நடிகர் சங்கத்தை பற்றி தவறான தகவல்களை பரப்பியதாக கே.பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர்.
முறைகேடாக தேர்தல் நடத்தப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனால் இரண்டரை ஆண்டுகள் வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன.
இதையடுத்து நாசர் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நடிகர் சங்கத் தேர்தல் செல்லும், வாக்குகளை எண்ணலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, கடந்த மார்ச் 20 ஆம் தேதி நடிகர் சங்கத்தின் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதில் நாசர் தலைமையிலான அணி வெற்றியடைந்தது. நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணியினர் பதவியேற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் கே.பாக்யராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் பற்றி பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நடிகர் சங்கத்துடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள்.
சட்ட விதிகளுக்கு எதிராக இதை செய்திருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். இது குறித்து செயற்குழுவில் முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் 15 நாட்களில் கே.பாக்யராஜ் விளக்கம் அளிக்க வேண்டும் என சங்கத்தின் சார்பாக ஆகஸ்ட் 22ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.
இதேபோன்று நடிகர் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.உதயாவிற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் தற்போது பாக்யராஜ், உதயா இருவரையும் ஆறு மாத காலத்திற்கு சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்.
தென்னிந்திய சங்க விதி 13-ன் படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவோ அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்ல கூடாது என விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில்தான் கே.பாக்யராஜ் சினிமா எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் பெற்றது நினைவிருக்கலாம்.
கலை.ரா