வைஃபை ஆன் செய்ததும், “சர சர சரவெடி கனவுல வெடிச்ச…நீ வெடிச்ச வெடிச்ச”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ, சரவெடியா வெடிக்கிறீங்க..
நாம எங்க வெடிக்கிறோம்.. நம்மை சுத்திதான் நிமிஷத்துகு நிமிஷம் என்ன என்னமோ வெடி வெடிக்கிறாங்க..
இன்றும் அதிமுக எம்.எல்.ஏ. ராஜினாமா
இன்னைக்கு கோட்டையில ஒரே பரபரப்பு.. அதிமுக எஸ்பி வேலுமணி டீம்ல இருந்து அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செஞ்சுட்டாரு… முதல்ல அவரு லெட்டரை சபாநாயகர் ஏத்துக்கலை.. கைப்பட ராஜினாமா செய்றேன்னு எழுதி கொடுத்ததுக்கு அப்புறம்தான் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வாங்கிட்டாரு.. இப்ப வரைக்கும் 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செஞ்சுட்டாங்க..
எடப்பாடி பழனிசாமி தலைமையில ஒரு அணி, எஸ்பி வேலுமணி அணி, தவெகவுக்கு போகிற அணின்னு அதிமுக இப்போதைக்கு மூணா பிளவுபட்டுப் போச்சுங்க ப்ரோ..
சரிங்க ப்ரோ.. எஸ்பி வேலுமணி டீம் இப்படி ரெண்டா உடைஞ்சு எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு தாவுறாங்களே என்ன பின்னணியாம்?
ஆமாங்க ப்ரோ.. இதை பத்தி ராஜினாமா செஞ்ச எம்.எல்.ஏ.க்கள்கிட்ட பேசுனப்ப வரிசையா காரணங்களை அடுக்குறாங்க… அதாவது, “ஸ்டாலின் Vs எடப்பாடின்னுதான் அரசியல் களம், தேர்தல் களம் எல்லாம் இருந்துச்சு.. நாங்களும் எடப்பாடி பக்கம்தான் இருந்தோம்..
ஆனா விஜய் வந்து எலக்ஷன்ல நின்னு ஜெயிச்சு ஆட்சியையும் அமைச்சுட்டாரு..
இப்ப விஜய் vs ஸ்டாலின்னு நிலைமை ஆகிடுச்சு.. எடப்பாடி 3-வது இடத்துக்கு போயிட்டாரு.. இனி வர்ற எலக்ஷனிலும் இப்படித்தான் நிலைமை இருக்க போகுது..
எடப்பாடி தலைமையில அதிமுக மீண்டு வந்து மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிற நம்பிக்கை சுத்தமா இல்லை.. அதுக்கான கிரவுண்ட் ரியாலிட்டியும் எதுவும் இல்லை..
எங்களால திமுகவுக்கு போய் ஸ்டாலின் தலைமையை ஏத்துகிட்டு செயல்பட முடியாது.. அதனால எங்களுக்கு இருக்கிற ஒரே சாய்ஸ் சிஎம் விஜய்தான்.. தவெகதான்..
விஜய் தவெக கொடுத்த ஆஃபர் (Vijay)
நாங்களும் தவெக தரப்புல பேசுனோம்.. அவங்க, “எம்.எல்.ஏ. பதவியை ரிசைன் பண்ணிட்டு வாங்க.. தவெகவுல சேர்ந்துடுங்கன்னு சொன்னாங்க..
அதே மாதிரி நீங்க எலக்ஷன்ல எவ்வளவு செலவு செஞ்சீங்க…ன்னு கேட்டாங்க.. நாங்க ரூ20 கோடி செலவு செஞ்சோம்னு சொன்னோம்.. அதை கொடுத்துடறோம்னு சொன்னாங்க..
வரப்போற இடைத்தேர்தலில்ல உங்க தொகுதியிலேயே நீங்க நில்லுங்க…செலவுகளையும் நாங்க பார்த்துக்கிறோம்”ன்னு ஆஃபர் கொடுத்தாங்க..
இதுவும் எங்களுக்கு சரின்னுதான் பட்டது.. ஒரு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வா இருக்கிறதுதான் சவுகரியமா இருக்கும்னு ஃபீல் பண்றோம்.. மத்தபடி அமைச்சர் பதவி, வாரியம் கிடைக்கும்னு எல்லாம் பெரிசா எதிர்பார்க்கலைங்க..
எங்க தொகுதிகளிலும் தவெகவுக்கு வலிமையான ஆட்கள் இல்லை.. எங்களால தவெகவுக்குதான் பலம்.. உள்ளாட்சி தேர்தல் வரும் போது எங்க ஆதரவாளர்களுக்கும் சான்ஸ் கொடுப்போம்.. தவெகவை இன்னும் ஸ்டிராங் பண்ணுவோம்”ன்னு சொல்றாங்க ப்ரோ..
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செஞ்சுகிட்டே இருக்காங்களே… எடப்பாடி டீம், எஸ்பி வேலுமணி டீம் என்ன சொல்றாங்க ப்ரோ..?
இன்னைக்கு கூட இசக்கி சுப்பையாகூட 4, 5 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யுறதா சொன்னாங்க.. ஆனா கடைசியில இசக்கி சுப்பையா மட்டும்தான் ரிசைன் பண்ணிட்டு போயிருக்காரு..
ஏன் மத்தவங்க ரிசைன் பண்ண வரலைன்னு விசாரிச்சப்ப, “எடப்பாடியுடன் எஸ்பி வேலுமணி டீம் பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருக்குன்னு நாம நேத்து கூட சொல்லி இருந்தோம்.. அதுல, ”எங்ககிட்ட பறிச்ச கட்சி பதவிகளை திரும்ப கொடுங்க”ன்னு எஸ்பி வேலுமணி டீம் கேட்குது.. ஆனா எடப்பாடியோ, “கட்சியில 6 தொகுதிகளுக்கு மா.செ.வா இருந்தீங்க.. இனி 2 தொகுதிகளுக்குதான் மா.செ.வா” இருக்க முடியும்னு சொல்லி இருந்தாரு.. இதுல எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் எல்லாமே செம்ம அப்செட்டுன்னும் சொன்னோம் இல்லையா?
இப்ப எடப்பாடி தரப்பு கொஞ்சம் பிடியை தளர்த்தி இருக்குதாம்.. எஸ்பி வேலுமணி டீம்-க்கு ”ஏற்கனவே கட்சியில என்ன பதவிகளில் இருந்தாங்களோ அதை அப்படியே திருப்பி கொடுத்துடுறேன்”ன்னு எடப்பாடி சொல்லி இருக்கிறாராம்.. அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் இந்த தகவலை எஸ்பி வேலுமணி டீம்-க்கு பாஸ் செஞ்சிருக்காரு..
எடப்பாடியோட இந்த டீலிங்கை ஏத்துக்கிட்டு ”பேசாம ரிட்டர்ன் ஆகிடுவோம்.. எதுக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யனும்?” அப்படிங்கிற மூடுலதான் எஸ்பி வேலுமணி டீம் இருக்குதாம்.. அதனாலதான இன்னைக்கு மத்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரிசைன் செய்ய வரலையாம் ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
