மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து திமுகவின் தலைமை கழகமான சென்னை அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். இதனைத் தொடர்ந்து கேரளா, தெலுங்கானா மாநில முதல்வர்களும் எதிர்த்தனர்.
தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசின் மசோதாவுக்கு எதிராக கறுப்பு கொடி ஏற்றப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் மக்களவையில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் மத்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்தது.
இது தமிழ்நாட்டுக்கும் திமுகவுக்கும் கிடைத்த வெற்றியாக திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயம் உட்பட பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் வெடி வெடித்து கொண்டாடிய ஸ்டாலின்
திண்டுக்கல்லில் இன்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார். இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக வேனில் இருந்து இறங்கிய ஸ்டாலின், மத்திய அரசின் தோல்வியை கொண்டாடும் விதமாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்.

பின்னர் திமுகவினருக்கு இனிப்புகளையும் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
