அதிமுகவின் தோல்வி மற்றும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், அதிமுக வர்த்தக அணி நிர்வாகி மகேந்திரன் (KAS Mahendran) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவில், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதை விமர்சித்துள்ளதுடன், இதற்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,”இந்தப் பதிவு தவெக கட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கானது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், நீங்கள் வெற்றி பெற்ற 108 எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டும். ‘எங்களுக்கு ஆட்சி அமைக்கப் போதுமான எம்எல்ஏக்கள் கிடைக்கவில்லை, நாங்கள் உங்களை நம்பி வந்திருக்கிறோம்; எனவே, 234 தொகுதிகளிலும் மீண்டும் நிற்கிறோம், எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று மக்களிடம் கேட்டுப் பெரும்பான்மையை நிரூபியுங்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் அளித்த 47 சட்டமன்ற உறுப்பினர்களை ஒவ்வொருவராக ராஜினாமா செய்ய வைத்து, உங்கள் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி செய்தால், தமிழக மக்களும் இளைஞர்களும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். இதற்கான விளைவை நீங்கள் விரைவில் அனுபவிப்பீர்கள்.
மக்கள் மாற்றத்தை விரும்பித்தான் உங்களுக்கு வாய்ப்பளித்தார்கள். நீங்களும் திமுக மற்றும் அதிமுகவிற்கு நாங்கள்தான் மாற்று என்று கூறினீர்கள். ஆனால், திமுகவோ, அதிமுகவோ செய்யாத அனைத்துத் தில்லுமுல்லு வேலைகளையும் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கான விளைவைச் சந்திப்பீர்கள்; தவெக அழிவதைப் யாராலும் தடுக்க முடியாது. என்னைப் போன்ற பல இளைஞர்களுக்கு உங்களைப் பிடிக்கும். ஆனால், விஜய் இப்படிப்பட்ட கேவலமான, கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தமிழக மக்களும் இளைஞர்களும் உங்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” இவ்வாறு அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதிமுகவிலிருந்து தவெகவிற்கு எம்எல்ஏக்கள் மாறுவது தொடர்பான அரசியல் நகர்வுகள் குறித்துப் பரவலான விவாதங்களும் கடும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
