சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் தன்னை அறிதல் என்ற ஆன்மீக போதனை வகுப்புகளை நடத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் மோட்டிவேஷன் ஸ்பீக்கரான மகா விஷ்ணு.
தனது வகுப்புகளில் பாவங்கள், கர்ம வினைகள் குறைய என்ன வழி என பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவிகள் மத்தியில் இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன்பு மோட்டிவேட்டர் மகாவிஷ்ணு என யூடியுபில் அறிமுகமாகி, இப்போது பல நாடுகளுக்கு சென்று வகுப்பு எடுக்கும் பரம்பொருள் பவுண்டேசன் அறக்கட்டளையின் நிறுவனராக சர்ச்சையில் சிக்கியிருக்கும் இந்த குருஜி மகா விஷ்ணு உண்மையில் யார்? அவரது பின்னணி என்ன?
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவரான மகாவிஷ்ணு 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். எனினும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் மதுரை மகா என்ற பெயரில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக சிறுவயதிலேயே பிரபலமானார்.
அதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோட்டிவேட்டர் மகாவிஷ்ணு என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கினார். அதன் அறிமுக வீடியோவில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக 1000க்கும் மேற்பட்ட மேடைகளை கண்ட நான் இப்போது மோட்டிவேஷனல் பேச்சாளராக மாறியுள்ளேன். இடையே சினிமா இயக்குநராக, விநியோகஸ்தராக பல வேலைகளை செய்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக எனது ஆன்மிக அனுபவத்தை உங்களுக்கு கடத்தும் முயற்சியாக இந்த யூடியூப் சேனலை தொடங்கியிருக்கிறேன்” என தெரிவித்தார்.
அதன்பின்னர், கடவுளை அடையும் வழி, ஜோதிடம் பொய்யா? மெய்யா?, செக்ஸ் ஒரு இன்ப செயல், பல பேர் மீது வரும் காம ஆசை என்ற தலைப்புகளில், பல்வேறு பேக்ரவுண்டில் பல வீடியோக்களை தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதோடு, தோனி, சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்பு குறித்து பேசியும் ஆயிரக்கணக்கில் வியூஸ்களை அள்ளி இருக்கிறார்.
தான் பெருமாளின் அவதாரம் என குடுகுடுப்பைக்காரர் தனது தாயிடம் சொன்னதாக கூறியுள்ள மகா விஷ்ணு, யூடியூபில் பேசியதை மக்களிடையே இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று ஞானப்பாதையின் வழிகாட்டி என்ற பெயரில் கட்டணம் வசூலித்து பல ஆன்மீக போதனைகளை நடத்தி வருகிறார்.
2021 ஆம் ஆண்டு திருப்பூரில் பரம்பொருள் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கிய மகாவிஷ்ணு அதன்மூலம் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுதல், அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட அறப்பணிகளையும் செய்து வருவதாக பரம்பொருள் அறக்கட்டளையின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றி வரும் இந்த மகா விஷ்ணுவின் வகுப்பில் பங்கேற்க ஒருவருக்கு 2000 முதல் 10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மாதத்திற்கு பல லட்சம் பணமழை கொட்டுகிறது மகாவிஷ்ணுவின் காட்டில்.
மேலும் தன்னை சித்த மருத்துவம் படித்தவராக கூறிக்கொள்ளும் இவர், குருவின் கருணை என்ற பெயரில் காயகல்ப லேகியம், ருத்ராட்சம், கருங்காலி மாலை, வெயிட் லாஸ் பவுடர், விநாயகர் சிலை என பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இதில் ரூ. 25 ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்கும் உள்ளங்கைக்கும் சிறியதாக உள்ள காரியசித்தி விநாயகர் சிலையை வாங்கி பூஜை செய்தால், குடும்பம், வியாபாரம் போன்றவற்றில் உள்ள அனைத்து தீய சக்திகளையும் எளிதில் போக்கலாம் என்றும், மற்ற சிலைகளின் பூஜையை விட 100 மடங்கு அதிக பலனைத் தருவதாகவும் கூறுகிறார்.
இப்படி தனது பேச்சின் மூலமும், பல பொருட்களை மக்களிடம் நம்பிக்கையுடன் மார்க்கெட்டிங் செய்து விற்பதன் மூலம் வசூல் வேட்டை நடத்தி வருகிறார் இந்த குருஜி மகா விஷ்ணு.
