DELIMITATION BILL தோல்வி: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு- ஸ்டாலின் பெருமிதம்!

Published On:

| By Mathi

Stalin Delimitation

நாடாளுமன்ற மக்களவையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா இன்றைய (ஏப்ரல் 17) வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொகுதிகளை மறுவரையறை செய்ய 131-வது அரசியல் சாசன திருத்த மசோதாவை அறிமுகம் செய்தது மத்திய அரசு.

ADVERTISEMENT

மத்திய அரசின் இந்த மசோதவை தொடக்கம் முதலே மிகக் கடுமையாக எதிர்த்தவர் முதல்வர் ஸ்டாலின். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்த ஸ்டாலின், ”தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம்.இது தேர்தல் காலம் தான். இவர்கள் கவனம் அதில் தான் இருக்கும். நாம் டெல்லியில் சைலன்டாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறையைச் செய்து விடலாம் என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள். இதைச் சொல்லும் நான் தமிழ்நாட்டு முதலமைச்சர் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் தலைவர்.

நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டி இருக்கும். 50-60களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா திரும்பவும் பார்க்க வேண்டி இருக்கும்.இவன் என்ன மிரட்டுகிறான் என்று நினைக்காதீர்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் அதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வீடுகள், பொது இடங்களில் கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டன. நாமக்கல்லில் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் இந்த மசோதாவின் நகலை தீயிட்டு எரித்தார்.

அத்துடன் மக்களவையில் இந்த மசோதாவை திமுகவின் டிஆர் பாலு, ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் மிகக் கடுமையாக எதிர்த்து பேசினர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. அரசியல் சாசன திருத்த மசோதா என்பதால் இதனை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவு தேவை. அதாவது 326 எம்.பிக்கள் ஆதரவு தேவை. ஆனால் வாக்கெடுப்பில் 278 எம்.பிக்களே மசோதாவை ஆதரித்தனர். இதனால் மத்திய பாஜக அரசின் மசோதா தோல்வி அடைந்தது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று தமது எக்ஸ் பக்கத்தில், “ தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது!

இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது!

தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி – கண்ணியம் – கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது.

தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது!

நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம்.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி!

இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் – ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!” என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share