தவெகவில் (TVK) முதல்வர் விஜய் என்றாலும் நிழல் முதல்வராக இருப்பவர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாதான் என்று திமுக (DMK) முன்னாள் அமைச்சரான எஸ்.எஸ்.சிவசங்கர் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ. பேசியதாவது: கொளத்தூர் தொகுதி கொடுத்திருக்கின்ற தீர்ப்பு என்பது திமுக தொண்டர்கள் ஒவ்வொருத்தருடைய அடிமனதிலும் மாறாத வடுவாகப் பதிந்திருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை நாம் இழந்திருக்கிறோம், இப்படிப்பட்ட முதலமைச்சருடைய… மீண்டும் அவர் ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பை நாம் மறுத்திருக்கிறோம் என்கின்ற எண்ணம் இன்றைக்கு பொதுமக்களில் ஒரு சாராரிடத்திலே ஏற்பட்டிருக்கிறது.
மிகப் பெரிய ஆட்சி மாற்றம் இல்லை
ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதால் அது மிகப்பெரிய மாற்றம் அல்ல. ஒரு 30, 35 சதவீதம் பேர் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். அதிலே ஒரு 20 சதவீதம் பேர் அவருடைய (விஜய்) ரசிகர்களாக இருந்தவங்க. அவங்க ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று வழக்கமாக ஒவ்வொரு புதிய கட்சி உருவெடுக்கின்ற பொழுதெல்லாம் வாக்களிக்கின்றவர்கள். அது சீமான் வந்தாலும் அதுபோன்று பலரும் வந்தாலும் அவருக்கு வாக்களிக்கின்றவர்கள், இதிலே கூடுதலாக வாக்களித்திருக்கின்றார்கள்.
இந்த கடைசி நேர மாற்றம், குழந்தைகளை வைத்து பெற்றோரின் மனதை கரைத்து கொண்டு வந்த ஒரு மாற்றம்தான் கடைசி நேர மூணு நாட்களில் நிகழ்ந்த மாற்றமாக இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்தது.
எப்படி நிகழ்ந்தது மாற்றம்?
தன்னுடைய பின்தொடர்பவர்களாக வைத்திருந்த இன்ஃப்ளூயன்சர்னு சொல்லுவாங்க இல்லையா, அவங்களெல்லாம் விலைகொடுத்து வாங்கி, அவர்கள் மூலமாக ஒரு மாயை, ஆட்சி மாற்றம் வர வேண்டும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கு என்கின்ற செய்தியை கடத்தி கடத்தி, அதற்குத் தீர்வு விஜய் தான் அப்படிங்கிற அந்த எண்ணத்தை இளைஞர்களிடத்திலே, மகளிரிடத்திலே ஏற்படுத்தி தான் இந்த மாற்றம்.
45 வாக்கு சதவீதம் போயிருந்தால், ஒட்டுமொத்த மக்களே அவரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் 34, 35 சதவீதம் என்கின்ற பொழுது, அதிலும் கடைசி நேர ஒரு ஸ்விங்குபாங்க. அந்த ஒரு மாற்றம், அந்த வாக்களிப்பவர் மனதிலே ஒரு மாற்றம் வருகிறது. அது வந்திருக்கிறது.
நீடிக்காது.. நீர்க்குமிழி
இது நீடித்து நிலைப்பது அல்ல. இது ஒரு நீர்க்குமிழி போல. இப்ப ஒரு நீர்க்குமிழி வந்திருக்கு, அது பெருசாவது வெடிக்கும். அவ்வளவுதான்.
இதே வாக்குகளை அவர்கள் மீண்டும் வாங்க முடியாது என்கின்ற காரணத்தினால் தான், அதிமுகவில் இருக்கின்றவர்களை எல்லாம் வலைவீசி பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவங்க ஆளுங்கட்சி ஆயிட்டாங்க. ஆளுங்கட்சியாகி ஆட்சி அமைச்சாச்சு. ஆட்சி அமைத்த பிறகு தேவையான எம்எல்ஏக்களுக்கு அதிமுகவில் இருக்கிற எம்எல்ஏக்களை பதவியை ராஜினாமா பண்ண வச்சு, மீண்டும் அவர்களை தேர்தலில் போட்டியிடுவது என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்னு புடிச்சிட்டு போய் சேர்த்திருக்காங்கன்னா, அதற்கு காரணம் அவங்ககிட்ட அமைப்பு இல்லை. அந்த அமைப்பை உருவாக்குவதற்கு எப்படியாவது பண்ணனும் அப்படிங்கிறதுக்கு தான்.