இதற்கிடையே தான் தன்னை குருஜியாக அப்டேட் செய்துகொண்ட மகா விஷ்ணு தமிழக அமைச்சர்கள் பலரையும் சந்தித்துப் பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வலம் வருகின்றன.
தமிழகப் பாடநூல்களில் வள்ளலார் இயற்றிய “திருவருட்பா”வைச் சேர்க்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார் மகா விஷ்ணு. இதே கோரிக்கையுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி்.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோரையும் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களையெல்லாம் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் ஞானப்பாதைக்கு வழிகாட்டுகிறேன் எனக் கூறி அரசுப் பள்ளிகளில் தன்னம்பிக்கை வகுப்பு என்ற பெயரில் ஆன்மிக போதனை வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளார்.
அப்படித்தான் சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வகுப்பு எடுக்க சென்ற மகாவிஷ்ணுவுக்கு என்.சி.சி மாணவர்களின் சல்யூட்டுடன் தடாலடி வரவேற்பை பள்ளி நிர்வாகம் அளித்துள்ளது. அப்பள்ளியில் கர்மா, மறுபிறவி என்றெல்லாம் அவர் பேச… அங்கே இருந்த மாற்றுத்திறனாளியான தமிழாசிரியர் சங்கர், ‘இது ஆன்மிக வகுப்பா? மோட்டிவேஷனல் வகுப்பா? அரசுப் பள்ளியில் இப்படி மூட நம்பிக்கையை பேசாதீங்க’ என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக தமிழாசிரியருடன் தான் ஆவேசத்துடன் வாதிட்ட காட்சியை யூட்யுப் சேனலில் மகாவிஷ்ணு வெளியிட இந்த சம்பவம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.
இதனால் சமூகவலைதளங்களில் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்ப, இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அசோக் நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பள்ளி முன்பு இந்திய மாணவர்கள் சங்கத்தினர் இன்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை நேராக அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஊக்கமூட்டும் வகையில் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது, ஆன்மீகம் என்ற வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை. பள்ளியின் மேலாண்மை குழு சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் அரசு பள்ளியில் நடக்கக்கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது 3, 4 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் மாணவிகள் மத்தியில் மூட நம்பிக்கைகளை விதைக்கும் விதமாக பேசிய மகாவிஷ்ணுவை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கருக்கு அனைவர் முன்னிலையிலும் சால்வை அணிவித்து கெளரவித்தார்.
மேலும், ”ஆசிரியர் சங்கர் கற்ற கல்வி தான் பிற்போக்கு சிந்தனைகளைப் பேசும் நபர்களை கேள்வி கேட்க வைத்துள்ளது.” என்று பாராட்டு தெரிவித்தார். மேலும் ”என்னுடைய ஏரியாவுக்குள்ள வந்து என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்திய உன்னை சும்மா விடமாட்டேன்” என்று மகாவிஷ்ணுவை எச்சரித்துள்ளார் அமைச்சர்.
பின்னர் அவர் பள்ளியை விட்டு கிளம்பிய சிறிது நேரத்தில் தலைமையாசிரியர் தமிழரசியை, திருவள்ளூர் கோயில்பதாகை அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவு விடுக்கப்பட்டது.
தொடர்ந்து மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையிலும் அதிகாரிகளின் சோதனை நடந்து வருகிறது.
மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு எதிராக பேசியதாக மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மகாவிஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில், என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட போகிறது? யாரெல்லாம் தண்டிக்கப்பட உள்ளார்கள்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
900 கோல்கள்… கால்பந்து வரலாற்றில் தொட முடியாத சாதனை படைத்த ரொனால்டோ
கேரளாவுக்கு வருகிறது அர்ஜென்டினா கால்பந்து அணி… பயிற்சி மையம் தொடக்கம்!
இந்த அரசுக்கு நேர்மையும் நெஞ்சு திடமும் இருப்பது உண்மை ஆனால் அரசு சம்பளம் தரும் தமிழக அனைத்து பள்ளிகளிலும் எந்த மத போதனை வகுப்புகளும் நடைபெறாது என அறிவிக்குமா?
பார்ப்போம் உங்க சவுடாலை…
இந்து மத ஆன்மீக வகுப்பு மட்டும் கசக்குமா?