கல்விக் கடன் கேட்டு இரண்டு வருடமாக காத்திருந்த மாணவியை பற்றிய விவரம் தெரிந்த பிறகு ஒரு மணி நேரத்தில் போராடி கல்விக் கடன் பெற்றுக் கொடுத்திருக்கிறார் திமுகவின் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன்.
திமுக உறுப்பினர் சேர்க்கையை மேற்பார்வையிட சென்றபோது மேலும் சில பணிகளுக்காக நேற்று (ஏப்ரல் 3) கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட வாணாபுரம் பகண்ட கூட்டு ரோட்டில் இருக்கும் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்.
எம்.எல்.ஏ. வருகிறார் என்று தெரிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டுவிட்டனர். ஒரு கட்சிக்காரர் ஒரு இளம் பெண்ணை அழைத்து வந்து, ‘அண்ணே… இந்த பொண்ணு பிஎஸ்சி நர்சிங் படிக்குதுண்ணே… பீஸ் கட்டலைனு ஒரு மாசமா காலேஜ் போகலைண்ணே. பேங்க் லோனுக்காக ரெண்டு வருசமா அலைஞ்சுக்கிட்டிருக்குண்ணே…’ என்று சொன்னதும் அந்த பெண்ணை அருகே அழைத்தார் எம்.எல்.ஏ.
’என் பேரு சுஷ்மிதா சார்’ என்று ஆரம்பித்து கடகடவென தனது நிலையை கூறினார் அந்த மாணவி. அருகே அவரது அம்மாவும் இருந்தார். உடனே எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் நிர்வாகிகளிடம், ‘நீங்க உறுப்பினர் சேர்க்கை பணியை பாருங்க இப்ப வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு… ‘வாம்மா அந்த பேங்குக்கு போவோம்’ என்று அந்த மாணவியை அழைத்துக் கொண்டே வாணாபுரம் இந்தியன் வங்கிக்கு சென்றார்.
இந்தியன் வங்கியின் மேனேஜரிடம், ‘சார்… இந்த பொண்ணுக்கு எஜுகேஷன் லோன் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களாமே? என்ன காரணம்? மேனேஜ்மென்ட் கோட்டாவுல படிக்குறவங்களுக்கு லோன் கொடுக்கக் கூடாதுனு ஏதாவது லிமிட்டேஷன் இருக்கா?’ என்று கேட்டார்.

அதற்கு மேனேஜர், ‘ அப்படி எதுவும் இல்லை சார்… இவங்களுக்கு நாலரை லட்சம் ரூபா வரைக்கும் லோன் வருது. அதைத் திருப்பிக் கட்டுற அளவுக்கு வெல்த் இவங்க ஃபேமிலிக்கு இல்லை’ என்று சொல்ல… ‘பணம் கட்ட முடியாம அதனால படிக்க முடியாம சிரமப்படுறாங்க’ என்று எம்.எல்.ஏ. சில நிமிடங்கள் வாதாடியும் சாக்குபோக்குகளை சொல்லிக் கொண்டே இருந்தார் மேனேஜர்.
உடனே பேங்க்கில் இருந்தபடியே கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு போன் செய்தார் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன். கலெக்டரிடம் விஷயத்தைச் சொல்லி, ‘மேனேஜர் தொடர்ந்து மறுக்குறாரு. உடனடியா பேங்க் மண்டல மேலாளர்கிட்ட பேசி அந்த பொண்ணுக்கு எஜுகேஷன் லோன் ஏற்பாடு செய்யுங்க சார். நான் பேங்க்லயே வெயிட் பண்றேன்’ என்று அழுத்தம் கொடுத்தார் எம்.எல்.ஏ. அதன் பின் கலெக்டர் வங்கியின் மண்டல மேலாளரிடம் பேச, அதன் பின் மண்டல மேலாளர் வாணாபுரம் வங்கியைத் தொடர்புகொண்டு அந்த மாணவிக்கு லோன் கொடுக்க சம்மதித்திருக்கிறார். கல்விக் கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது என்று அறிந்ததும் அந்த மாணவி சுஷ்மிதாவுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. இன்னும் சில நாட்களில் மாணவிக்கு லோன் கிடைக்கும் என்று வங்கியில் சொல்லியிருக்கிறார்கள்.

அதுபற்றி சுஷ்மிதாவே அங்கே செய்தியாளர்களை சந்தித்து, “நாங்க ரொம்ப கஷ்டப்படுற ஃபேமிலி. எப்படியோ சமாளிச்சுடலாம்னு போன வருஷம் ப்ரைவேட் கால்ஜேல நர்சிங் சேர்த்தாங்க. இப்ப செகண்ட் இயர் படிக்குறேன். குடும்ப சூழ்நிலையால இந்த வருசம் ஃபீஸ் கட்ட முடியல. ஃபீஸ் கட்டுற டயம் முடிஞ்சிடுச்சு. ஃபீஸ் கட்டினாதான் க்ளாஸ் அட்டென் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க.
நான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போதே எஜுகேஷன் லோன் கேட்டிருந்தோம். ஆனா அப்ப பேங்க்ல, மேனேஜ்மென்ட் கோட்டாவுல போனவங்களுக்கு லோன் தர முடியாதுனு சொல்லிட்டாங்க. உள்ளூர் பெரியவங்க, கவுன்சிலர் மூலமா பேசினோம். அப்பவும் அதையேதான் சொன்னாங்க. அலைஞ்சி பாத்துட்டு இன்னிக்கு எம்.எல்.ஏ. ஐயா இங்க வர்றார்னு தெரிஞ்சு ஒரு அண்ணாவை கூட்டிக்கிட்டு வந்தோம். ஒரு மனு கொடுத்தோம்.
உடனே எம்.எல்.ஏ. என்னைய கூட்டிக்கிட்டு இந்தியன் பேங்குக்கு போனாரு. அங்க போயி நேர்ல கேட்டப்ப எம்.எல்.ஏ.கிட்டயும் அதே பதிலைதான் சொன்னாங்க. பேங்க்ல இருந்தபடியே உடனே கலெக்டருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லியிருக்காங்க. அதன் பிறகு எனக்கு லோன் கொடுக்க பேங்க்ல சம்மதிச்சிட்டாங்க. படிக்க முடியாத பசங்க என்னை போல சமூகத்துல நிறைய பேரு இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் இதேபோல பேங்க்ல லோன் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தா ரொம்ப உதவியா இருக்கும். எம்.எல்.ஏ. ஐயாவுக்கு என்னோட நன்றி” என்று நெகிழ்ந்தார் சுஷ்மிதா.

இதுமட்டுமல்ல… அந்த மாணவி படிக்கும் கல்லூரிக்குத் தொடர்புகொண்டு மாணவியின் குடும்ப நலனை கருதி கட்டணத்தில் கொஞ்சம் சலுகையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்.
ஒரு வருடமாக இழுத்தடித்த கல்விக் கடனை ஒரு மணி நேரத்தில் பெற்றுக் கொடுத்த எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு மாணவி சுஷ்மிதாவும், அவரது தாயாரும் நன்றி சொல்லி ஈரக் கண்களோடு புறப்பட்டனர். ’அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்றார் மகாகவி பாரதி.
–வேந்தன்