எந்த தவறுக்கும் அடிமையாகி விடக்கூடாது என்று மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆண்டு தோறும், 10, 12ஆம் வகுப்புகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக இன்று (நவம்பர் 4) சென்னை, ஆர்.கே. கன்வென்ஷன் செண்டரில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கிய முதல்வர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் என்று தனது வழக்கமான பாணியில் உரையை தொடங்கிய முதல்வர் விஜய், “என்னுடைய செல்லங்கள், என்னுடைய நண்பா நண்பீஸ் எல்லோருக்கும் வணக்கம். உங்களுடைய அம்மா அப்பாவுக்கு வணக்கம்.
வெறும் வணக்கம் சொல்லி கடந்து போய்விட முடியாது. உங்கள் எல்லோருக்கும் பெரிய நன்றிகளை சொல்ல வேண்டும். குறிப்பாக என்னுடைய நண்பா நண்பீஸுக்கு கோடி கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு ஸ்டேஜுககு எப்போதுமே வலுவான அடித்தளம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி இந்த ஸ்டேஜுக்கு வந்த வலுவான அடித்தளமே நீங்கள் தான்.
இந்த நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் தான் நம்முடைய வாழ்க்கையின் உந்துசக்தியாகும்.
இந்த வரத்தை எனக்கு கொடுத்த கடவுளுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒரு முதலமைச்சராக நான் இங்கு வரவில்லை. எப்போதும் போல உங்கள் அண்ணனாகத்தான் வந்திருக்கிறேன்.
உங்களுக்கும் சேர்த்து தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். அதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை.
நான் ஏதோ அரசியல் பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். 2029 க்கு இப்பவே தயாராகிறேன் என்று நினைக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
நான் அரசியல் பேசவும் வரவில்லை. ஓட்டு கேட்டும் வரவில்லை. கட்சியைப் பற்றி பேசவும் வரவில்லை.
இப்போது கட்சி அரசியல் எல்லாம், உங்களுக்கு தேவையில்லாதது என்று நினைக்கிறேன். அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். சாதிக்க வேண்டும். பெரிய பெரிய உயரத்துக்குச் செல்ல வேண்டும்.
உங்களுக்கு பிடித்தமான வாழ்க்கையை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நம்முடைய தமிழ்நாட்டைப் பற்றி நீங்கள் யோசிக்கலாம்.
உங்களை நம்பித்தான் உங்களுடைய பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்த சமூகமும் உங்களை நம்பித்தான் இருக்கிறது. ஏன் தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது.
ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். அறிவுரை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனித்தன்மையுடன் ஒருவர் இருக்கிறார் என்றால் அது பலருக்கு பிடிக்காது. அதை எப்படி தொந்தரவு செய்யலாம் என்று முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அதற்கு தடை போட வேண்டும் என்று நினைப்பார்கள்.
எனவே யார் தடை போட்டாலும் கவலைப்படாதீர்கள்.
எப்பொழுது எல்லாம் உங்களுக்கு தடைகள் வருகிறதோ, அப்போது நீங்கள் வெற்றி பெற போகிறீர்கள் என்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். அவ்வளவுதான் உங்களுடைய வெற்றியை அவர்கள் முன்கூட்டியே உறுதி செய்து விட்டார்கள் என்று அர்த்தம்.
இதையெல்லாம் தாண்டி நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் என்றால் அவர்களுக்கு வயிற்றெரிச்சல் தான்.
உங்களுடன் இருப்பவர்களே டிஸ்கரேஜ் செய்வார்கள். ஆனால் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் நீங்கள் வலுவாக இருக்க வேண்டும். உறுதியாக இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு எதிர்பார்ப்போடு இருப்பீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக தான் நான் இருக்கிறேன்.
அதேசமயம் இந்த லஞ்சம் ஊழல் பக்கம் எல்லாம் போய்விடாதீர்கள். போதைப் பொருட்களை எல்லாம் பயன்படுத்தக்கூடாது. எந்த தவறுக்கும் அடிமையாகி விடாதீர்கள்.
நீங்கள் அப்படி இருந்து விட்டாலே, உங்களை சுற்றி இருக்கிற உங்களுடைய நட்பு வட்டாரமும் தவறு செய்ய யோசிக்கும்.
உங்களோடு நான் இருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். இதற்கு மேல் என்ன வேண்டும். இந்த பாண்டிங் எப்போதுமே தொடர வேண்டும். உறுதியாக இருங்கள். வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.
இன்று விருது வழங்கும் நிகழ்ச்சியில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ரிக்ஷிதா என்ற மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையோடு தங்க நெக்லஸும் முதல்வர் விஜய் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.









