அரசு பள்ளிகளில் பரம்பொருள் அறக்கட்டளையின் மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சாதிய மதவாத வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம் என்று திமுக மாணவர் அணி கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 6) தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் “கலைஞர் அரங்கத்தில்” மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் அனைத்து மாவட்ட, மாநில, மாநகர மாணவர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தை தமிழ்நாடு முழுவதும் அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாணவர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
“தனித் தீர்மானம்
அறிவார்ந்த, சமத்துவ சமூகம் உருவாக, மத – சாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம்.
“கல்வியினுடைய குறிக்கோள் என்பது அறிவை வளர்க்க, நமது இழிவையும் முட்டாள்தனத்தையும் மூடநம்பிகையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டும்” என்ற பெரியாரின் கொள்கை வழிநின்று கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றும் அரசாக அண்ணாவின் ஆட்சி காலம் தொடங்கி கலைஞரின் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலம் வரை தொடர்கிறது.
அண்மைகாலமாக ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் சாதிய, மதவாத உணர்வுகளை முறியடித்து, இளைய தலைமுறையினரை அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் தேடலோடு கூடிய (Scientific Temper) அறிவார்ந்த சமுதாயமாக கட்டமைத்திடவும், பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து பெரியார், அண்ணா, கலைஞர் காணவிரும்பிய சமத்துவ சமுதாயத்தை நிறுவிடவும், திமுக மாணவரணி கல்வி நிலையங்களில் அமைக்க இருக்கும் ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் – 1
கலைஞர் தொடங்கிய “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தை” இன்று தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் அமைக்க பணியாற்றுவீர்.
திமுக தலைமைக் கழகத்தால் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களிடம் வழங்கப்படுகிற தமிழ் மாணவர் மன்ற உறுப்பினர் பதிவு படிவம் மற்றும் உறுப்பினர் அட்டையை கொண்டு தங்களது மாவட்டத்தில் உள்ள கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் “தமிழ் மாணவர் மன்றம்” உறுப்பினர் சேர்க்கையை முழுமூச்சுடன் தொடங்கி, மன்றத்தில் இணைந்தவர்களுக்கு அவர்களுக்கான உறுப்பினர் அட்டையை வழங்கிட வேண்டும்.
இப்பணியினை திட்டமிட்டு முறையாக மேற்கொள்ளும் வண்ணம் தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி மாநில துணைச் செயலாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களின் மாவட்டக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி நிர்வாகிககளை ஒருங்கிணைத்து, செப்டம்பர் மாத இறுதிக்குள் இப்பணியினை மேற்கொள்ள இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கல்லூரிகளில் மன்றத்தில் சேர்ந்த உறுப்பினர்களிடம் நேர்காணல் நடத்தி, 2024-25 கல்வி ஆண்டிற்கான மன்றத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்து, தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இரு நகல்கள் கொண்ட படிவத்தை பூர்த்தி செய்து, மாநில துணைச் செயலாளர்களிடம் வழங்க வேண்டும்.
மாநில துணைச் செயலாளர்கள் படிவத்தை பெற்று, பரிந்துரை செய்து மாநில செயலாளரிடம் கையொப்பம் பெற்று கல்லூரிகளில் அமைக்கப்பட்ட மன்றத்திற்கு ஒரு நகலை அறிவிப்பாக வழங்கிடவும், தலைமைக் கழகத்திடம் ஒரு நகலை பதிவு செய்யதற்கான வழிமுறையை பின்பற்ற இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் – 2
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனங்கள்!
ஒன்றிய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது, சமூகநீதி-சமத்துவம்-சமவாய்ப்புக்கு எதிரானதாகவும், அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய மாநில அரசின் உரிமைகளுக்கும், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கும் எதிரானது. அறிவியல் பூர்வமான கல்வி முறைக்கு மாறாக பழைமைவாதத்திற்கு உரியதாக உள்ளது.
மூன்று-ஐந்து-எட்டு ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டுவந்து, மாணவர்கள் பள்ளி படிப்பை நிறைவு செய்ய முடியாத வகையில் இடைநிற்றலை உருவாக்கி அனைவருக்கும் கல்வி வழங்கும் வாய்ப்பை சிதைக்கும் வகையில் உள்ளது போன்ற பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
மேலும், மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் உரிமைகளை சிதைத்து விட்டு, அனைத்து உயர்கல்வி நிலையங்களுக்கும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கும் முறைகளை கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாது என்றும், தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், ஒன்றிய அரசின் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க மறுக்கிறது.
அரசமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்தியாவின் கல்வித் துறையில் முதல் மாநிலமாய் விளங்கும் தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு கல்வித் துறையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னோடி திட்டங்களை முடக்கி விட வேண்டுமென்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி நோக்கத்தில் நியாயமாக வழங்க வேண்டிய நிதியை தர மறுக்கும் பா.ஜ.க. அரசின் இச்செயல்பாடு மிக கண்டனத்திற்குரியது.
எனவே, மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசிற்கு வழங்க வேண்டிய நிதியை விரைவாக வழங்கிட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 3
தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை விமர்சித்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுக்கு கண்டனம்!
தமிழ்நாட்டிலுள்ள கல்வி முறை தரமற்றது என்று ஆளுநர் விமர்ச்சித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. அவருடைய அபத்தமான பேச்சுகள் மாநில அரசிற்கு எதிராகவும், திராவிட இயக்க சிந்தனைக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் உள்ளது.
சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் மனுதர்ம சாஸ்திரத்தை விவரிக்கும் கருத்துப்படங்களும், அறிவியலுக்கு மாறான புராண இதிகாச கருத்துகளை உள்ளடக்கிய பாடங்களும் இருப்பதை நாடே அறியும்.
இந்திய விடுதலை போராட்டக் களத்தில் தமிழர்களின் பங்களிப்பை கூட மறைக்கும் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.சி. கொண்டிருக்கும் நிலையில், அறிவியல் பூர்வமாகவும், தமிழர்களின் பண்பாடு மற்றும் தொன்மைகளை முழுக்கச் சொல்லியும், தமிழ்நாட்டில் குறிப்பாக தென்னகத்தில் ஏற்பட்ட சமூக விடுதலை போராட்டத்தின் வரலாறுகளையும் அவசியம் அறிந்து பாடத்திட்டத்தில் கொண்டுள்ளது தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம்.
அறிவியல் பூர்வமான அத்தனை முன்னெடுப்புகளையும், உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியினை விரைவாக பாடத்திட்டத்தில் கொண்டு வந்து சேர்த்ததும் தமிழ்நாடு அரசு என்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும், அது தரம் குறைவாக உள்ளது என்று விமர்சிக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். பயிற்சியாளரைப் போன்று செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சுகளுக்கு தி.மு.க. மாணவர் அணி கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது.
அவரது இந்த அணுகுமுறையை திருத்திக் கொள்ளாமல் இருப்பாரேயானால், திமுக தலைவரின் அனுமதிப் பெற்று விரைவில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை முன்னெடுக்கும் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் – 4
அருந்ததியர் சமுதாயத்திற்கு கலைஞர் கொடுத்த 3% உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு!
படிநிலைப்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுடைய ஜாதிய அமைப்பில் கடைசி அடுக்கில் இருக்கும் அருந்ததியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தி.மு.கழக ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 3% உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
சமூக நீதியையும் சமத்துவத்தையும் தனது உயிர் மூச்சாய் கொண்ட கலைஞர் இடஒதுக்கீட்டின் பலனை அருந்ததியர் சமூக மக்களும் பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வந்த “அருந்ததியர்களுக்கு 3% உள் ஒதுக்கீடு” சட்டம் 15 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது திமுகவின் சமூகநீதி கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
தீர்மானம் – 5
தொழில் வளர்ச்சியில் தெற்கு ஆசியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி!
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டை தெற்கு ஆசியாவிலேயே முன்னணி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் பல்வேறு முன்னெடுப்புகளை, திட்டங்களை செயல்படுத்தி வரும் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களை திமுக மாணவர் அணி நன்றி உணர்வுடன் பாராட்டுகிறது.
தீர்மானம் – 6
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழ்நாட்டை உயர்த்திய உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி!
தெற்காசியாவில் முதன் முறையாக சென்னையில் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா 4 கார் பந்தயம் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு – தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டி தெற்காசியாவிலேயே நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டியாகும்.
இப்போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் race tourism மேம்படுவதுடன் ஃபார்முலா 1 கார் பந்தய விளையாட்டை நோக்கி பல்வேறு இளைஞர்கள் வருவதற்கு தொடக்கப்புள்ளியாக அமையும்.
இப்படி தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை வெற்றிகரமாக செயல்படுத்தி இன்று இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழ்நாட்டை உயர்த்திய திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் – 7
தமிழினத்தை வளம்பெறச் செய்த, தமிழர்களின் உயிர்மூச்சாய் விளங்கும் திமுகவின் பவளவிழா நிறைவு மற்றும் முப்பெரும் விழா!
திமுக வரலாற்றில் எண்ணிலடங்காப் போராட்டங்கள், சிறைவாசங்கள், தியாகங்கள், மகத்தான தேர்தல் வெற்றிகள், தோல்விகள், நெருக்கடிகள் என்று இந்த 75 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இருந்து சற்றும் சமரசமில்லாமல் பயணிக்கும் நமது இயக்கம் இன்று மக்கள் ஆதரவுடன் பவளவிழா நிறைவு – திமுக முப்பெரும் விழாவினை செப்டம்பர் 17 அன்று சிறப்பாக கொண்டாட இருக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பவள விழாவினை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், பெருமையுடன் கொண்டாடுவதற்கு திமுக மாணவர் அணி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் – 8
நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் கழக மாணவர் அணி நிர்வாகிகள் நியமனம்!
நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் அளவிலான அமைப்புகளுக்கு அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களை நியமனம் செய்வதற்கு ஏதுவாக நேர்க்காணல் நடத்திடும் வகையில், திமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலத் துணைச் செயலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட பட்டியலின்படி, அந்தந்த மாவட்டக் கழக செயலாளர்களுடன் கலந்து பேசி நேர்க்காணல் நடத்த வேண்டும்.
அதில் தகுதி உடையவர்களை தேர்ந்தெடுத்து நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்களின் ஒப்புதலுடன் மாவட்டக் கழக செயலாளர்களின் பரிந்துரை கடிதத்தை பெற்று, மாணவர் அணிச் செயலாளரிடம் இம்மாத இறுதிக்குள் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. விரைவாக திமுக தலைவரின் ஒப்புதல் பெற்று, நியமன அறிவிப்பை வெளியிட செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கப்படுகிறது” என எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிவி காமெடி முதல் பள்ளி டிராஜிடி வரை… யார் இந்த மோட்டிவேட்டர் மகா விஷ்ணு?
900 கோல்கள்… கால்பந்து வரலாற்றில் தொட முடியாத சாதனை படைத்த ரொனால்டோ