செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வேலைவாய்ப்புச் சந்தையை மாற்றிக்கொண்டிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் முழுக்கச் சுமார் 2.4 கோடி அறிவுசார் பணியிடங்கள் (Knowledge-worker jobs) பாதிக்கப்படலாம் என்று ஜேபி மோர்கன் (JP Morgan) மதிப்பிட்டுள்ளது.
அலுவலகப் பணிகள், தகவல் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, நிர்வாகப் பணிகளில் ஏஐயின் தாக்கம் கூடலாம் என்று அது சொல்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை முழுக்க வேலை பறிபோவதைக் குறிக்கவில்லை. பல வேலைகளில் மனிதர்கள் வேலை செய்யும் முறைதான் மாறக்கூடும்.
2.4 கோடி எப்படிக் கணக்கு வந்தது?
ஜேபி மோர்கன் வெல்த் மேனேஜ்மென்ட் அறிக்கையில் ஒரு உதாரணக் கணக்கீடு தரப்பட்டுள்ளது. நிறுவனங்கள் ஏஐக்குச் செலவழிக்கும் தொகையில் பாதியை, இதுவரை மனிதர்கள் செய்துவந்த வேலைகளை ஏஐ மூலம் மாற்றப் பயன்படுத்தும் என்று அதில் வைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில்தான் இந்த மதிப்பீடு வந்தது.
மனிதப் பணியாளருக்கு ஆகும் செலவில் பாதிச் செலவில் ஏஐ அதே வேலையைச் செய்யும் என்ற அனுமானமும் இதில் சேர்ந்துள்ளது. இதன்படி உலக அறிவுசார் பணியாளர்களில் ஆண்டுக்குச் சுமார் 1.3 சதவீதம் பேரின் வேலை பாதிக்கப்படலாம்.
அமெரிக்காவில் மட்டும் 1.6 கோடியா?
இந்தப் பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவில் நடந்தால், அங்கு ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.6 கோடிப் பணியாளர்கள் பாதிக்கப்படலாம் என்று அறிக்கை சொல்கிறது. அதாவது ஆண்டுக்குச் சுமார் 30 லட்சம் பேர். ஆனால், அமெரிக்காவில் உண்மையிலேயே இத்தனை பேர் வேலையிழப்பார்கள் என்பது உறுதியான கணிப்பு இல்லை. ஏஐ பயன்பாடு எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதைப் பொறுத்தே உண்மையான தாக்கம் இருக்கும்.
வேலை போவதைவிட வேலை செய்யும் முறை மாறும்
இந்த அறிக்கையின் முக்கிய கருத்து இதுதான். ஏஐ வந்ததும் எல்லா வேலைகளும் அழிந்துவிடாது. ஒவ்வொரு வேலையும் பல சின்னச் சின்னப் பணிகளின் தொகுப்பு. அவற்றில் சிலவற்றை ஏஐ தானாகவே செய்யும். வேறு சிலவற்றில் மனிதர்களின் செயல்திறனைக் கூட்டும்.
அமெரிக்காவில் இப்போது மொத்த வேலை நேரத்தில் வெறும் 6 சதவீதம் மட்டுமே ஏஐ உதவியோடு நடக்கிறது. அதாவது ஏஐ பயன்பாடு இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது. பல நிறுவனங்கள் ஆட்களை உடனே நீக்குவதற்குப் பதிலாக, காலியாகும் பணியிடங்களை நிரப்பாமலே மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஊழியர்கள் என்ன செய்யலாம்?
- ஏஐ கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
- தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.
- படைப்பாற்றல், முடிவெடுக்கும் திறன் போன்ற மனிதத் திறமைகளை மேம்படுத்துங்கள்.
ஏஐயை எதிரியாகப் பார்க்காமல், வேலைத்திறனைக் கூட்டும் கருவியாகப் பயன்படுத்துபவர்களுக்குப் புதுப் புது வாய்ப்புகள் உருவாகலாம்.









