Treatment of mentally challenged: Madurai High Court directive to Govt

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பராமரித்து சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லையை சேர்ந்த ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது மகனுக்கு 20 வயதாகிறது. அவருக்கு கடுமையாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் கடுமையாக நடந்து கொள்கிறார் ஈடுபடுகிறார்.

என்னையும், எனது மனைவியையும் சில சமயங்களில் தாக்குகிறார். எனது மகனை நெல்லை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக பராமரிக்க நடவடிக்கைக்கோரி தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவை அவர்கள் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மனுதாரர் தனது மகனை வளர்ப்பதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நேற்று (ஜூன் 11) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரரின் மகன் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மனநலப் பிரிவில் 2022 மே 20 அன்று அனுமதிக்கப்பட்டார். பின் 2022 ஜூன் 6ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவர் இருமுனையப்பிறழ்வால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநோய் அறிகுறிகளுடன் எபிசோடிக் பாதிப்பும் இருந்துள்ளது. இதனால், குடும்ப உறுப்பினர்களால் அவரை ஆதரிக்கவும், அவரது நடத்தைகளை கையாளவும் முடியவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்டுள்ள 20 வயது இளைஞரின் தாயிடம் பேசினேன். மகனின் வன்முறையை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்தார்.

மனுதாரரின் மகனை உரிய இடத்தில் தங்க வைத்து பராமரிக்கவும், அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நெல்லை அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டார்.

மேலும், “குடும்ப ஆதரவு இல்லாத மனநலப் பிரச்சனை உள்ளவர்கள் விசயத்தில் அரசே தனது அதிகார வரம்பை பயன்படுத்தி அவர்களை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான குடியிருப்புகளை அமைக்க அரசு கடமைப்பட்டுள்ளது.

அரசு சார்பற்ற நிறுவனங்கள் இத்தகைய தங்குமிடங்களை நடத்தி வந்தன. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளுடன் கண்ணியமாக வாழ அரசு அவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். அவர்களை பாராமரிக்க தேவையான பட்ஜெட் ஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மனநலப் பிரச்சனை உள்ளவர்களைக் காப்பதற்காக அமைக்கப்படும் ஒவ்வொரு நிறுவனத்திலும் அதிகாரிகள், நன்கு அறியப்பட்ட மனநல மருத்துவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் அடங்கிய பார்வையாளர் குழு இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் சட்டம் (2016), மனநல சுகாதாரச் சட்டம் (2017) மற்றும் 1999 ஆம் ஆண்டின் மத்திய சட்டம் 44 (ஆட்டிசம், பெருமூளை வாதம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய அறக்கட்டளை) ஆகிய மூன்று சட்டங்களின் அடிப்படையில், குடும்ப ஆதரவு இல்லாத மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“கட்சி அலுவலகத்தில் மட்டுமே பிரஸ்மீட்” : தமிழிசையை கட்டுப்படுத்தும் அண்ணாமலை?

தொடர்ந்து உயரும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *