தொகுதி மறுவரையறை மேற்கொள்ள மத்திய அரசு கொண்டு வந்த, 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவான மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்தது.
தொகுதி மறுவரை செய்யும் வகையிலான மகளிர் இட ஒதுக்கிடு மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.
இந்த மசோதாவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
ஆனால் இன்று மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த மசோதா நிறைவேற்றப்படாது என்று தெரிந்தும் தாக்கல் செய்திருக்கின்றனர். தென்னிந்தியாவை பாதிக்கப்பட விடமாட்டோம் என்று கூறினார்.
ராகுலுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படாது. நான் கையெழுத்திட்டு தருகிறேன் என்றார்.
இந்தநிலையில் விவாதம் முடிந்து இன்று மாலை வாக்கெடுப்பு தொடங்கியது.
இதில் மொத்தம் 489 எம்.பி.க்கள் பங்கேற்றனர். இதில் மசோதாவுக்கு ஆதரவாக 278 பேரும், எதிராக 211 பேரும் வாக்களித்தனர்.
அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற அவையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதாவது சுமார் 326 வாக்குகள். ஆனால், அரசுக்கு 278 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் மசோதா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
