தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். முதலமைச்சராகப் பதவியேற்றது முதலே அவர் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ‘கோட் சூட்’ அணிந்து வருகிறார். தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் இதே உடையில் பங்கேற்பது குறித்துச் சமூக வலைதளங்களில் விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்து வந்தன.
இந்நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் இன்று (ஜூன் 1) பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், தான் தொடர்ந்து ‘கோட் சூட்’ அணிந்து வருவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “புதுசாக நாம் சூட் எல்லாம் போட்டு வருகிறோம் இல்லையா, அதைப்பற்றிக் கூட நிறைய பேர் விமர்சிக்கிறார்கள். ஏன் நாமெல்லாம் கோட் சூட் போடக்கூடாதா? அதிகாரம் செய்கிறவர்களும், ஆதிக்கச் சக்திகளும் மட்டும்தான் கோட் சூட் எல்லாம் போட வேண்டுமா என்ன? அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது.
நான் என்ன கலர் கலராகவா கோட் சூட் போட்டு வருகிறேன்? இரண்டே இரண்டு கலர்தான். அது நம் எல்லோர் மனதையும் போல பிளாக் அண்ட் ஒயிட். எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் ஒயிட்டாக (வெளிப்படையாக) இந்த விஜய் இருப்பான் என்பதைக் காட்டுவதற்காகத்தான் அந்த உடை. அந்தப் பிளாக்கில் இருக்கிற கருப்பு கூட யாரைக் குறிக்கும், எதைக் குறிக்கும் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை; அது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
எல்லாவற்றிற்கும் இதுபோல விளக்கம் சொல்லிக்கொண்டு, நசநசவென்று பேசுவது நம்ம ஸ்டைல் கிடையாது. உங்களுக்கே தெரியும், அதிகபட்சமாக எல்லா மீட்டிங்கிலும் 20 நிமிடம் மட்டுமே நான் பேசி இருக்கிறேன். அதனால் இப்போது மக்கள் என்னிடம் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘விஜய்… நீ எங்களுக்காக உழைக்க வந்திருக்கிறாய், அந்த வேலையை மட்டும் பார். உன்னைப் பற்றிப் பேசுகிறவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்கிறார்கள்,” என்று பேசினார்.
