பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமம் கோரமுடியாது என எக்கோ இசை நிறுவனம் இன்று (ஜூன் 13) சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இளையராஜாவின் சுமார் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால், ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாகக்கூறி, இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமையைப் பெற்று, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் இளையராஜா மேல்முறையீடு செய்தபோது, பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதன் பின்னர், தயாரிப்பாளரிடம் உரிமையை பெற்றுள்ளதால், பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாகக் கூறி எக்கோ நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட படத்திற்காக தயாரிப்பாளரிடம் ஊதியம் பெறும் இசையமைப்பாளர் ராயல்டி தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டதாகவும், இளையராஜாவுக்கு உரிமை இருக்கிறதா இல்லையாவென இறுதி விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும் எனவும், 1970, 80 மற்றும் 90களில் இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் இருந்த ஈர்ப்பு, தற்போது இல்லை எனவும் இசை நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று (ஜூன் 13) சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது, “பாடல்கள் மீது இளையராஜா எந்தவித உரிமையும் கோர முடியாது. பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களிடம் எந்த ஒப்பந்தமும் இளையராஜா செய்து கொள்ளவில்லை.
ஒப்பந்தம் செய்யாததால் தயாரிப்பாளர்களிடம் இளையராஜா இசை உரிமையை வழங்கிவிட்டார். ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. அதனால், அவர் பாடல்கள் மீது உரிமைக்கோர முடியும்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமை உள்ளது. அவரது இசையமைப்பில் வெளியான இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ தான் இளையராஜா தார்மீக உரிமை கோரமுடியும்” என எக்கோ நிறுவனம் மூலம் வாதிடப்பட்டது.
எக்கோ நிறுவனத்தின் வாதங்களுக்கு பின்னர், இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவைத் தேர்தல் முடிந்து, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் மாப்பிள்ளை சபரீசன் ரோல்!
கோவைக்கு இப்போது முப்பெரும் விழாதான் முக்கியமா? – அண்ணாமலை கேள்வி!