மக்களவைத் தேர்தல் முடிந்து, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் மாப்பிள்ளை சபரீசன் ரோல்!

அரசியல்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்  திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றது. இதற்கான அரசியல் காரணங்களாக பலரும் பல விஷயங்களை விவாதித்து வருகிறார்கள்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் இரு தொகுதிகளுக்கு ஒரு பொதுக்கூட்டம் என 40 தொகுதிகளுக்கும் இருபது பிரம்மாண்டப் பொதுக்கூட்டங்களில் பேசினார். பொதுக்கூட்டத்துக்கு செல்லும்போது ஆங்காங்கே காலையில் வாக்கிங் சென்று மக்களோடு மக்களாக அவர்களிடம் பேசி வாக்கு சேகரித்தார்.

அமைச்சரும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி தமிழ்நாடு முழுதும் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இவர்கள் இப்படியென்றால்  முதலமைச்சரின் மாப்பிள்ளை சபரீசன் காதும் காதும் வைத்த மாதிரி பின்னணியில் செயல்பட்டு  இந்தத் தேர்தலில் முக்கியமான ஒரு பங்காற்றியிருக்கிறார்.

அதனால்தான்  வெற்றி பெற்ற திமுக, கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் முதலமைச்சர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும்  சந்தித்து வாழ்த்து பெற்ற கையோடு  மாப்பிள்ளை சபரீசனையும்  சந்தித்து  வாழ்த்து பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தல் களத்தில் அப்படி என்ன செய்துவிட்டார் சபரீசன்? 

நாடாளுமன்றத் தேர்தல்  தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே  திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

”வேட்பாளர்  தேர்வு பற்றி  மற்றும் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.  அவற்றை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.   எந்த தொகுதிக்கு எந்த வேட்பாளர் சரியாக இருப்பார் என்று  நான் முடிவு செய்கிறேன்.    நீங்கள் தேர்தல் வேலை மட்டும் பார்த்தால் போதும்”  என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

வேட்பாளர் தேர்வில் தொடங்கி… 

ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு  பின்னணியாக இருந்தவர் சபரீசன்.  ஏனென்றால்  மக்களவைத் தேர்தலுக்கு சுமார் ஆறு மாதங்கள் முன்பிருந்தே…  எந்த தொகுதியில் திமுக போட்டியிடுவது எந்த தொகுதியை கூட்டணிக்கு விட்டுக் கொடுப்பது என்பதில் தொடங்கி திமுக போட்டியிட்டால் அங்கே யார்  வேட்பாளர்  என்று ஆய்வினை சபரீசனின், ‘பென்’ நிறுவனம்  Populus Empowerment Network (PEN), மேற்கொள்ளத் தொடங்கியது.

எந்த தனிநபர் சார்பும், எந்த  கோஷ்டி சார்பும் இல்லாமல்  கடைந்தெடுத்த திமுக சிந்தனையோடு இந்த ஆய்வை மேற்கொண்டார் சபரீசன். இதன் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதியிலும் சமுதாய ரீதியாக, பாப்புலாரிட்டி ரீதியாக, பணம் செலவழிக்கும் திறன் ரீதியாக இப்படி  பல ஃபில்டர்களை வைத்து பட்டியல்  தயாரித்தார் சபரீசன்.  இந்தத் தகுதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் அடங்கிய வேட்பாளார் பட்டியலை சபரீசன் ரகசியமாக தயாரித்து, அதை முதலமைச்சர் ஸ்டாலின் கையில் கொடுத்தார்.

இந்த பட்டியலில் இடம்பெற்றவர்கள் பற்றிய உளவுத்துறை ரிப்போர்ட்டும் கேட்கப்பட்டு… அதில் எவர் பொருத்தமானவர் என்ற அடிப்படையில்  இறுதி வேட்பாளர் பட்டியலை தயாரித்தார் ஸ்டாலின்.

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு  தேர்தல் பணிகள் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும்…  திமுக போட்டியிடும் தொகுதியாக இருந்தாலும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியாக இருந்தாலும் தேர்தல்  பணிகள் பற்றி  24 மணி நேரமும் கண்காணித்தார் சபரீசன்.

