தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவை வந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அவருக்காக சிறப்பு அர்ச்சனை செய்துவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரும், பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று (ஏப்ரல் 15) கோவைக்கு வந்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வானதி சீனிவாசனுக்காக சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை முடித்துவிட்டு, விமானம் மூலம் நேரடியாகக் கோவை வந்தடைந்த ரேகா குப்தா, அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசனை நேரில் சந்தித்த ரேகா குப்தா, அவரிடம் பேசுகையில்,“திருப்பதிக்குச் சென்று உங்களுக்காக அர்ச்சனை செய்துவிட்டு நேராக இங்கு வருகிறேன். நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனை. கவலைப்படாதீர்கள், உங்கள் சார்பில் நான் கோவை வடக்குத் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இந்தத் தேர்தலில் உங்கள் வெற்றி நிச்சயம்” என்று ஆறுதல் கூறினார்.
வானதி சீனிவாசன் இல்லாத நிலையில், அவரது மகன்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏற்கனவே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், டெல்லி முதல்வரின் இந்த வருகையும் நேரடிப் பிரச்சாரமும் கோவை வடக்குத் தொகுதி பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.ரேகா குப்தா இன்று மாலை கோவை வடக்குத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
