டெல்லி சென்றது கரூர் சிபிஐ வழக்கிலிருந்து தப்பிக்கவா என முதல்வர் விஜய்க்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக மகளிரணி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 13) நடைபெற்றது.
இதில் பேசிய முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், ”தேர்தலுக்கு முன்னர், ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மண்டல மாநாடுகள், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம், சமூக வலைத்தளங்களின் வழியான செயல்பாடுகள் என மகளிர் அணியைச் சேர்ந்த நீங்கள் அனைவரும் பல்வேறு பணிகளைச் செய்யும் அணியாக மிக எழுச்சியோடு செய்து முடித்தீர்கள்.
திமுக பெற்றிருக்கும் வாக்குகளுக்கு உங்களுடைய முயற்சிகளும் முக்கிய காரணமாக அமைந்தது என்பதை, யாரும் மறுத்திட மறைத்திட முடியாது. அதற்காக முதலில் என்னுடைய மனப்பூர்வமான நன்றியை உங்கள் அத்தனை பேருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிற நாம், மீண்டும் ஆளும் கட்சியாக மாற வேண்டும் என்றால், இன்னும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும். அதற்கான களமாகத்தான் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

“ஆறு மாதம் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கிற மாதிரி இந்த ஆட்சி நடக்குமா?” என்று, ஏற்கனவே நான் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசினேன். உடனே, அதை உண்மைக்கு மாறாகத் திரித்து, “ஆட்சியைக் கவிழ்க்க சதியா?” என்று கேட்டு எதிரிகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். நான் ஏற்கனவே நிறைய முறை சொல்லிவிட்டேன்.
இன்னொரு முறையும் இந்தக் கூட்டத்தில் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். தி.மு.கழகம் பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகத் தன்னுடைய கடமையை உறுதியாகச் செய்யும். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்; கேள்விகளை கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகாலம் நடைபெற்ற நம்முடைய திராவிட மாடல் ஆட்சியே மகளிருக்கான ஆட்சிதான் என்பதைப் பற்றி, இங்கே எனக்கு முன்பு தலைமையேற்றுப் பேசிய தங்கை கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
ஆட்சிக்கு வந்து முதல் கையெழுத்தான விடியல் பயணத்தில் தொடங்கி, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் என்று ஏராளமான புதுமையான திட்டங்களை நாம்தான் உருவாக்கினோம். அது மக்களுக்குச் சரியாகச் சென்றடைகிறதா என்று பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்தோம். அதுமட்டுமல்ல, இப்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட பெண்களுக்குத்தான் நிறைய வாக்குறுதிகள் நாம் கொடுத்தோம். குறிப்பாக, 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுக்கிற இல்லத்தரசி திட்டம், அதுமட்டுமா, உரிமைத்தொகை உயர்வு என்று நிறைய இருக்கின்றன.
ஆனால், இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று, நீங்களே சோஷியல் மீடியாவில் நிறைய வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், சென்னையையும் பல ஊர்களையும் இருட்டில் மூழ்கடிக்கிற மின்வெட்டு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என்று நடந்த நாடகம் என்று இப்படிப் பலதரப்பட்ட மக்களும், “ஏன்டா இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம்” என்று கோபமாக, ஆவேசமாக, வருந்திக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு போட்டவர்களும் வருத்தப்படுகிறார்கள்; ஓட்டு போடாதவர்களும் வருத்தப்படுகிறார்கள். அதுதான் இப்போது இருக்கும் நிலை!

சாதாரணமாக சொல்கிறார்கள்… “ஏதோ இரண்டு ஓட்டு போட்டோம். நீங்கள்தான் ஆட்சிக்கு வருவீர்கள் என்று நினைத்தோம். இப்படி ஆகிவிட்டதே!”
இப்போது இந்த ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டன. நியூஸ் சேனல்களை வைத்தாலே, கொடூரமான குற்றச்சம்பவங்கள்தான் செய்திகளாக வருகின்றன. எனக்கு முன்பு பேசிய தங்கை கனிமொழி சொன்னார்,
சமீபத்தில் திருவைகுண்டத்தில் ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு, அந்தக் கட்சியினரே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி இரண்டு அமைச்சர்களிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. நேற்று கூட, ஆலந்தூரிலும், சேலத்திலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகச் செய்திகள் வந்தன.
தேர்தலுக்கு முன்பு இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பு பற்றித்தான் தொடர்ந்து பேசினார். இன்னொன்றும் சொன்னார்; “எங்கு நல்ல விஷயம் நடந்தாலும் அது நம்ம பசங்கதான் செய்ததாக இருக்க வேண்டும்” என்று சொன்னார். ஆனால் இன்றைய நிலை என்ன?
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரசாரத்தில் பேசும்போது, “த.வெ.க. ஆட்சி பாதுகாப்பு கொடுக்கும்” என்று சொன்னார்கள். ஆனால், இப்போது த.வெ.க.விடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கிற நிலைக்கு இன்றைக்குத் தமிழ்நாடு இருக்கிறது.
அதிமுகவை ஷாப்பிங் செய்யும் விஜய்

