சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பாய்லர் வெடிப்பில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா மின் உற்பத்தி நிலைம் செயல்பட்டு வருகிறது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புக் குழுவினரும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்போது நிவாரணப் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
