திமுகவின் தோல்விக்கான 2 காரணங்கள்.. மு.க.ஸ்டாலின் கேள்விக்கு மதபோதகர் மோகன் சி லாசரஸ் அதிரடி பதில்!

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கான இரண்டு முக்கிய காரணங்களை மத போதகர் மோகன் சி. லாசரஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

“தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகச் செயலாற்றிய, நல்ல பணிகளைச் செய்த மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததால், அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளவும், மக்களின் மனதில் இருப்பதைப் புரிந்து கொள்ளவும், நீங்கள் ஒரு குழு அமைத்து எல்லாரிடமும் கருத்துகளைக் கேட்கத் தீர்மானித்தது மிகவும் வரவேற்கத்தக்கது.

ADVERTISEMENT

பொதுமக்களும் தங்களுடைய மனதில் உள்ளதைத் தெரிவிக்கலாம் என்று சொன்னதால், நான் எந்தக் கட்சி சார்பும் இல்லாதவனாக, பொதுமக்கள் சார்பாகச் சில கருத்துகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என் மனதில் தோன்றிய இரண்டு காரியங்களை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

டாஸ்மாக் கடைகள்:

தமிழ்நாட்டில் மதுபானத்தினால் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் பேர் தினசரி குடிகாரர்களாக மாறிவிட்டார்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதியே வேதனையோடு சொன்னது சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது நிறைய குற்றங்கள் தமிழ்நாட்டில் பெருகக் காரணமாக இருப்பது இந்த மதுபானக் கடைகள் என்று எல்லா அரசியல் விமர்சகர்களும் தெளிவாகப் பேசியிருப்பது உங்களுக்கும் தெரியும். இந்த மதுபானத்தினால் நிறைய மரணங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் விதவைகள் பெருகியிருக்கிறார்கள். தகப்பன் இல்லாத குழந்தைகள் பெருகியிருக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.

ADVERTISEMENT

மேலும் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கும், நிறைய விபத்துகளுக்கும் இந்த மதுபானமே காரணம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி நிறைய விபத்துகளும் மரணங்களும் நடைபெறுகின்றன. பாலியல் சம்பந்தமான குற்றங்கள் பெருகுவதற்கும் இந்த மதுபானமே காரணம். இந்த மதுபானப் போதை தமிழ்நாட்டில் நிறைய பேரைப் பாதித்துவிட்டது. கண்ணீர் விட்டு அழுகிற பெண்களை நான் ஏராளமாகப் பார்த்திருக்கிறேன். இந்த மதுபானத்தின் காரணமாகக் குடும்பங்கள் உடைந்து பாழாகிக் கொண்டிருக்கின்றன. பிள்ளைகளின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருப்பதை கண்ணீர் விட்டு அழுது சொல்கிறார்கள்.

இதையெல்லாம் மூடினால் சரியாகிவிடுமா என்றால், கொரோனா காலத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டபோது கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமானோர் மதுபானத்தை விட்டு வெளியே வந்துவிட்டார்கள். ‘இப்போது எனக்குக் குடிக்க வேண்டும் என்று தோன்றவில்லை’ என்று பேட்டி எல்லாம் கொடுத்தார்கள். ஆனால் மறுபடியும் கடை திறந்த உடனே திரும்பக் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, அது மூடப்பட்டால் நிறைய பேர், கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமானோர் உடனே அதிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். இதை மற்றவர்கள் உங்களிடம் சொல்லுவார்களோ என்னவோ தெரியாது. நான் மக்களோடு பழகி, அவர்களின் கருத்துகளை அறிந்ததாலும், அவர்களின் இருதயத்தின் வேதனையை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். இதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.

ADVERTISEMENT

லஞ்சம்:

எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் லஞ்சம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது, குறிப்பாக ஏழை மக்களுக்கு. ஒரு காலத்தில் அரசாங்க அலுவலகத்துக்குப் போனால், நம்மிடம் ஏதேனும் தவறு இருந்தால் அதைச் சரிசெய்வதற்கு லஞ்சம் கேட்பார்கள். ஆனால் இப்போது, எந்தத் தவறும் இல்லாமல், அரசு சட்டத்தின்படி அனைத்து ஆவணங்களையும் சரியாகக் கொடுத்தாலும் லஞ்சம் கேட்கும் நிலை வந்துவிட்டது.

முன்பு பத்து சதவீதம் பேர் மட்டுமே லஞ்சம் வாங்கினார்கள் என்றால், இப்போது பத்து சதவீதம் பேர்தான் நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள். தொண்ணூறு சதவீதம் பேரும் லஞ்சம் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது. நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் பலரிடம் பேசும்போது, ‘ஏன் இந்தத் தோல்வி வந்தது?’ என்று கேட்டதும், ‘லஞ்சம், லஞ்சம், லஞ்சம்’ என்றே பதில் வருகிறது. நேர்மையான காரியத்திற்குக் கூட இவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை. அதில் அரசியல்வாதிகளும் பின்னணியில் இருக்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். இதைக் கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது ஒரு முக்கியக் காரணம் என்று நான் கருதுகிறேன்.

இது பொதுமக்களின் கருத்து. நான் ஏராளமான மக்களோடு — கிராம மக்கள், நடுத்தர மக்கள், படித்தவர்கள் எனப் பலரோடு — பழகியதாலும், இதை அறிந்ததாலும் உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்து இதைச் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share