பொதுவாக எல்லோரும் ஷாப்பிங் போனால் என்ன வாங்குவார்கள்? டிரெஸ் வாங்குவார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால், இப்போது நம்முடைய முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா?
அ.தி.மு.க. MLA-க்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார். நமக்கு என்ன சந்தேகம் என்றால், அவர் ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா அல்லது அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிற மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அவர் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க. MLA-க்களை த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார். இப்போது, அவர்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அடுத்த நொடியே தன்னுடைய கட்சியில் இணைத்திருக்கிறார்.
பாஜகவின் ஜெராக்ஸ்

இந்த மாதிரி நியூஸ் எல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? பா.ஜ.க. மற்ற மாநிலங்களில் செய்வதையே இங்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார். அதாவது, பா.ஜ.க.வின் ஜெராக்ஸ் மாதிரி செயல்படுகிறார். உதவி என்று கேட்டபோது அவருக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் எல்லாம், இதைப் பற்றிப் கேட்கும்போது, தர்மசங்கடத்தில் தவிக்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு கட்சியில் பல பேருக்கு இடையில் ஒருவருக்குத்தான் வேட்பாளராக வாய்ப்புக் கிடைக்கிறது. எத்தனையோ தொண்டர்கள் உழைக்கிறார்கள், கூட்டணிக் கட்சிகளும் இவர்களது வெற்றிக்காக உழைக்கிறார்கள்.
இத்தனை பேரின் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, வாக்குப்பதிவின் போது கைவிரலில் வைத்த மை அழிவதற்குள், ரிசைன் செய்துவிட்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஜனநாயக சக்திகள் நியாயமாக இதைக் கேள்வி கேட்க வேண்டுமா, வேண்டாமா? ஒரே மாதத்தில் MLA-க்கள் ரிசைன் செய்துவிட்டு த.வெ.க.வில் சேர்கிறார்களே, அந்தளவுக்கு அப்படி என்ன ஆஃபர் த.வெ.க.வில் கிடைத்திருக்கும் என்று பேச வேண்டுமா வேண்டாமா? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிற அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது.
முதல்வர் கான்ஃபிடண்ட்டாக இருக்கிறாரா!
முதலமைச்சர்தான் மேடைக்கு மேடை “கான்ஃபிடண்ட்டா இருங்க” என்று சொல்கிறாரே தவிர, அவரே முதலில் கான்ஃபிடண்ட்டாக இருக்கிறாரா! அதனால்தான், தீர்ந்துபோன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார். தீர்ந்துபோன சக்தியிடமே திருடுகிற இவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று பாருங்கள். பாலியல் வன்முறைகள், அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என்று நடப்பதையெல்லாம் பார்த்தால், யாராலாவது விமர்சிக்காமல் இருக்க முடியுமா? வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு டைம் தரலாம்; ஆனால், பொதுமக்களுடைய பாதுகாப்பு பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?
முதல்வர் எப்படி பேசினார் தெரியுமா?
நேற்று முன்தினம், டெல்லியில் பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் எல்லாம் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு இங்கிருக்கும் முதலமைச்சரும் போயிருக்கிறார். அங்கு சென்று என்ன பேசினார் என்று உங்களுக்குத் தெரியும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு உரிமைகளுக்காக நாம் வைத்த கோரிக்கைகளில் சிலவற்றையும், நமது ஆட்சியில் செய்த சாதனைகளில் சிலவற்றையும் தன்னுடைய உரையில் முதலமைச்சராக இருக்கும் விஜய் பேசியிருக்கிறார். அதை நாம் வரவேற்கிறோம். அதே சமயத்தில், நான் முதலமைச்சராக இருக்கும்போது, இதே மாதிரி டெல்லி சென்று பேசியபோது, இப்போது முதலமைச்சராக இருக்கிறவர் என்னவெல்லாம் பேசினார் என்று தெரியுமா? அவருக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன்.
கரூர் வழக்கிலிருந்து தப்பிக்கவா?

“அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகப் போனார்கள்”, “பா.ஜ.க. காலில் விழுந்து மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறார்கள்”, “அதனால்தான் குரூப் ஃபோட்டோ எடுக்கும்போது முன்வரிசையில் நிற்க ஸ்டாலினுக்கு இடம் கொடுத்தார்கள்”. இதெல்லாம் யார் சொன்னது? அவர் சொன்னது. இப்போது நீங்கள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள், நான் கேட்கவா? இப்போது நான் கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். Mr. Chief Minister, மாண்புமிகு முதலமைச்சர், கரூர் சி.பி.ஐ. வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா? பா.ஜ.க.வை உறுதியாக விமர்சித்துப்பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியையெல்லாம் கேட்டு, ஒரு முதலமைச்சராக நீங்கள் அரசுக் கூட்டத்தில் கலந்துகொண்டதை உங்களை மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை.
எல்.கே.ஜி. – யூ.கே.ஜி. சண்டை!
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மறுத்த காரணத்திற்காகத் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு விடுவிக்காமல் பிளாக்மெயில் செய்தார்கள். தி.மு.க. அரசு அதை எதிர்த்துப் போராடினோம். அதில் கூட இப்போது இருக்கும் முதலமைச்சர் என்ன சொன்னார்? பா.ஜ.க. அரசைக் கண்டிக்காமல், “கொடுப்பது அவர்கள் கடமை, வாங்குவது இவர்களது உரிமை. ஆனால் பாசிசமும் பாயாசமும் எல்.கே.ஜி. – யூ.கே.ஜி. பசங்க மாதிரி சண்டை போடுகிறார்கள்” என்று நக்கல் நையாண்டி செய்தீர்களே… இப்போது நீங்கள் மட்டும் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள்? நிபந்தனைகள் இல்லாமல் நிதியைக் கொடுக்க வேண்டும் என்றுதானே நீங்களும் கேட்டிருக்கிறீர்கள்?
இனி சினிமா இல்லை… ஆட்சி நிர்வாகம்

இப்படித்தான் செய்ய முடியும்; ஏனெனில், இது சினிமா இல்லை, ஆட்சி நிர்வாகம். முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள். மாநில உரிமைகள் சார்ந்த எதுவாக இருந்தாலும் திராவிட மாடல் அரசு போட்டுத் தந்த ப்ளூப்ரிண்ட் படிதான் யாராக இருந்தாலும் செயல்பட முடியும். சொல்லப்போனால், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் தமிழ்நாடு, பெண்கள் அதிகம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு, நமது மாணவர்களுக்கு நீட் விலக்கு என, தி.மு.க. அரசின் பாலிசி நோட் மாதிரிதானே முதலமைச்சரின் ஒட்டுமொத்த பேச்சும் இருந்தது? ஈயடித்தான் காப்பியாக இருந்தால் நன்றாக இருக்காது என்று, 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று நான் சொன்னதை மட்டும், 2036-க்குள் ஒன்றரை ட்ரில்லியன் டாலர் என்று, காரில் பட்டி பார்ப்பது போன்று, முதலமைச்சர் கொஞ்சமாக மாற்றி பேசிவிட்டு வந்திருக்கிறார். இருந்தாலும் அதற்காக என்னுடைய வாழ்த்துகள். Mr. Chief Minister அவர்களுக்கு நன்றி. Oh, Sorry மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!
இப்போது நான் கேட்ட கேள்விகளையெல்லாம் இங்கு வந்திருக்கிற மகளிரணி உடன்பிறப்புகள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நம்மை நம்பி ஒரு கோடியே 55 லட்சம் பேர் வாக்களித்திருக்கிறார்கள்; அவர்களுடைய நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும். எனவே, விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது; லட்சக்கணக்கான இளம் பெண்களைத் தி.மு.க.வை நோக்கி ஈர்த்து வர வேண்டும். அதுமாதிரி நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். நம்மிடம் வரலாறு இருக்கிறது, கொள்கை இருக்கிறது, சாதனை இருக்கிறது, எதிர்காலத்திற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. இது எல்லாவற்றையும் அவர்களுக்குப் புரிகிற மாதிரி சொல்லுங்கள். புரிந்து கொள்ள ஆரம்பித்தால், அவர்கள் நிச்சயம் தி.மு.க.வை நோக்கித்தான் வருவார்கள். அதற்கான பொறுப்பும் கடமையும் மகளிரணியினரான உங்களிடம்தான் இருக்கிறது.
உங்களுடைய உழைப்பை கொடுங்கள்
நம்முடைய இயக்கம், அறிவியக்கம் என்பதைக் காட்டுங்கள். எல்லோரையும் நம்முடைய இயக்கத்தை நோக்கி அழைத்து வாருங்கள். தலைவர் கலைஞர்தான் அடிக்கடி சொல்வார்: “கட்சி என்பது தலை! ஆட்சி என்பது கிரீடம்! தலை இருந்தால் கிரீடத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் கிரீடத்தை மட்டும் வைத்துக் கொண்டு, தலையைத் தேட முடியாது.”
இப்போது, நாம் தலையைப் பலப்படுத்துகிற பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். நம்முடைய பலம், நம்முடைய கட்சியின் அமைப்பு முறை. அதனால்தான், “இந்தக் கருணாநிதியின் வாழ்க்கையே முடிந்தாலும் தி.மு.க.வின் வாழ்க்கை முடியாது” என்று தலைவர் கலைஞர் சொன்னார். தி.மு.க.வின் பயணம் தொடர உங்களுடைய உழைப்பைக் கொடுங்கள், கொடுங்கள், கொடுங்கள் என்று கூறி, நான் எப்போதும் உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக, சகோதரனாக, ஒட்டுமொத்தமாக உங்களின் உடன்பிறப்பாக இருப்பேன் என்ற உறுதியைச் சொல்லி, உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லி விடைபெறுகிறேன்” என்று கூறினார்.
