வாரத்தின் முதல் வேலை நாளான இன்று, ‘இட்லி மாவு இருக்கு… இட்லியோ, தோசையோ செய்து விடலாம்… தொட்டுக்கொள்ள என்ன செய்யலாம்’ என்று யோசிப்பவர்களுக்கு, இந்த பச்சைப்பட்டாணி மசாலா கைகொடுக்கும். பச்சைப் பட்டாணியில் இருக்கிற வைட்டமின் சத்துகள் கண்களுக்கும் சருமத்துக்கும் மிகவும் நல்லது. அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.
என்ன தேவை?
பச்சைப் பட்டாணி – ஒரு கப்
வெங்காயம் – 3 (அரைத்து விழுதாக்கவும்)
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்)
இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்)
தக்காளி பியூரி – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு
முந்திரிப்பருப்பு – 5
பாதாம்பருப்பு – 5
தயிர் – 2 டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
முந்திரி, பாதாம் இரண்டையும் வெந்நீரில் 15 நிமிடங்களுக்கு ஊறவிட்டு, லேசாக அரைத்து தயிரில் கலந்து வைத்துக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியைக் குக்கரில் வைத்து வேகவிடவும். ஒரு விசில் போதும். குக்கரை அணைத்து ஆவியை வெளியேற்றவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, ஏலக்காய், சீரகம் போட்டு வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்துக்கொள்ளவும். அதில், வெங்காய விழுதைப் போட்டு சிறிது வதக்கி அதன் பச்சை வாசனை நீங்கியதும், தக்காளி பியூரி சேர்த்து வதக்கவும். இரண்டையும் சேர்த்துப் போட்டால் வெங்காயத்தின் பச்சை வாசனை போகாது. இப்போது, வேகவைத்த பச்சைப் பட்டாணியைச் சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு கலந்து முந்திரி, பாதாம் கலவை சேர்க்கவும். வெண்ணெய் ஒரு டீஸ்பூன்விட்டு அதன் மீது கொத்தமல்லி இலைகள் சேர்த்துப் பரிமாறலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பிரியாணியும் வேண்டும், எடையும் அதிகரிக்கக் கூடாது… இதோ வழி!
கிச்சன் கீர்த்தனா: சோளே குல்ச்சா
வெறுப்பேத்துறான் மை லார்ட் : அப்டேட் குமாரு
தருமபுரியில் போட்டியிடுகிறாரா விஜய்? : கட்சி கூட்டத்தில் அறிவித்த தவெக நிர்வாகி!