தொய்வு இருந்தால்  அதன் காரணம் என்ன அதை எப்படி சரி செய்வது என்ற  ஆய்வை  மேற்கொண்டு ஒவ்வொரு நாள் மாலையும்  சபரீசனிடம்  பென் நிறுவனத்தின் அறிக்கை செல்லும். அந்த அறிக்கையோடு முதலமைச்சர் ஸ்டாலினை இரவு சந்திப்பார் சபரீசன். சந்திக்க முடியவில்லை எனில் போனில் பேசிவிடுவார்.  உடனடியாக அந்தப் பிரச்சனையை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் வேட்பாளர்களின் கரைச்சல்!

குறிப்பாக காங்கிரஸ் சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் ஆரம்பகட்ட  செலவுகளை கூட செய்ய முன் வரவில்லை, இதனால் காங்கிரஸ் போட்டியிடும் பல தொகுதிகளில் திமுக ஒன்றிய செயலாளர்கள் வேலையையே தொடங்கவில்லை என்று சபரீசனுக்கு ரிப்போர்ட் சென்றது.

பென் நிறுவனத்தின்  பிரதிநிதிகள் மூலம்  தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒன்பது காங்கிரஸ்  வேட்பாளர்களையும் தொடர்பு கொண்டு, ‘உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்று விசாரித்து இருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு காங்கிரஸ் வேட்பாளரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லியிருக்கிறார்கள். சிலர் திமுக மாசெக்களிடம் ஆரம்பகட்ட செலவுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டோம் என்று சொன்னார்கள். சிலர், பணம் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகிறது என்று சொன்னார்கள். சில வேட்பாளர்களிடம் சபரீசனே பேசி இருக்கிறார்.

இதன் பிறகு இந்த பிரச்சனை முதலமைச்சரிடம் கொண்டு செல்லப்பட்டு  உடனடியாக ஆரம்ப கட்ட செலவுகளை திமுகவினரே  செய்ய வேண்டும் என்ற  அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.  அதன் பின்னரே காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணி இயல்புக்கு வந்தது.

எங்கெங்கே உட்கட்சிப் பூசல்?

திமுகவிலே இருக்கக்கூடிய உட்கட்சி பூசல்கள் தேர்தல் பணிகளில் எப்படி எதிரொலிக்கிறது என்றும் அதை தீர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டார் சபரீசன்.

வேட்பாளர் பட்டியல்  அறிவித்த அன்றே கள்ளக்குறிச்சியில் வேட்பாளர் எதிர்பார்ப்பில் இருந்த எஸ்.ஆர். சிவலிங்கம் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டுச் சென்றுவிட்டார். அவரது அதிருப்தி தேர்தல் பணிகளிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சிக்கு பயணம் மேற்கொண்டார் சபரீசன்.

அங்கிருந்து சேலம் சென்று பின் ஈரோட்டுக்குச் சென்றார். ஈரோடு மக்களவைத் தொகுதியில்  திமுக இளைஞரணியின் மாநில  துணைச் செயலாளர்  பிரகாஷ்  போட்டியிட்டார்  அந்த தொகுதியை எப்படியாவது காங்கிரசுக்கு  தள்ளி விடுவது என்று கடைசி வரை முயற்சி செய்தார் அமைச்சர் முத்துசாமி.

ஏனென்றால் ஈரோட்டில்  திமுக எம்பி  வெற்றி பெற்று வந்து விட்டால் அதுவும் இளைஞர் அணியைச் சேர்ந்த பிரகாஷ் வெற்றி பெற்று வந்து விட்டால்  ஈரோட்டின் அதிகார மையம்  கைமாறி விடுமே என்ற கலக்கமும் முத்துசாமி தரப்பினருக்கு இருந்தது.

இந்த நிலையில் வழக்கம் போல  மொடக்குறிச்சி தொகுதியில் குறிப்பிட்ட இரண்டு ஒன்றிய செயலாளர்கள்  தேர்தல் வேலையில் சுணக்கம் காட்டுவது  சபரீசனுக்கு  தெரிய வந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்கடிக்கப்படக் காரணமான ஒன்றியங்கள்தான் அவை.

ஈரோட்டுக்கு சென்ற சபரீசன்  தனியார்  சுகர்  ஆலை  கெஸ்ட் ஹவுஸில் தங்கியபடி  அமைச்சர் முத்துசாமியையும் வேட்பாளர் பிரகாஷையும் லஞ்ச்சுக்கு வரவழைத்தார்.   20 நிமிடங்கள் அவர்களிடம்  பேசி  அமைச்சர் முத்துசாமிக்கு நேரடியாக சில  அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தேர்தல் முடிவில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உட்கட்சி பூசலை தாண்டி அதிக லீடிங்கை  (62 ஆயிரத்து 855 வாக்குகள்)  திமுகவின் பிரகாஷுக்கு பெற்றுக் கொடுத்தது.

