தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சிக்குள் முறைகேடுகள் நடந்துள்ளதாக எம்பி ஜோதிமணி பதிவிட்ட கருத்து, கோவையில் அக்கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு இடையே சர்ச்சையாக மாறியுள்ளது.
ஜோதிமணி எம்பியின் வேட்பாளர்கள் தேர்வு குறித்த பதிவுக்கு, சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீநிதி, “கருத்து வேறுபாடு இருந்தால் அதைக் கட்சித் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும்; பொதுவெளியில் பேசுவது நேர்மையாக வாய்ப்புப் பெற்றவர்களின் மனதைப் பாதிக்கிறது” என எதிர்வினையாற்றினார். இதற்குத் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி, “ஸ்ரீநிதி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்தவர். பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்னரே உண்மைத் தன்மைகளை மறைத்துக் காங்கிரஸில் சீட் வாங்கினார். தற்போது அவர் கட்சியிலிருந்தும் விலகிவிட்டார்” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். காயத்ரியின் இந்த அதிரடிக் குற்றச்சாட்டுக்கு, கோவை சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் கண்ட ஸ்ரீநிதி, தான் கட்சியிலிருந்து விலகவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிதி கூறியதாவது, “சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிச் சிலர் தொடர்ந்து திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். காசு கொடுத்துச் சீட் வாங்கியதாகக் கூறப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளால் எனக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நான் ஒரு முதல் தலைமுறை அரசியல்வாதி. காங்கிரஸ் தலைமை, திறமையான வளர்ந்து வரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே எனக்குச் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்ட ஆலோசனைக் கமிட்டிகள் கூடி, பலமுறை பரிசீலித்த பின்னரே தகுதியானவர்களுக்குப் பதவிகளும் சீட்டுகளும் வழங்கப்படுகின்றன. அப்படி இருக்கையில் பணம் கொடுத்துச் சீட் வாங்கியதாகக் கூறுவது என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல; அது ஒட்டுமொத்தமாகத் தலைவர் ராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் தலைமை மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இது ஒட்டுமொத்த தலைமையையும் அசிங்கப்படுத்தும் செயலாகும்.
பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு, அவர் எனது கல்லூரியின் சீனியர் என்ற முறையில் ஒரு பொதுவெளியில் மட்டுமே அவரைச் சந்தித்தேன். அதனைத் தவறான நோக்கத்தில் பேசுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மேலும், தேர்தலில் பல்வேறு உள்ளடி வேலைகளுக்கு மத்தியிலும், கட்சி நிர்வாகிகளின் உழைப்பால்தான் இரண்டாம் இடத்தில் நல்ல வாக்குகளைப் பெற்றுள்ளேன். நான் காங்கிரஸிலிருந்து விலகவில்லை, தொடர்ந்து கட்சியிலேயே நீடித்து வருகிறேன்.
கட்சிக்குள் இருக்கும் சில நிர்வாகிகள் சுய விளம்பரத்திற்காகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடுவேன் என்ற பயத்திலும், பொறாமையிலும் இது போன்ற வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஜோதிமணி எம்.பியின் பதிவுக்கு நான் பதிலளித்தது யாருக்கும் எதிராகக் குற்றம் சாட்டுவதற்காக அல்ல. தேர்தலில் ஒட்டுமொத்தமாகப் பண வியாபாரம் நடந்தது என்று பொதுவெளியில் கூறுவது எங்களைப் போன்ற இளம் வேட்பாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாலேயே அதற்கு விளக்கம் அளித்தேன்.
கடந்த ஒரு வார காலமாக என் மீதும், எனது குடும்பத்தின் மீதும் தொடர்ந்து கண்ணியமற்ற முறையில் அவதூறுகள் பரப்பப்படுவதால், இந்த அரசியலை விட்டே ஒதுங்கி, கட்சியை விட்டு விலகிவிடலாமா என்ற எண்ணம்கூட எனக்கு ஏற்படுகிறது. தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு எனக்கு எதிராக உள்ளடி வேலைகளில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஒரு தனிக் கமிட்டி அமைக்கப்பட உள்ளது. அதற்கான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் கேட்கப்பட உள்ளன.
வதந்திகளைப் பரப்புவதை நிறுத்திவிட்டு மக்கள் நலனுக்கான அரசியலைச் செய்ய வேண்டும். என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்குத் தொடரப்போகிறேன்.” என எச்சரித்துள்ளார்.
ஸ்ரீநிதியின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு, கோவை மாவட்ட காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
