திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார் விஜய்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோ மேற்கொண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் கல்லூரிக்கு வந்தடைந்தார்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சார பேருந்தின் மேற்கூரை மீதி ஏறி மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் விஜய். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தொடர்ந்து, பேசிய அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த், ’மக்கள் எனக்காக வாக்களிக்கவில்லை. முழுக்க முழுக்க 234 தொகுதிகளிலும் தலைவர் ஒருவருக்காக மட்டும் தான் வாக்களித்திருக்கிறார்கள். அதற்கு நாங்கள் உண்மையாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம். முதல்வர் சொல்வதெல்லாம் மக்கள் சேவை செய்வதுதான் உங்களது வேலையாக இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தப்பு செய்யக்கூடாது என்று சொல்லும் ஒரே முதல்வர் நமது தலைவர் தான். நான் எம்.எல்.ஏ., அமைச்சராக இருக்கலாம் ஆனால் நான் என்றும் தலைவரின் தொண்டனாக கடைசி காலம் வரை இருப்பேன்” என்று கூறினார்.
