கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மி கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 2வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
2022ம் ஆண்டு மார்ச் மாதம் 5 மாநிலங்களில் (உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர்) நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
பஞ்சாப்பில் பகவந்த் மான் முதல்வராக இருக்கிறார். அதுபோல் கோவாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2 எம்.எல்.ஏக்கள் வெற்றிபெற்றனர்.
இதையடுத்து டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக அண்மையில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே பிரச்சாரப் பணியில் இறங்கிவிட்டார் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்த நிலையில்தான் கோவாவில் மாநிலக் கட்சியாக ஆம் ஆத்மி தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளது. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற நிலை எட்டப்பட்டால் தேசிய கட்சி என்ற நிலையை ஆம் ஆத்மி கட்சி எட்டிவிடும்.
இதுகுறித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் ஆகஸ்டு 9, தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி மற்றும் பஞ்சாபிற்குப் பிறகு, இப்போது கோவாவிலும் ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உள்ளது.
இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்தால், நாங்கள் அதிகாரப்பூர்வமாக தேசியக் கட்சி என்று அறிவிக்கப்படுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்