அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா முதல் அமைச்சர்கள் பேச்சு வரை.. விஜய்யின் தவெக அரசு மீது இயக்குநர் அமீர் சரமாரி பாய்ச்சல்!

Published On:

| By Mathi

Director Ameer Press Meet on CM Vijay

முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான தவெக ஆட்சி மீது திரைப்பட இயக்குநர் அமீர் (Ameer) சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இயக்குநர் அமீர் கூறியதாவது: முதல்வர் விஜய் தனது கம்பர்ட் ஜோனில் (Comfort zone) இருக்கக்கூடும்; பொதுவெளிக்கு வரும்போது மீண்டும் கூட்டம் கூடும் என்ற சிந்தனை அவருக்கு இருக்கலாம். தற்போதைய அவருடைய அரசு நினைத்தால் அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடியும்; இது சரியா தவறா என்பதை அவருக்கு வாக்களித்த மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

சிங்கப் பெண் பாதுகாப்பு படை- உடன்பாடு இல்லை

சிங்கப் பெண் பாதுகாப்பு படை என்பதில் உடன்பாடு இல்லை. நீண்ட காலமாகப் போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்காததால் காவலர்களுக்குப் பணிச்சுமை அதிகமாகி, மன உளைச்சலுக்கு (Frustration) ஆளாகிறார்கள். லீவு கிடைக்காமல் கமிஷனர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயல்வதற்கும், மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கும் இதுவே காரணம் என்பதால் ஆள் சேர்ப்பதே முக்கியம்.

ஜனநாயகன் திரைப்படத்தில் என்ன பிரச்சனை என்பதை பேச வேண்டும். அநீதியைக் கண்டு பேசத் தயங்கக் கூடாது. இப்படத்தின் நாயகன் தற்போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் போது, படத்தில் என்ன நடந்தது என்பதை இயக்குனர் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

கல்வி சார்ந்த விஷயங்களை (பள்ளி திறப்பு, வெயில் தாக்கம்) பற்றிப் பேச வேண்டுமே தவிர, சினிமா ரிலீஸ் குறித்துப் பேசுவது பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுவது முறையல்ல.

ஆதவ் அர்ஜூனாவின் பொறுப்பற்ற பேச்சு

விவசாயத்தை விட விளையாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அமைச்சரின் பேச்சு “புரிதல் இல்லாத, பொறுப்பற்ற பேச்சு”. மனித வாழ்விற்கு நீர், நிலம், காற்று, உணவைத் தரும் விவசாயமே அடிப்படை.

ADVERTISEMENT

கரூர் உண்மை குற்றவாளி யார்?

41 பேரை பலி கொண்ட கரூர் சம்பவத்தின் உண்மை குற்றவாளி யார் என்பதைத் தமிழக அரசு புலனாய்வு செய்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் கொடநாடு சம்பவத்தை ஐந்து வருடங்களாகக் கண்டுபிடிக்காமல் கடந்து சென்றது போல இதையும் கடந்து விடக் கூடாது.

மதுபான கடைகளில் கூடுதல் வசூல்

தனிமனிதர்கள் செய்யும் குற்றங்களை எந்த ஒரு அரசாங்கத்தாலும் முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், தேர்தல் நேரத்தில் இதைப் பிரச்சார யுக்தியாகப் பயன்படுத்தி வாக்குகளைப் பெற்றுவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் குற்றங்களைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது தவறு.

டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு ₹10, ₹20 என்று வாங்குவது தவறு. அதை “நிர்வாகத்திற்காக வாங்கினார்கள்” என்று அமைச்சர்கள் நியாயப்படுத்துவது எந்த ஆட்சியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அமைச்சர்கள் பேசுவது தவறு

தற்போதைய அமைச்சர்கள் பலர் முதல்முறையாக அதிகாரத்திற்கு வந்திருப்பதால், எதையும் புரியாமல் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்; சுற்றுச்சூழல் துறையைத் சுற்றுலாத் துறை என்று தனக்குக் கொடுக்கப்பட்ட துறையையே ஒரு அமைச்சர் மாற்றிச் சொன்னது தவறு. ஒரு அமைச்சர் முறுக்கு பாக்கெட்டில் எக்ஸ்பைரி டேட் (காலாவதி தேதி) கேட்டது தவறு; இதெல்லாம் ஆர்வக் கோளாறிலும் புரியாமலும் செய்வது.

அழித்தொழிக்கப்பட வேண்டிய புல்லுருவிகள்

தேர்தல் நடந்து 21 நாட்களிலேயே 4 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியில் இணைந்தது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. இவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து, இடைத்தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார். இப்படியானவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய புல்லுருவிகள். இவர்கள் மீது ஏன் யாரும் வழக்கு போடவில்லை.?

தலைமை செயலகத்தின் கண்ணியத்தை குறைப்பதா?

தவெக கட்சி அலுவலகத்தில் நடக்க வேண்டிய புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தலைமைச் செயலகத்தில் நடந்தது தவறு; இது தலைமைச் செயலகத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல். இவ்வாறு இயக்குநர் அமீர் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share