டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்தியதால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul), காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (Priyanka) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு ராகுல், பிரியங்காவின் தாயார் சோனியா காந்தி நேரில் சென்றார்.



நீட் தேர்வு முறைகேடுகள், டெல்லியில் போராட்டம் நடத்திய காக்ரோச் ஜனதா கட்சியினர் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும் பிரதமர் மோடி- கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரியும் பிரதமர் மோடி இல்லம் முன்பாக இன்று ராகுல் காந்தி தலைமையில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார், கேரளா முதல்வர் சதீஷன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கேசி வேணுகோபால், பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போலீசார் தடையை தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட போது அவரது மூக்கில் ரத்த கசிவு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோர் முதலில் மாடல் டவுன் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன் பின்னர் டெல்லி சத்ரசால் மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். காவல்துறை வாகனத்தில் ஏறிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியை கோழை என முழக்கமிட்டதால் போலீசார் அவரது கையை தடுத்து வாகனத்துக்குள் தள்ளிவிட்டனர்.
இந்த நிலையில் பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேரில் சென்றார்.

இதனிடையே ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைதைக் கண்டித்து ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதேபோல உ.பி. தலைநகர் லக்னோவில், அகிலேஷ் யாதவ் டெல்லியில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சமாஜ்வாதி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லியில் கடந்த 2 நாட்களாக மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிரான போராட்டங்களால் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
விடுதலை செய்ய விசிக கோரிக்கை
ராகுல் காந்தி உள்ளிட்டோரை விடுதலை செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “டெல்லியில் மாணவர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கு நீதி கேட்டு பிரதமர் மோடி வீட்டின் முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறேன். அவர்களை உடனே விடுதலை செய்வதோடு பிரதமர் மோடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக முதலில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்றார்.
