கிச்சன் கீர்த்தனா: மினி இட்லி வித் சாம்பார்

Published On:

| By Selvam

Mini Idli with Sambar in Tamil

நம்மில் பலருக்குப் பிடித்த மினி இட்லி வித் சாம்பாரை ஹோட்டலில்தான் ருசித்திருப்போம். அதை வீட்டிலேயே செய்து அசத்தலாம். இந்த இட்லி செய்வதற்குத் தேவைப்படுகிற புளித்த மாவில் பயோட்டின் என்கிற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் இருக்கிறது. இது சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் ஆவியில் வெந்து கிடைப்பதால் இட்லி எளிதில் செரிமானமாகும் உணவாகவும் இருக்கிறது. சாம்பாரில் புரதச்சத்து, வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவை இருப்பதால் உடல் வலிமைக்கு இது மிகவும் ஏற்றது.

என்ன தேவை?

இட்லிக்கு…

புழுங்கலரிசி – 4 கப்
ஊறவைத்த உளுந்து – ஓரு கப்
உப்பு – சிறிதளவு

சாம்பார் செய்ய…

புளி – நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)
கடுகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
வெந்தயம் – சிறிதளவு
நறுக்கிய பச்சை மிளகாய் – 4 + 2
பெருங்காயம் – சிறிய கட்டி
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
துவரம்பருப்பு – ஒரு கப்
வெள்ளைப்பூசணி – ஒரு துண்டு
மஞ்சள்தூள் – சிறிது
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 10 கிராம்
உளுத்தம்பருப்பு – 10 கிராம்
துவரம்பருப்பு – 10 கிராம் (தாளிக்க)
தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

இரண்டு கப் தண்ணீரில் ஒரு கப் உளுந்து சேர்த்து ஊறவைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் நான்கு கப் புழுங்கலரிசிக்கு எட்டு கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். இரண்டும் ஒரு மணி நேரம் ஊறியபிறகு உளுந்தை மைய அரைக்க வேண்டும். அடுத்து அரிசியை அரைக்க வேண்டும். அரிசியை மிகவும் மைய அரைக்காமல் அதேநேரம் அதிக கொரகொரப்புடனும் அரைக்காமல் மிதமாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த அரிசியையும் உளுந்தையும் கலந்து உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும். பின்னர் இந்த மாவைப் புளிக்கவைத்து மினி இட்லித் தட்டில் இட்லிகளாக வார்க்கவும்.

ஒரு கப் துவரம் பருப்புக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில், வெள்ளைப் பூசணிக்காய் நறுக்கிப் போட்டு கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்க்கவும். இதை குக்கரில் வைத்து மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயைச் சூடாக்கி சிறிது எண்ணெய் விடவும். எண்ணெய் கொஞ்சம் சூடானதும் அதில் கடுகு தாளிக்கவும். அடுத்து சீரகத்தைப் போடவும். சீரகத்தின் நிறம் சற்று மாறும்போது சிறிது வெந்தயத்தைச் சேர்க்கவும். அதுவும் நிறம் மாறும்போது அடுத்து நறுக்கிய நான்கு பச்சை மிளகாயைப் போடவும். பிறகு, நறுக்கிவைத்த வெங்காயத்தைச் சேர்த்து, கூடவே நெய்யையும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறும்போது நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் இவை அனைத்தையும் வேகவைத்த பருப்புக் கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பிறகு இதனுடன் புளிக்கரைசலைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். புளி பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும் சாம்பார் பொடி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இன்னொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கவும். பின்னர் இதில் சிறிது வெந்தயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, பச்சை மிளகாய் இரண்டு, கொத்தமல்லி, தேங்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் இதனை விழுதாக அரைத்து ஏற்கெனவே கொதித்துக் கொண்டிருக்கிற பருப்புக் கலவையில் சேர்த்து ஒருகொதிவிட்டு இறக்கினால் சுவையான சாம்பார் ரெடி. இட்லிகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பச்சைப் பட்டாணி மசாலா

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பிரியாணியும் வேண்டும், எடையும் அதிகரிக்கக் கூடாது… இதோ வழி!

இதெப்படி வியாபாரம் ஆகும்? : அப்டேட் குமாரு

ஆன்டிபயாடிக் மருந்தை அதிகளவில் எடுக்கிறீர்களா? : எச்சரிக்கிறார் சவுமியா சாமிநாதன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share