கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவத்தின் போது விஜய் (Vijay) மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டாம் என தடுத்தது அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் (Stalin) என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழாவில் எ.வ.வேலு பேசியதாவது: பன்முகம் கொண்ட தலைவர் யார் என்று சொன்னால், அது கலைஞர் மட்டும்தான். அவருக்கு இணையானவர்கள் யாரும் கிடையாது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இலக்கியவாதி, கவிஞர், திரைப்பட வசனகர்த்தா, நாடக ஆசிரியர், சிறந்த நிர்வாகி; இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர்களில் முதன்மையானவர்.
தமிழ் ஞானத் தந்தை கலைஞர்
திரைப்படத் துறையைப் பொறுத்தவரை அவர் ஒரு வசனகர்த்தா மட்டுமல்ல, 28-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த தயாரிப்பாளரும் அவர்தான். அப்படிப்பட்ட பன்முகம் கொண்ட தலைவர் கலைஞர் என்று சொன்னால் அது மிகையாகாது. நான் அவரைத் ‘தமிழ் ஞானத்தந்தை’ என்று அழைப்பதற்கு ஒரே காரணம், கடைசியில் இருப்பவர் முதல் அத்தனை தமிழர்களையும் ஒன்றிணைத்தவர் அவர். ‘உடன்பிறப்பே வா’ என்று அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும், ஒற்றைச் சொல்லிலேயே ஒட்டுமொத்த தமிழினத்தையும் கட்டிப்போட்டவர் அந்தத் தலைவன்.
திமுக ஒரு பீனிக்ஸ் பறவை
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பீனிக்ஸ் பறவை. அது என்ன ஆனாலும் மீண்டும் எழுந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு உதாரணம் இந்த மண். 1991 பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளில் நின்றும், இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றோம். 1996-லும், 2006-லும் நம்முடைய அண்ணன் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான் வெற்றிபெற்றது. 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள், மீண்டும் 2006-ல் எனத் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்தத் துறையில் நான் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சராக இருந்து, சுப்ரீம் கோர்ட்டே பாராட்டுகின்ற அளவுக்கு மிகச் சிறப்பாக அந்தத் துறையை நடத்தினேன்.
மக்களுக்காக உழைத்த ஸ்டாலின் (STALIN)
ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் எனக்குத் தெரிந்து முதல்வராக மு.க.ஸ்டாலின் தூங்கிய நேரம் இரண்டு மணி நேரம் தான் இருக்கும். ஒருநாள் ரெண்டே கால் மணிக்கு என்னுடைய தொலைபேசி அடிக்கிறது. அந்த நேரத்தில் யார் அடிக்கிறார்கள், திருவண்ணாமலையில் யாரோ தொகுதிக்காரன் பிரச்சனையா? என்று யோசனை பண்ணி போனை எடுக்கிறேன். பார்த்தால் முதலமைச்சருடைய போன். ‘அண்ணா’ என்று அழைத்து, ‘தூங்கிட்டீங்களா?’ என்று கேட்டார். ரெண்டே கால் மணிக்கு நான் எப்படி தூங்க முடியும்? நான் பக்குவமாக, ‘அண்ணா, 12 மணி வரைக்கும் படித்துக்கொண்டிருந்தேன், இப்பதான் கண்ணு அசந்தது’ என்றேன். ‘தூங்கு’ என்று கூட அவர் சொல்லவில்லை. ஏன்னா அவர் தூங்காத நமக்காகப் போன் பண்றார், நான் தூங்குகிறேன் என்று எப்படிச் சொல்ல முடியும்?
அப்பொழுது கேட்கிறார், ‘மதுரையில அண்ணன் கலைஞர் பெயரிலே ஒரு நூற்றாண்டை முன்னிட்டு அங்கே ஒரு நூலகம் கட்டிக் கொண்டிருக்கிறோமே, அது எப்பொழுது முடியும்?’ என்று கேட்கிறார். நூலகம் கட்டுறது மதுரையில, அண்ணன் கலைஞருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தென்னகப் பகுதி மக்கள் அறிவாளியாக வேண்டும் என்ற ஒரே அடிப்படையிலே கட்டப்படுகிற அந்த அறிவு உலகத்திற்காக நூலகம். ரெண்டே கால் மணிக்கு அவர் கேட்கிறார் என்றால், அந்த முதலமைச்சர் தூங்கினாரா, தூங்கலையா என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள்.
