தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜூலை 20 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சிறையில் உள்ள மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி. கூறுகையில், “பாளையங்கோட்டை சிறைச்சாலை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் புதிதான ஒன்று அல்ல. 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது கழகத் தலைவர் கலைஞர் சிறைவாசம் அனுபவித்த இடம் அது. எனவே, திமுகவைச் சேர்ந்த யார் இந்த இடத்திற்கு வந்தாலும் அதை பெருமையாகத் தான் நினைப்பார்கள். அதேபோலத்தான் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனும் இதனைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளார். இதுபோன்ற பொய் வழக்குகள், கைதுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பின்வாங்கும் நபர் திமுகவில் எவரும் இல்லை. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள திமுகவும் அதன் தலைவர்களும் தயாராகவே உள்ளனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இன்று காலையில்கூட பெண் ஒருவர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியைப் பார்த்தோம். ஒவ்வொரு நாளும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்படும் சூழல் நிலவியும், அவரிடம் விசாரணை நடத்தக்கூட இந்த அரசு தயாராக இல்லை. ஆனால், முதலமைச்சரை தவறாகப் பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.” என்றார்.
எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை
மேலும் பேசிய அவர், “முன்னதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் இதேபோன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது, அவரையும் கைது செய்ய முயற்சித்தார்கள். தற்போது கருத்துக்களைப் பதிவு செய்யும் யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதளப் பணியாளர்கள் மீதும் இந்த அரசு வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்ப முயல்கிறது. தவெக அரசுக்கு ஜனநாயகத்தின் மீதோ, மக்கள் நலனின் மீதோ எந்தவொரு அக்கறையும் இல்லை. காவல்துறை அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அடக்குவதிலேயே தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.” என்றார்.
ஜனநாயகப் பக்குவம் இல்லை
மேலும் பேசிய அவர், “முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அவர்களை த.வெ.க-வினர் கடுமையாக விமர்சித்தபோதும், திமுக அரசு இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. யார் விமர்சித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் ஜனநாயக மனப்பக்குவம் இந்த அரசிடம் இல்லை. யாருக்குப் பயந்து அரசியல் செய்கிறார்களோ அதே வழியைத்தான் பின்பற்றுகிறார்கள்.
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்களை மத்திய அரசு எப்படிக் கையாண்டதோ, அதேபோலத்தான் இங்கு ‘தெருக்குரல் அறிவு’ உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் இந்த த.வெ.க அரசு அடக்குமுறையைக் கையாண்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பெயரைச் சொல்லக்கூடத் தயங்கும் இந்த அரசு, அதே பாணியில்தான் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
