வாரத்தில் நான்கு நாட்கள் பிரியாணி வேண்டும். ஆனால், எடை அதிகரிக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் நம்மில் பலருண்டு. இதோ அதற்கான வழி…
“கூடியவரையில் வீட்டிலேயே பிரியாணி சமைத்துச் சாப்பிடுங்கள். கடைகளில் வாங்க வேண்டாம். பிரியாணி செய்யப் பயன்படுத்தும் எண்ணெய் அல்லது நெய்யின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
பிரியாணி தயாரிக்கும்போது ஒரு கப் பிரியாணிக்கு 150 கிராம் முதல் 200 கிராம் அளவுக்காவது சிக்கன் அல்லது மீன் சேர்க்க வேண்டும். மட்டன் பிரியாணி என்றால் 150 கிராம் மட்டன் இருக்கலாம்.
பலரும் சிக்கனோ, மட்டனோ இல்லாத குஸ்காவையே விரும்புவார்கள். குஸ்கா சாப்பிடுவதைக் கூடியவரையில் தவிர்ப்பது நல்லது. அதில் இருப்பது வெறும் சாதம் மட்டுமே… புரதம் அறவே கிடையாது என்பதால் அதைச் சாப்பிடுவதால் எடை அதிகரிப்புதான் நடக்குமே தவிர, ஆரோக்கியத்துக்கு எந்த வகையிலும் உதவாது.
பிரியாணியும் வேண்டும், எடையும் அதிகரிக்கக் கூடாது என நினைப்பவர்கள், பிரியாணி சாப்பிடுவதற்கு முன் ஒரு கப் சூப் குடிக்கலாம் அல்லது தந்தூரி சிக்கனோ, சிக்கன் டிக்காவோ எடுத்துக்கொள்ளலாம்.
அசைவ பிரியாணி சாப்பிடும்போது காய்கறிகள் சாப்பிட வாய்ப்பில்லை என்பதால் பிரியாணியோடு சேர்த்து வெள்ளரிக்காய் தயிர்ப் பச்சடியோ, வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய் மாதிரி மிக்ஸ்டு வெஜிடபிள் தயிர்ப் பச்சடியோ எடுத்துக்கொள்ளலாம்.
பச்சடி பிடிக்காதவர்கள் பிரியாணியோடு முட்டை அல்லது காய்கறி சாலட் எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் நாம் சாப்பிடும் பிரியாணியின் அளவு குறையும்.
நிறைய காய்கறிகள் சேர்த்த ஆம்லெட்கூட எடுத்துக்கொள்ளலாம். முட்டை பிரியாணி பிரியர்கள் என்றால் அந்த பிரியாணியில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இருந்தால் போதுமானது.
பிரியாணி சாப்பிடும்போது கூடவே பிரெட் அல்வா போன்ற ஸ்வீட் சாப்பிடும் வழக்கமும் இப்போது அதிகரித்து வருகிறது. கூடியவரையில் அதைத் தவிர்த்துவிடலாம்.
பிரியாணியில் அதிக அளவு அசைவ பொருட்கள் சேர்ப்பதன் மூலமும் கலோரி அளவை ஓரளவு குறைக்கலாம். எடையையும் அதிகரித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம்” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சோளே குல்ச்சா
கிச்சன் கீர்த்தனா : ஜவ்வரிசி கிச்சடி