திருச்சியில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தங்களது கட்சியின் எம்எல்ஏக்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெக-வை ஆதரிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இன்று திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சி சென்றார். சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தூய வளனார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார்.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய்க்குத் தவெக நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துச் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ கூறியதாவது:
“எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் துரதிர்ஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றுவிட்டனர். அதனால், இப்போது தவெக-வுக்கு நேரடியாக ஆதரவு கொடுக்கக் கூடிய சூழல் எங்களுக்கு இல்லை. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட பிற தோழமைக் கட்சிகள் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்கள் கொடுத்த தீர்ப்பின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பெரும்பான்மை பெற்ற விஜய்யை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். அதுதான் முறை. அவர்களுக்குக் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும்; அவர்கள் படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புவோம்.
முதலமைச்சர் விஜய் சிறு, குறு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், அதனைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி முழுமையாகச் செய்யவில்லை எனச் சிலர் விமர்சிக்கின்றனர். தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகு இது குறித்த கூடுதல் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
இதற்கு முன்பு இருந்த திமுக அரசு கூட மகளிர் உரிமைத் தொகையை உடனே அமல்படுத்தவில்லை. அதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் மகளிர் உரிமைத் தொகையைக் கொடுத்தார்கள். அன்றைக்கும் இதே நிதி நிலைமைதான் பிரச்சினையாக இருந்தது, கடன் சுமை இருந்தது. அதன்பிறகே 1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுத்தனர். விஜய்யும் இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்; உடனடியாக அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றச் சொன்னால் எப்படி?
நாங்கள் தனி இயக்கம். திமுக கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்று கேட்கிறீர்கள்; திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து எங்கள் கட்சியின் பொதுக்குழுவில்தான் இறுதி முடிவு எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து மதிமுக-வும் வெளியேறுகிறது என்பதையே அவரது இந்த உரை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
