சத்தமா சொல்லுங்க, ஸ்டாலின் கேட்கணும் : சேலத்தில் ஈபிஎஸ் பிரச்சாரம்!

Published On:

| By Kavi

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. 

சேலம் சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 17) பிரச்சாரம் மேற்கொண்டார்.

ADVERTISEMENT

அப்போது அவர்,  “  இன்றைக்கு ஸ்டாலின் பாவம்…  தமிழ்நாட்டைச் சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நடக்கின்ற தேர்தல் இந்தத் தேர்தல்.  ஒரு குடும்பம் வாழ எட்டு கோடி மக்களைச் சுரண்டிப் பிழைக்கின்ற அந்த முடிவுகட்டுகின்ற தேர்தல் இந்த சட்டமன்றத் தேர்தல். முடிவுகட்டுவீங்களா? சத்தமா சொல்லுங்க, ஸ்டாலின் கேட்கணும்” என விமர்சித்தார். 

மேலும் அவர், “லாரி தொழில் நலிந்திருக்குது. அண்ணா திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் தொழில் சிறக்க  முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

அதேபோல கைத்தறித் தொழில், விசைத்தறித் தொழில் அதுவும் பிரதான தொழில். அதிமுக ஆட்சி இருக்கின்ற பொழுது, கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த அந்தத் துணி தேக்கம் அடைந்தது என் கவனத்துக்கு வந்தது. நான் முதலமைச்சராக இருந்த பொழுது உடனடியாக 350 கோடி ரூபாய் மானியம் கொடுத்து அந்தத் துணிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தேன். நெசவாளர்களுக்குப் பசுமை வீடுகள் கட்டிக் கொடுத்தோம். விலையில்லாமல் 300 யூனிட் கொடுத்தோம். இப்போது அதை 450 யூனிட்டாக விலையில்லாமல் கொடுப்போம். இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விசைத்தறி தொழிலுக்கு1400 யூனிட்டாக உயர்த்தி வழங்குவோம்.

அதேபோல 65 வயதுக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு இப்போது 1000 ரூபாய் கொடுக்குறாங்க, அண்ணா திமுக ஆட்சிக்கு வந்த உடனே அதை 2500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ADVERTISEMENT

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று உத்தரவு வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

ரேஷன் கடையில் அரிசி தரமில்லாமல் இருப்பதாகப் புகார் வருகிறது. அண்ணா திமுக ஆட்சி வந்தவுடன் மளிகைக் கடையில் விற்பது போன்ற உயர்தரமான அரிசி ரேஷன் கடையில் வழங்கப்படும். எத்தனை ஆயிரம் கோடி செலவானாலும் பரவாயில்லை, ஏழைகளுக்காக இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம். விலையில்லா அரிசியுடன் பருப்பு, எண்ணெய் வழங்கப்படும்.

இன்றைக்குச் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திறமை இல்லாத ஒரு முதலமைச்சர்,  ஆளும் காரணத்தால போதைப் பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த முடியல. கஞ்சா எல்லா இடத்திலயும் கிடைக்குது. இதுக்கு முற்றுப்புள்ளி வைக்க அண்ணா திமுக ஆட்சி வந்தவுடன் கஞ்சா விற்பனை ஒழிக்கப்படும்.

சங்ககிரி தொகுதியில் 100 ஏரித் திட்டத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே, என் மீது இருக்கிற கோபத்தில் விவசாயிகளைப் பழிவாங்காதீங்க. அண்ணா திமுக ஆட்சி வந்தவுடன் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். அம்மா மினி கிளினிக் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள். இது, அண்ணா திமுக ஆட்சி வந்தவுடன் மீண்டும் திறக்கப்படும். அம்மா உணவகம் முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் செயல்படும்.

திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. அண்ணா திமுக ஆட்சி வந்தவுடன் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்” என அதிமுகவின் வாக்குறுதிகளை அறிவித்தார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share