆளும் கட்சியாக இருப்பது போல திமுகவை விமர்சிப்பது, விஜய்யும் பொறுப்பை தட்டிக் கழிப்பது போல உள்ளது. அது பூமராங்” என்று கூறினார்.