அதிமுக என்பது இனி தவெக
அதிமுக என்பது இனி தவெகதான் என்று அப்படி ஒரு மாயை மனசில், அவர்கள் மனதிலே விதைத்து, அதிமுகவை கரைத்து, அதன் மூலமாக தவெகவை வலுப்படுத்தலாம் என்கின்ற எண்ணம் தான். காரணம், இதே ஓட்டு சதவீதம் தொடராது என்பது அவங்களுக்கும் தெரியும்.
இன்னும் சொல்லப்போனால், எந்த ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்து இந்த மக்கள் மனதை ஏமாற்றினார்களோ, இன்றைக்கு அந்த ஆயுதம் அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. இன்றைக்கு சமூக வலைதளங்களில் வந்து புதிதாகப் பேசுகிற இளைஞர்கள், இளம்பெண்கள் பேசுகின்றவர்களை அதிகம் பார்க்க முடிகிறது. அவங்க யாரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்பவர்கள் இல்லை, திராவிட முன்னேற்றக் கழக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, இன்னும் சொல்லப்போனால் வெளியிலே வேலை, வெளிமாநிலத்தில் வேலை இருப்பவர்கள், வெளிநாட்டுல வேலை இருக்கிறவர்களும் பேசுகிறார்கள். இப்படி ஒரு ஆட்சி அமைந்திருக்கக் கூடாது. எப்படி இவர்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள் என்பதை எல்லாம் அவர்கள் பேசுகின்ற செய்தி தொடர்ந்து வர வர, இவர்களுக்கு எந்த அளவுக்கு இவங்க கிராஃப் மேல ஏறுச்சோ, அதே வேகத்தில் இப்பொழுது கீழே கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.
நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜூனா
’13 சீட்டும் ஜோக்கரா இருந்தா என்ன பண்றது?’ம்பாங்க. அது மாதிரி, அவங்க போட்ட அமைச்சர் எல்லாமே ஜோக்கரா இருக்குறாங்கன்னா, என்ன தான் பண்ணுவதுன்னு தெரியல.. தவெகவில் இன்னைக்கு யார் முதலமைச்சர்னா விஜய் இல்லை; ஆதவ் அர்ஜுனாதான். பின்னாடி இருந்து நிழல் முதலமைச்சரா இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றார் என்பது இன்றைக்கு பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது.
அதேபோல தான் இன்றைக்கு அவர்கள் அறிவிக்கின்ற திட்டங்கள், ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த திட்டங்களுக்குப் புதுசா பேர் வச்சு அறிவிக்கிறான். விவசாயக் கடன் சொல்லி விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் இன்றைக்கு எல்லோரும் பேசுகிற அளவிற்கு, விவாதிக்கிற அளவிற்கு போய்க்கொண்டிருக்கிறது. அதை முழுமையாகக் கொண்டு சேர்க்கின்ற பணிதான் நமக்கானது.
இந்தத் தோல்வியை திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் வேகமாக வருவதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் அமைந்திருக்கிறது. நாம் பார்க்காத தோல்வி இல்லை. 10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக நாம் கடந்து வந்தோம். நம்முடைய தலைவர், தளபதி அவர்களுடைய கடும் உழைப்பில் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். ஆனால், இன்றைக்கு ஒரு மாயையை ஏற்பாடு… ஏற்படுத்தி ஒரு ஊடக மாயஜாலத்தின் மூலமாக இந்த ஒரு குறைப்பிரசவ வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். இது முழு வெற்றி அல்ல. ஒரு குறைப்பிரசவ வெற்றி தான் அவர்கள் பெற்றிருப்பது. எனவே, இது நீண்ட நாள் உயிர் தங்காது. அதை இன்னும் என்ன மோசமான நிலைக்கெல்லாம் பார்க்க வேண்டுமோ, அதையெல்லாம் இன்னும் நாம் பார்க்கத்தான் இருக்கிறோம். இவ்வாறு சிவசங்கர் பேசினார்.
