ஆன்டிபயாடிக் மருந்தை அதிகளவில் எடுக்கிறீர்களா? : எச்சரிக்கிறார் சவுமியா சாமிநாதன்

Published On:

| By christopher

Are you taking too many antibiotics?: Soumya Saminathan warns

கொரோனா காலகட்டம் போன்று ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தொடர்ந்து அதிகளவில் எடுத்துக்கொண்டால் வருடத்திற்கு 20 லட்சம் பேர் வரை இறந்து போகும் நிலை ஏற்படும் என்று சவுமியா சாமிநாதன் எச்சரித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உலக நுண்ணுயிர் (தீங்கு ஏற்படுத்தும்) எதிர்ப்பு விழிப்புணர்வு வார கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 18) நடைபெற்றது.

இதில் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சாமிநாதன் மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலாளர் எஸ். வின்சன்ட் ஆகியோர்  பங்கேற்றனர்.

20 லட்சம் பேர் வரை இறக்கும் நிலை ஏற்படலாம்!

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சவுமியா சாமிநாதன் பேசுகையில், “கொரோனா காலகட்டத்தில் அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மக்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் உடலில் அதிக அளவில் மருந்தின் வீரியம் அதிகரித்துள்ளது.

தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி, இதே மாதிரி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் வருடத்திற்கு 20 லட்சம் பேர் வரை இறந்து போகும் நிலை ஏற்படும் என்று தெரிவிக்கிறது.

முதலில் அனைவருக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு தேவை. நமக்கு காய்ச்சல், சளி போன்றவை தொற்றாக பரவுகிறது. பாராசிட்டாமல் மாத்திரை, வீட்டில் சாப்பிடும் இஞ்சி, மிளகு, துளசி போன்றவற்றை எடுத்துகொண்டாலே காய்ச்சல் சளி போன்றவை ஒரு வாரத்தில் சரியாகி விடும். அதற்கெல்லாம் தேவையில்லாமல் ஆண்டிபயாட்டிக் பயன்படுத்த கூடாது.

மருத்துவர் பரிந்துரை சீட்டு அவசியம்!

பாக்டீரியா தொற்று என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தானாகவே மருந்துக்கடைகளில் வாங்கி அவற்றை சாப்பிடக் கூடாது.

மருந்து கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் கொடுக்கக் கூடாது என்பதில் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும்.

மற்ற நாடுகளில் ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்குவதில் கடுமையாக விதிமுறைகளை பின்பற்றுவதை போல நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாட்டில் ஆன்டிபயாடிக் குறித்து ஆராய்ச்சி அதிகரிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்குவதற்காக குழு செயல்படுத்த வேண்டும்.

எந்த நோயாளிக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்ய வேண்டும். ஆன்டிபயாட்டிக் தரவுகளை வெளிப்படையாக மக்கள் முன் தெரிவிக்க வேண்டும்.  அப்போதுதான் மக்களுக்கு அது குறித்தான விழிப்புணர்வு ஏற்படும்.

கால்நடை மற்றும் விவசாயத்துறையிலும் ஆண்டிபயாட்டிக் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்று வந்தவர்களுக்கு பாதிப்பு அதிகம்!

கொரோனா பேரிடர் காலத்தில் அதிக அளவு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொண்டதால் கரும்பூஞ்சை நோய் ஏற்பட்டது.

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது. தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது 0.001 சதவீதம் அளவிற்கே பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட 10 லட்சம் பேரில் இரண்டு பேருக்கு பக்க விளைவுகள் அதிகமாக இருக்கலாம்.

எனினும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தான் இதய நோய், நீரிழிவு நோய், பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கொரோனா தொற்று இரண்டு மூன்று முறை வந்தவர்களுக்கு இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.

ஆண்டிபயாடிக் அதிகளவில் பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அது செயல்பாட்டுக்கு வரும்” என்று சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

டிசம்பரில் தவெக மா.செ.க்கள் நியமனம் : தீவிர ஆலோசனையில் விஜய்

லாட்டரி மார்ட்டின் வீட்டில் பறிமுதல் செய்தது என்ன? : பட்டியலிட்ட ED!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share