பபூன் – சினிமா விமர்சனம்!

சினிமா

”பபூன்” – ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மற்றும் பாசன் ஸ்டுடியோஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராம், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

வைபவ் நாயகனாகவும், அனகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஜோஜூ ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூணாறு ரமேஷ், தமிழ், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், மதுரை விஸ்வநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கிராமத்துத் திருவிழாக்களில் நாடகம் போடும் நாட்டுப்புறக்கலைஞன் வைபவ் அதன் மூலம் கிடைக்கும் குறைவான வருமானம் வாழ்க்கை நடத்த போதுமானதாக இல்லை என்பதால் வெளிநாட்டு வேலைக்கு போக ஆசைப்படுகிறான்.

அதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது.

ரமேஷ் என்பவர் மூலமாக லாரி ஓட்டும் வேலை கிடைக்கிறது. அந்த லாரியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.

பல வருடங்களாக ராமநாதபுரம் பகுதியில் போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் டானான தனபால் என்ன தொழில் செய்கிறார் என்று தெரியாமலே அவரிடம் வேலைக்குச் சேர்கிறார் வைபவ்.

வேலையில் சேர்ந்த முதல் நாளே போலீஸிடம் மாட்டுகிறார்கள் வைபவ்வும், இளையராஜாவும்.

ஜெயிலுக்குப் போகும் நிலையில் நடுவழியிலேயே இருவரும் தப்பித்து ஓடுகிறார்கள்.

போதை மருந்து கடத்திய வழக்கில் போலீசிடம் சிக்கினால் 10 ஆண்டுகள் ஜெயிலில் இருக்க வேண்டும்.

இந்தச் சிக்கலிலிருந்து இவர்கள் தப்பிக்க, வைபவ்வின் காதலியான இலங்கை தமிழ்ப் பெண்ணான அனகா உதவுகிறார். இதனால் அனகாவுக்கு என்ன சிக்கல் வருகிறது? உண்மையான தனபால் யார்?.

இந்தப் போதை மருந்து கடத்தல் தொழிலிற்குப் பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சிகள் என்ன…?

இந்த சூழ்ச்சி வலையில் சிக்கி கடைசியில் யாரெல்லாம் ‘பபூன்’ ஆக்கப்படுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் ஒருவரிக் கதை.

நகரத்து இளைஞனாகவே தொடர்ந்து நடித்து வந்த வைபவ் இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தை ஏற்றிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் நடக்கும் நாடகத்தில் அவர் பேசும் வசனங்களும், பாடலும், நடிப்பும் ஆச்சரியப்பட வைக்கிறது.

நாடகக்காரனாக, பபூனாக, கட்டியக்காரனாக, காதலனாக அவர் நடித்திருக்கும் காட்சிகளில் அவரது நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது.

வைபவ்வின் நண்பன் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆந்தகுடி இளையராஜா பல இடங்களில் கவனிக்க வைத்திருக்கிறார். டயலாக் டெலிவரியிலும், வசனத் தெறிப்பிலும் பல வருட அனுபவஸ்தர் போல நடித்திருக்கிறார்.

நாயகி அனகா முகத்தில் எப்போதும் இருக்கும் மென் சோகமே அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனாலும் பாதி படத்துக்கு மேல் இவர் காணாமல் போயிருக்கிறார்.

இவரது சின்ன சின்ன முகபாவங்களின் நடிப்பு நம்மைக் கவர்கிறது என்றாலும், டப்பிங்கில் இவருக்கான வசன உச்சரிப்பு பல இடங்களில் ஒட்டவே இல்லை.

குறைவான காட்சிகளில் வரும் டான் தனபாலாக மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் அட்டகாசமான மிரட்டல் நடிப்பில் நம்மை கவர்கிறார்.

போதை பொருள் தடுப்புத் துறையின் எஸ்.பியாக வரும் இயக்குநர் தமிழ், படம் முழுவதும் போலீஸ் தோரணையில் மிரட்டல் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

‘ஆடுகளம் நரேன்’ தனது பண்பட்ட அனுபவ நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் படத் தொடக்கத்தில் நாடகத்தில் ஒலிக்கும் ‘மடிச்சு வச்ச வெத்தல’ கூத்துப் பாடல் முணுமுணுக்க வைக்கிறது.

வசனங்களும் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்திருக்கிறது.

“தண்டிக்கனும்னா மட்டும் உங்க சட்டத்துல இவ்வளவு செக்‌ஷன தேடுறீங்களே. எங்களுக்கு என்னென்ன உரிமை இருக்குன்னு உங்க சட்டம் சொல்லுதுன்னு தெரியுமா?” என்று அனகா, எஸ்.பி.தமிழிடம் கேட்பதும்,

“துரோகத்தால பல சாம்ராஜ்யங்களே அழிச்சிருக்கு. நாமெல்லாம் எம்மாத்திரம்?”, “காலைல போட்டோவ பாத்தா மதியானம் ஜனங்க மறந்துருவாங்கல்ல” போன்ற வசனங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.

‘ஆடுகளம்’ நரேன்-‘ஆடுகளம்’ ஜெயபாலன் இடையே நடக்கும் அரசியல் சண்டைகள் தற்போதைய தமிழகத்தின் அரசியல் களத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது.


தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இன்றைக்கும் நடந்து வரும் போதை பொருள் கடத்தல் தொழிலைத் திரையில் காண்பிக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர்,

அதே வேளையில் தற்போதைய நவீன கால யுகத்தால் வாய்ப்பின்றி பொருளாதார வசதியில்லாமல் வறுமையில் வாழும் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை பதிவுசெய்திருக்கிறார்.

மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்கள் இந்தியத் தமிழர்களால் படும் அவஸ்தைகளையும் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.

இப்படி கனமான மூன்று கதைகளையும் ஒன்றாகச் சேர்த்து செய்த கதம்பமாக இருந்திருக்க வேண்டிய திரைப்படம் தடம் மாறி கேங்ஸ்டர் படமாக உருமாறிப் போயிருக்கிறது.

படத்தின் துவக்கக் காட்சியில் நடக்கும் அந்த நாடகக் காட்சிகள் மிக சரியான தேர்வு.

நாடகத்துடன் துவங்கிய படம் போகிற போக்கில், போதை மருந்து கடத்தல், அரசியல் கூத்து, போலீஸ் வேட்டை, நீதிமன்றம், கேரளா, கடல் பயணம் என்று மாறி மாறி பல்வேறு திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

தற்போதைய நாடகக் கலைஞர்களின் சிரமங்கள், தமிழகத்தில் இலங்கை அகதி வாழ் மக்கள் படும் கஷ்டம், தமிழகத்தில் நடக்கும் அரசியல் விளையாட்டுக்கள் என்று பலவற்றையும் பேச வந்த இந்தப் படம் இந்த மூன்றையுமே முழுமையாக பேசவில்லை என்பதுதான் உண்மை.

எழுத்து இயக்கம்: அசோக் வீரப்பன்,

இசை: சந்தோஷ் நாராயணன்,

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்,

சண்டை பயிற்சி இயக்கம்: விக்கி நந்தகோபால், தினேஷ் சுப்பராயன்,

நடனப் பயிற்சி இயக்கம்: எம்.ஷெரீப்,

இராமானுஜம்

நானே வருவேன் “இரண்டு ராஜா” பாடலில் என்ன ஸ்பெஷல்?

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: வீட்டிலேயே பலகாரம் தயாரிக்கப் போறீங்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *