பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வீதிகள் தொடர்ந்து போராட்ட களமாக உருமாறிக்கிடக்கின்றன.
போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர்ப்புகை… போலீசாரை நோக்கி வீசப்படும் பொருட்கள்… தடுப்புகளை அமைத்து நிற்கும் பாதுகாப்புப் படையினர்… பள்ளிகளுக்கு வெளியே மாணவர்கள் அமைத்த தடுப்புகள்… தீப்பற்றி எரியும் குப்பைத் தொட்டிகள்… ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் பேரணிகள்…
பிரான்ஸ் முழுவதும் நேற்று அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் இந்த காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
எங்கிருந்து கிளம்பியது போராட்டம்?
ஆனால் இந்தப் போராட்டம் திடீரென ஒரே நாளில் உருவானது அல்ல. பாரிஸ் புறநகரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், 2 வாரங்களுக்குள் பிரான்ஸ் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுத்து நிற்கிறது.
செப்டம்பர் 21-ம் தேதி பாரிஸ் புறநகரான கிரெடெல் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். “ஆசிரியர்கள் இல்லை; வகுப்புகளில் அளவுக்கு அதிகமான மாணவர்கள்; பள்ளிக் கட்டிடங்கள் மோசமாக உள்ளன” என்பதுதான் தொடக்கத்தில் அவர்களுடைய முக்கியக் குற்றச்சாட்டு. ஆனால் இந்தக் குரல் ஒரே பள்ளியுடன் நின்றுவிடவில்லை.
சமூக வலைதளங்கள் மூலம் மற்ற பள்ளிகளுக்கும் பரவியது. பாரிஸ் புறநகரிலிருந்து தொடங்கிய போராட்டம், அடுத்த சில நாட்களிலேயே நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றது.
மாணவர்கள் அதிகம்- ஆசிரியர்கள் பற்றாக்குறை
இந்த போராட்டங்களின் பின்னால் சில அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. பிரான்ஸ் பள்ளிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வகுப்புகளில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். சுமார் 20 சதவீத வகுப்புகளில் 35 பேருக்கும் அதிகமான மாணவர்கள் இருக்கின்றனர்.
2008-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது பிரான்ஸில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2.5 லட்சம் அதிகரித்துள்ளது.
பிரான்ஸின் உயர்நிலைப் பள்ளிக் கட்டிடங்களின் சராசரி வயது 61 ஆண்டுகள். தொழிற்கல்வி பள்ளிகளின் சராசரி வயது 71 ஆண்டுகள். 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் கட்டப்பட்ட அல்லது முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள் சுமார் 15 சதவீதம் மட்டுமே.
வீதிக்கு வந்த லட்சக்கணக்கான மாணவர்கள்
இந்தப் பின்னணியில்தான் நேற்று அக்டோபர் 6-ம் தேதி பிரான்ஸ் முழுவதும் மிகப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி , நாடு முழுவதும் 2,56,000 பேர் பேரணிகளில் பங்கேற்றனர். ஆனால் மாணவர் மற்றும் மாணவர் அமைப்புகள் வெளியிட்ட எண்ணிக்கை அதைவிட மிக அதிகம். அவர்களுடைய தரவுகளின்படி 4,50,000 பேர் வீதிகளில் இறங்கினர்.
இந்த போராட்டத்தின் போது பாரிஸின் Place de la Nation பகுதியில் நிலைமை பல கட்டங்களில் பதற்றமானது. கூட்டத்திலிருந்து போலீசாரை நோக்கி பொருட்கள் வீசப்பட்டன. அதற்கு பதிலடியாக போலீசார் கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தினர். தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் களத்தில் நிறுத்தப்பட்டது.
சில நேரங்களில் போலீசாரும் போராட்டக்காரர்களும் நேருக்கு நேர் நின்றனர். பின்னர் கூட்டம் பின்வாங்குவதும், மீண்டும் முன்னேறுவதுமாக நிலைமை மாறிக்கொண்டே இருந்தது.
நேற்று மட்டும் பிரான்ஸ் முழுவதும் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதல்களில் 43 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை இந்த மாணவர் போராட்டம் தொடர்பாக மொத்தம் 6,547 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டங்கள் தொடருவதால் அதிகரித்ததால் பள்ளிகளை திறந்து வைப்பதே அரசுக்கு நெருக்கடியாகிவிட்டது. அக்டோபர் 1-ம் தேதி சுமார் 30 சதவீத உயர்நிலைப் பள்ளிகள் போராட்டங்களால் பாதிக்கப்பட்டிருந்தன. அக்டோபர் 5-ம் தேதி 400 முதல் 500 பள்ளிகள் வரை மூடப்பட்டிருந்தன. பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் மட்டும் 160 பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது.
போராட்டங்களால் ஏற்பட்ட பொருளாதார சேதமும் அதிகரித்து வருகிறது.
பள்ளி முற்றுகைகள் மற்றும் வன்முறைகளால் ஏற்பட்ட சேதம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகம். இந்த போராட்டங்கள் பிரான்ஸ் நாடாளுமன்றத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.
பாலஸ்தீன கொடிகள்… உண்மை என்ன?
இந்தப் போராட்டத்தின் சில வீடியோக்களில் பாலஸ்தீன கொடிகள் இடம்பெறுவதாக சமூக வலைதளப் பதிவுகள் பரவி வருகின்றன. அதேநேரத்தில் போராட்டத்தில் வேறு அரசியல் அமைப்புகள், பல்வேறு சமூகக் குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிற இயக்கங்கள் இணைந்து வருவதையும் மறுக்க முடியாது. பாரிஸில் நடந்த மாணவர் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் புரட்சிகர இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். பாரிஸில் நேற்று நடைபெற்ற மாணவர் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அக்டோபர் 17-ம் தேதி அடுத்த கட்ட போராட்டத்தை நாடு தழுவிய அளவில் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
