தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. தேர்தலுக்கு பின் ஆட்சி அமைத்த தவெக அரசு கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெற்றிருக்கும் குறு விவசாயிகளுக்கு முழுமையாகவும் (100%), அதற்கு மேல் கடன் பெற்றிருக்கும் சிறு விவசாயிகளுக்கு அவர்களின் கடன் தொகையில் 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும் என வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் “பச்சைத்” துரோகம் என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வராத ‘ரிசர்வ் வங்கி விதிமுறைகள்’, மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படிதான் “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த ஆண்டு 28.11.2025 அன்றே வழங்கப்பட்டுள்ளது.
அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்துகொண்ட பின்னர்தான் 16.4.2026 அன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்துகொண்டே வாக்குறுதியைத் தந்து, “வாக்கு அறுவடை“ முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும்.
எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் நிதிநிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாகச் சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் “பச்சைத்” துரோகமாகும்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
