பழைய திமுகவை இந்தியா திரும்ப பார்க்க வேண்டியிருக்கும்.. இறுதி எச்சரிக்கை – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

தமிழ்நாட்டின் வாசல் வரை வந்து விட்டது பேராபத்து என்று தொகுதி மறு வரையறை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 14) வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாட்டின் வாசற்படிக்கே வந்துள்ள ஒரு பெரும் ஆபத்தைப் பற்றிப் பேசவும், ஒன்றிய பாஜக அரசுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கவும் தான் இந்த வீடியோ” என தெரிவித்துள்ளார்.

வீடியோவில் பேசிய முதல்வர், “தேர்தல் பிரச்சாரத்திற்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தாலும், இந்தக் கடமையைத் தவிர்க்க முடியாது. நாளை மறுநாள் ஏப்ரல் 16 அன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. கூடுகிறது என்று சொல்வதைவிட, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத் தேர்தலுக்கு நடுவில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். Delimitation எனப்படும் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் திணிக்கப் போகிறார்கள்.

ADVERTISEMENT

முதலில் இருந்தே இது குறித்து நாம் தொடர்ந்து எச்சரித்து வந்தோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இதனால் பாதிக்கப்பட உள்ள மற்ற மாநில முதலமைச்சர்களையும், முக்கியக் கட்சித் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடத்தினோம்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள், அளவாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடியுங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னதை எல்லாம் நாங்கள் கேட்டோம். சொன்னதை ஒழுங்காகச் செய்ததற்காகவே எங்களுக்குத் தண்டனை தருவீர்களா? தென் மாநிலங்கள் பாதிக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டும் பதில் இல்லை.

ADVERTISEMENT

இதற்காகப் பல்வேறு கட்சி எம்பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து முறையிட நேரம் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை.இப்படி நாம் சொன்ன எதையும் அவர்கள் காதில் வாங்காமல், திமுக மட்டுமல்ல, எந்தக் கட்சியுடனும், எந்த மாநிலத்துடனும் எந்த ஆலோசனையும் நடத்தாமல், தங்கள் இஷ்டத்திற்கு செய்யப் பார்க்கிறார்கள்.

நேற்று சோனியா காந்தியும் நாம் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டுள்ளார்கள். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட யாருக்கும் பதில் இல்லை.இப்படி அவசர அவசரமாக delimitation செய்ய நினைப்பது பாஜக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், மாநில உரிமைகளைப் படுகொலை செய்திருக்கிறார்கள். இந்த delimitation எப்படிச் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்தச் சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருக்கிறார்கள். இவர்கள் இப்படி மறைத்து மறைத்துச் செய்கிறார்கள் என்றால், கண்டிப்பாக ஏதோ ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வலுவடைகிறது.

ADVERTISEMENT

தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள்.நான் ஒன்றிய பாஜக அரசிற்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் இந்த நேரத்தில் முக்கியமாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நடக்க இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எங்களது எம்பிக்கள் கலந்துகொள்வார்கள். தமிழ்நாட்டைப் பாதிப்பது போன்றோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம்.

தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம்.இது தேர்தல் காலம் தான். இவர்கள் கவனம் அதில் தான் இருக்கும். நாம் டெல்லியில் சைலன்டாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறையைச் செய்து விடலாம் என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள். இதைச் சொல்லும் நான் தமிழ்நாட்டு முதலமைச்சர் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் தலைவர்.

நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டி இருக்கும். 50-60களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா திரும்பவும் பார்க்க வேண்டி இருக்கும்.இவன் என்ன மிரட்டுகிறான் என்று நினைக்காதீர்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் அதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.

ஆம், தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை இது.தேர்தல், ஆட்சி, அதிகாரம் இதுவெல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான். நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். எங்களுக்கு கொள்கைதான் முக்கியம். மாநில உரிமைகள் தான் முக்கியம். அதுதான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் எங்களுக்கு கொடுத்துவிட்டுச் சென்ற உயிர்க் கொள்கை. தமிழ்நாட்டிற்குத் தவறிழைத்துவிட்டு வழக்கம்போல் சும்மா.. கடந்து போக நினைத்தால், நடப்பதை வேரறுக்க, சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர் மேல் ஆணையாகச் சொல்கிறேன்: தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம்.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே மீண்டும் சொல்கிறேன். இது தமிழ்நாட்டிலிருந்து உங்களை நோக்கி விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை.
Tamil Nadu Will Fight
Tamil Nadu Will Win
தமிழ்நாடு போராடும்.
தமிழ்நாடு வெல்லும்.”என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share