அதேபோல கோவையில் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் அங்கேயும் சில நாட்கள் தங்கி தேர்தல் வியூகம் பற்றி கேட்டறிந்து விவாதித்திருக்கிறார் சபரீசன்.

நெல்லைக்கு அனிதாவை அனுப்பிய பின்னணி!

நெல்லைக்கு தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற  முதலமைச்சர் ஸ்டாலின்  பொதுக்கூட்டம் முடிந்ததும் திமுக மாவட்ட நிர்வாகிகளை அழைத்து,  ‘இங்கே சில திமுக நிர்வாகிகள் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனோடு  தொடர்பில் இருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.   காங்கிரஸ் போட்டியிட்டாலும் இங்கே திமுக போட்டியிடுவது போலத்தான்.  அதனால்  தேர்தல் பணிகளை ஒழுங்காக செய்ய வேண்டும்’  என்று எச்சரித்தார்.

இந்த  எச்சரிக்கைக்கு பின்னால் இருந்தது சபரீசன் கொடுத்த இன்புட் தான்.  மேலும்  நெல்லை நாடாளுமன்ற தொகுதியில்  பொறுப்பு அமைச்சர் தங்கம்  தென்னரசு  பணி செய்தாலும்…. நயினார் நாகேந்திரன் நாடார் சமுதாயத்துக்குள் சில உள் வேலைகளைச் செய்து வருவதால்  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அங்கே அனுப்ப வேண்டும் என்று  சபரீசன்  கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின்  அனிதா ராதாகிருஷ்ணனை நெல்லைக்கு அனுப்பினார்.

பிரச்சாரத்துக்குப் பின்னணியில்

முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கையில்… காதும் காதும் வைத்த மாதிரி தொகுதிகளுக்குச் சென்று களத்தில் நிலவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார் சபரீசன்.

இந்த வகையில்   கள்ளக்குறிச்சி, ஈரோடு,  கோயம்புத்தூர்,  தேனி, நெல்லை  உள்ளிட்ட  20 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சபரீசன் நேரடியாக சென்று அங்கே இருக்கக்கூடிய  பிரச்சனைகளை சரி செய்து இருக்கிறார்.

வெற்றிக்குப் பின் சபரீசனை வாழ்த்திய ஸ்டாலின்

தேர்தல் முடிவுகள் வந்த அன்று தனது மாப்பிள்ளையை அழைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரையும் அவரது பென் நிறுவனத்தையும் வாழ்த்தியிருக்கிறார்.  தமிழ்நாட்டு அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் சபரீசன் போட்ட கணக்குகளே தேர்தல் முடிவுகளாக வந்திருக்கின்றன என்பதற்காகத்தான் இந்த வாழ்த்து.

சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கிய சபரீசன்

இந்த நிலையில் சபரீசனிடம் பேசிய ஸ்டாலின், இதே பாணியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளையும் தொடங்கும்படி சொல்லியிருக்கிறார். அதன்படியே சட்டமன்றத் தேர்தலுக்கான டேட்டா அனலைஸ் பணிகளை சபரீசன் தொடங்கிவிட்டார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுதும் ஒவ்வொரு பூத் வாரியான வாக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. திமுக அதிகமாக ஓட்டுகள் பெற்ற பூத்துகளில் அதை தக்க வைக்கவும்,  எதிர்க்கட்சிகள் எத்தனை பூத்களில் அதிக வாக்கு பெற்றுள்ளன என்று கண்டறிந்து அங்கே வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குள் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சபரீசனின் நிறுவனத்தினர் முதல் கட்ட  ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டனர். இதற்கு ஆறு மாத காலம் அவகாசமாக நிர்ணயித்து வேலையைத் தொடங்கியிருக்கிறார் சபரீசன்.

எனவே… மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மெக்கானிசம் மாதிரியே சட்டமன்றத் தேர்தலிலும் சபரீசன் பங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்னி பஸ் புக் பண்றீங்களா? – முதலில் பதிவெண் பாருங்க!

தூத்துக்குடி: உள்ளாட்சி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை… மீண்டும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

1 thought on “மக்களவைத் தேர்தல் முடிந்து, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் மாப்பிள்ளை சபரீசன் ரோல்!

  1. கலைஞருக்கு ஒரு முரசொலி மாறன் – ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *