நீட் விவாதத்துக்கு அரசு தயார்.. சீர்குலைக்கிறது காங்கிரஸ்… தர்மேந்திர பிரதானின் முதல் ரியாக்‌ஷன்!

Published On:

| By Mathi

Govt ready for NEET debate,Dharmendra Pradhan's first reaction

நீட் தேர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருந்தும் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும்தான் நாடாளுமன்ற கூட்டத் தொடரை சீர்குலைக்க முயற்சிப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார்.

நீட் மோசடிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக டெல்லியில் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியை நேற்று நடத்தியது. இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் இன்று ஜூலை 21-ந் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தியது. பிரதமர் மோடி இல்லம் முன்பாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் 3 மணி நேரம் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் நீட் விவகாரத்தில் முதல் முறையாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மவுனம் கலைத்துள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவிட்டுள்ளதாவது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை சீர்குலைக்கவே மாணவர்களை வெட்கமே இல்லாமல் அரசியல் கருவிகளாகத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

பிரதமரின் இல்லத்துக்கு வெளியே ராகுல் காந்தியும் காங்கிரஸும் தர்ணா போராட்டம் நடத்தத் தேர்ந்தெடுத்தனர்; இது பொதுமக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதுடன், பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறிய செயலாகும்.

ADVERTISEMENT

விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்த பின்னரும் கூட, ஜனநாயக விவாதத்திற்குப் பதிலாக அரசியல் நாடகத்தையே காங்கிரஸ் தேர்ந்தெடுக்கிறது. அவர்களின் நோக்கம் மாணவர்களுக்கான தீர்வாக எப்போதுமே இருந்ததில்லை, அரசியல் தலைப்புச் செய்திகளுக்காக குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டும்தான் அவர்களின் முக்கிய நோக்கம்.

ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, இது மாணவர்களைப் பற்றிய அக்கறை அல்ல. விவாதத்திற்கான ஒவ்வொரு உண்மையான வழியும் திறந்து வைக்கப்பட்ட பின்னரும், மோதலை உருவாக்குவதுதான் ராகுல் காந்தியின் உள் நோக்கம்.

ADVERTISEMENT

நீட் விவகாரம் குறித்தும், நமது இளைஞர்களின் ஒவ்வொரு உண்மையான கவலை குறித்தும் நாடாளுமன்ற அவையில் விவாதிக்க எமது அரசு 100% உறுதியுடன் உள்ளது. இந்தியாவின் மாணவர்கள் அரசியல் பிரச்சாரத்தில் பொம்மைகளாக நடத்தப்படுவதை விட மிகச் சிறந்தவர்கள்

நாம், மாணவர்களுக்குக் கோபத்தை விடக் கூடுதலானவற்றை தருவதற்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்களுக்கு பதில்களையும், சீர்திருத்தங்களையும், பொறுப்புக்கூறலையும் எடுத்துச் சொல்ல வேண்டும். அதை தருவதில் எமது அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share