செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியை தேடும் பணியில் 24 ஆவது நாளாக சிறுமியை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 2-வது மகள் ஹேமலதா (வயது 7). அச்சிறுமி கடந்த 11-ஆம் தேதி மாலையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அன்றைய இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் (12-ஆம் தேதி) அதிகாலையில் சிறுமியைக் காணவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாயமான சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், 10 நாட்களுக்கு மேலாகியும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், இவ்வழக்கு சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றப்பட்டது.
கடந்த 14 நாட்களாகச் சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் பெற்றோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இவ்வழக்கில், அதே பகுதியை சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ராஜதுரையுடன் தொடர்புடைய அரவிந்த் என்ற இளைஞரிடம் காவல் துறையினர் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு, அரவிந்தை அப்பகுதியில் உள்ள வனப்பகுதி குகைகளுக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சிபிசிஐடி போலீசார், இன்று மீண்டும் அரவிந்திடம் விசாரணையைத் தொடர்ந்துள்ளனர். சிறுமி வனப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதுடன், வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்து 24 நாட்கள் கடந்தும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், சிறுமி பத்திரமாக மீட்கப்படுவாரா என்ற அச்சமும் சந்தேகமும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.









