அதிமுக பிளவின் பின்னணியில் இருக்கும் ரகசியக் கூட்டு; ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

Published On:

| By Mathi

Minister Nirmal Kumar Press Meet

அதிமுக (AIADMK) எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து சட்ட அமைச்சர் நிர்மல் குமார் (Nirmal Kumar) விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று ஜூன் 1-ந் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது: அதிமுகவில் பிளவு ஏற்பட்டதற்கான காரணங்களை அவர்களே தெளிவாகக் கூறியுள்ளனர். எடப்பாடி, ஸ்டாலின், உதயநிதி மற்றும் இன்னும் சில நபர்கள் இணைந்து, திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியை அமைப்பதற்கான சூழலைக் கொண்டுவர முயன்றதே இந்த பிளவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனை அங்குள்ள கட்சிக்காரர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு குடும்பங்கள் சேர்ந்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்ற இந்த நடவடிக்கை அதிமுக, திமுக, மற்றும் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் என யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால்தான் இந்த பிளவுகள் ஏற்பட்டு, பலர் கூட்டணியை விட்டு வெளியேறினர்.

ADVERTISEMENT

ஸ்டாலின் குடும்பமும், எடப்பாடி குடும்பமும் சேர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றதன் விளைவாகவே அத்தனைப் பிரச்சனைகளும் உருவாயின.

அதனால்தான், கட்சியை விட்டு வெளியே வருபவர்கள் மீது எவ்விதக் களங்கத்தைச் சுமத்தினாலும், இதுவே உண்மை என்று அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தங்களையும் தங்களது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் தலைவர்கள் மத்தியில், அவர்களை நம்பி அங்குள்ள தொண்டர்களோ, எம்.எல்.ஏ-க்களோ எவ்வாறு பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய சூழலில், எடப்பாடியையோ அல்லது ஸ்டாலினையோ நம்பி யாரும் கட்சியில் சேர முன்வருவதில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே இருவரும் இணைந்து ஆட்சி அமைக்க நினைப்பதாக மற்ற தலைவர்கள் கருதுகின்றனர். இதுவே அடிப்படைப் பிரச்சனையாக உள்ளது.

ADVERTISEMENT

இவற்றை விடுத்து, எவ்விதக் கடிதங்களை வழங்கினாலும் இதுவே அடிப்படையான பிரச்சனை ஆகும். தலைவர்களை நம்பி பயணிக்க முடியாது என்ற காரணத்தினாலேயே, அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்கின்றனர். இதில் எவ்விதத் தவறும் இல்லை. இந்த விவகாரத்தில் எங்கும், எப்போதும், எந்தவொரு குதிரை பேரமும் பேசப்படவில்லை. அவர்கள் தங்கள் தனிப்பட்ட முடிவின் காரணமாகவே வெளியே வந்து ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ஏன் வெளியே வந்தார்கள் என்பதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்ததே.

இதற்கு முன்பாக யாரும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றோ, கட்சியில் பிளவு வர வேண்டும் என்றோ நினைக்கவில்லை. ஆனால், இவர்களுடைய இத்தகைய முயற்சிகளுக்குப் பிறகே கட்சிகளுக்குள் பிளவுகள் உண்டாகின.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள், இரு தரப்பும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதை எவ்வாறு அனுமதிக்க முடியும் என்ற காரணத்தினாலேயே கூட்டணியை விட்டு வெளியேறின. பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவுடன் சேர்ந்து எவ்வாறு ஆட்சி அமைக்க முடியும் என்ற கேள்வியோடு, திமுக கூட்டணியில் இருந்த பல கட்சித் தலைவர்கள் வெளியே வந்தனர். இதுவே அடிப்படைப் பிரச்சனையாக நீடிக்கிறது. இந்தச் சூழலில் இருந்து அனைவரும் வெளியேறி ராஜினாமா செய்து வருகின்றனர்.

குதிரை பேரத்துக்கு அவசியமே இல்லை

குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்த முடிவையும் எடுக்கத் துணியும் தலைவர்களை நம்பி எவ்வாறு பயணிக்க முடியும் என்ற கேள்வியே அவர்களிடம் உள்ளது. இதில் எவ்விடத்திலும் பேரம் பேச வேண்டிய அவசியம் எழவில்லை. 120 பேரின் ஆதரவோடு, கூட்டணி பலத்தோடு ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தோளோடு தோளாக நின்று ஆதரவளிக்கின்றன. எனவே, பேரம் பேசுவதற்கான எவ்விதக் கட்டாயமும் இங்கு இல்லை. இது அவர்களின் தனிப்பட்ட முடிவாகும். நீதிமன்றத்திற்குச் சென்றால், அதனைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share