அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ரஷ்யா மீதான தடைகளை கடுமையாக்கும் மசோதா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு அதிகபட்சமாக 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கும் இந்த மசோதாவில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
214-211 வாக்குகளில் முன்னேறிய மசோதா
Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act 2026 என்ற இந்த மசோதா, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடைமுறை வாக்கெடுப்பில் 214-211 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் பிரதிநிதிகள் சபையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. இதையடுத்து இறுதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படுமா?
மசோதா சட்டமாக மாறினால், ரஷ்ய எண்ணெய் அல்லது எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு கிடைக்கும். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையின் சாத்தியமான இலக்குகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், மசோதா நிறைவேறிய உடனேயே இந்தியப் பொருட்களுக்கு 100% வரி தானாக அமலாகாது; அதிபர் அந்த அதிகாரத்தை பயன்படுத்தினால் மட்டுமே அது நடைமுறைக்கு வரும்.
இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவில் தாக்கம்?
ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவின் எரிசக்தி தேவையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதனால் புதிய அமெரிக்க நடவடிக்கை அமலுக்கு வந்தால், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் தாக்கம் ஏற்படக்கூடும்.
அடுத்து என்ன நடக்கும்?
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மசோதாவுக்கான இறுதி வாக்கெடுப்பு அடுத்த கட்டமாக உள்ளது. அதன் முடிவைப் பொறுத்தே மசோதா சட்டமாகும் பாதை தெளிவாகும். தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட நடவடிக்கை அல்ல.