ஆக, அந்த நாட்டு மக்களுக்காக இரண்டு, மூன்று மணி நேரம் மட்டும் தூங்கிவிட்டு, நமக்காக உழைத்த தலைவர் அவர். அவர் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டார் என்று நினைக்கிறபோது எங்கள் கண்கள் எல்லாம் கலங்குகிறது.
இன்றைய முதல்வர் விஜய், தேர்தலுக்கு முன்பாக, முதலமைச்சர் ஆவதற்கு முன்னால் எத்தனையோ பொய், புருஷார்த்தங்கள் மற்றும் கட்டுக்கதைகளை எல்லாம் எடுத்துச் சொன்னீர்கள். ஆனால், முதலமைச்சரான உடனேயே, அந்தப் பதவிக்குரிய கண்ணியம் இருக்கிறது.
விஜய்யின் திருச்சி பேச்சு
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று திருச்சிக்குச் சென்று தனது உரையை அவர் ஆற்றினார். அப்போது அவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? ‘நான் முதலமைச்சராக வந்திருக்கிறேன். எனக்கு வழிகாட்டியாக இருந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்திருக்கிறார். அவர் எப்படி எல்லாருக்கும் பொதுவான ஆட்சியை நடத்தினாரோ, அதைப் போலவே நானும் நடத்துவேன்’ என்று சொல்லியிருந்தால், நான் கூட அவரைப் பாராட்டியிருப்பேன்.
ஆனால், அங்கே சென்று நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? ‘எனக்கு ஏதோ சினிமாவில் நடித்த காரணத்தினால் வாக்களித்தார்கள்’ என்று பேசுகிறார்கள். இதை நினைத்தால் எனக்கு வாயில் ஏதாவது வந்துவிடும் என்று பேசுகிறீர்கள்.
உங்களுக்கு அரசியல் தொடர்போ, சமுதாயத் தொடர்போ அல்லது சமூகப் பணியோ எதுவும் கிடையாது. உங்களுக்கு இருந்த ஒரே துறை சினிமா மட்டும்தான். அந்தத் துறையின் மூலமாகத்தான் வாக்குகள் கிடைத்தன என்று கூறினால், அதில் உங்களுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?
மிஸ்டர் CM சார்..
மிஸ்டர் CM சார், மிஸ்டர் CM சார். இல்லாத பொல்லாததெல்லாம் சொன்னீங்க. ஆட்சி அதிகாரம் இருக்கிற பொழுது நான் உள்ளபடியே ஒத்துக்கொண்டு பேசுகிறேன், ஒரு கணம் நாங்கள் ஏமாந்து விட்டோம், ஒரு கணம் நாங்கள் ஏமாந்து விட்டோம். ஏமாந்து விட்டோம் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டு முதலமைச்சருடைய (மு.க.ஸ்டாலின்) தாயுள்ளம் அதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
கரூர் எஃப்.ஐ.ஆர். போட்டிருந்தால்..
41 பேர் கரூரில் மரணம் அடைந்தார்கள். காவல்துறை எஃப்ஐஆர் போடணுமா? இல்லையா? அதிகாரிகள் எல்லாம் எஃப்ஐஆர் போட வேண்டும் என்று கருதுகிறார்கள், சொல்லுகிறார்கள். ஆனால் என் தலைவன் (மு.க.ஸ்டாலின்), ”எந்த கட்சித் தலைவனாவது தன் தொண்டன் சாவான் என்று எதிர்பார்ப்பானா? எந்த கட்சித் தலைவனாவது தன் தொண்டன் சாவான் என்று எவனாவது அதற்கென்று சதி வேலை செய்வானா?” என்று சொல்லி அத்தனை பேரும் எஃப்ஐஆர் போட வேண்டும் என்று சொன்ன பொழுது கூட, விஜய் மீது எஃப்ஐஆர் போடாதே என்று சொன்ன தாயுள்ளம் கொண்ட தலைவன். ஒரு கணம் அன்றைக்கு எஃப்.ஐ.ஆர். போட்டிருந்தால், இன்றைக்கு நிலைமையே வேறாக மாறியிருக்கும். இவ்வாறு எ.வ.வேலு பேசினார்.
