மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களித்த அனைத்து எம்.பி.க்கள், அந்த எம்.பி.க்களின் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் கோடானு கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (CM MK Stalin) கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று ஏப்ரல் 17-ந் தேதி இரவு நடைபெற்ற திமுக பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறக்கூடிய இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்ற நான் முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி செய்தியோட வெடியப் போட்டுட்டுதான் இங்க வந்துருக்கேன். தேர்தலுக்கு முன்னாடியே என்டிஏ (NDA) கூட்டணி மண்ணைக் கவ்வியிருக்கு. இது சாதாரண வெற்றி அல்ல. இன்னும் நூறாண்டு கழிச்சும் வரலாற்றுல நின்னு பேசப்போற வெற்றி.

ஆணவ பாஜகவினுடைய வீழ்ச்சியைத் தமிழ்நாடு தொடங்கி வைச்சிருக்கு. ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’னு சொன்னேன். இன்று தமிழ்நாடு வென்றிருக்கு.
எல்லோரும் சொல்லுங்க…
வெல்க வெல்க வெல்கவே!
தமிழ்நாடு வெல்கவே!
வெல்க வெல்க வெல்கவே!
அரசியல் சட்டம் வெல்கவே!
நன்றி. எதிர்க்கட்சிகள் எல்லாம் என்னெல்லாம் சொன்னாங்க? கருப்புக் கொடி ஏத்துனா, கருப்புச் சட்டை போட்டா முடியுமான்னு கேட்டாங்க. இப்ப ஒரே போடா போட்டுட்டோமா இல்லையா?

ஆனா, இதெல்லாம் அவங்களுக்குப் பத்தாது. ஏப்ரல் 23 தேர்தல்ல நீங்க வழங்கப்போற அடி இருக்கே, அதுதான் ரியல் அடி. இந்தியா மொத்தம் இருக்கக்கூடிய காவிக்காரர் துடைத்தெறியப்படக்கூடிய தொடக்க அடி தமிழ்நாட்டுல தான் அதுவும் ஸ்டார்ட் ஆகப்போகுது. இனிமேலாவது தமிழ்நாட்டைத் தேவையில்லாம உரசிப் பாக்காதீங்க, தாங்க மாட்டீங்க.
பிரதமர் மோடி அவர்கள் தன்னுடைய 12 ஆண்டுகால ஆட்சியில் சந்தித்திருக்கக்கூடிய முதல் தோல்வி, மாபெரும் தோல்வி இது.

தேர்தலுக்கு முன்னாடி தமிழினத் துரோகி எடப்பாடி சந்தித்திருக்கக்கூடிய படுதோல்வி இது. தேர்தல் நேரத்தில இந்த மாதிரி சட்டம் கொண்டு வந்தா தமிழ்நாட்ல எல்லாரும் அசால்ட்டா இருந்துடுவோம்னு நினைச்சாங்க. தமிழ்நாடு எப்பவுமே அலார்ட்டா தான் இருக்கும். ஏன்னா இங்க இருக்கிறது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
ஸ்டாலின் பற்ற வைத்த தீ – வீழ்ந்தது காவிப் படை!
தமிழ்நாட்டு முதலமைச்சரா, மக்களாக நீங்க கொடுத்திருக்கக்கூடிய பொறுப்புல இந்த ஸ்டாலின் பற்ற வைத்த தீ டெல்லியின் ஆணவத்தைச் சுட்டெரித்திருக்கு. நம்ம போராட்டம் வெற்றி பெற்றிருக்கு. கருஞ்சட்டைப் படை காவிப் படையை வீழ்த்தியிருக்கு.
மகளிர் இடஒதுக்கீடுன்னு முகமூடி போட்டு தொகுதி மறுவரையறை பாஜக கொண்டு வந்த மசோதாவை இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இன்று தோல்வியடைய வச்சிருக்காங்க. கருப்புச் சட்டத்துக்கு எதிரா வாக்களித்த அனைத்து எம்.பி-க்களுக்கும் அந்த கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில், இங்க இருக்கக்கூடிய உங்கள் அனைவரின் சார்பிலே என்னுடைய கோடான கோடி நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புறேன்.
மகளிருக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலா உள்ளாட்சியிலே கொடுத்தது திமுக. இந்த ஸ்டாலின் ஆட்சியில தமிழ்நாடு உள்ளாட்சியில ஐம்பது சதவீத மகளிர் பொறுப்புகள் இருக்காங்க.
திண்டுக்கல் தீர்ப்பு நாடகம்
1973-ல நான் ‘திண்டுக்கல் தீர்ப்பு’ன்ற நாடகத்துல நடிச்சேன். இன்னைக்கு திண்டுக்கல் வந்த நேரத்துல தமிழ்நாட்டுக்குச் சிறந்த தீர்ப்பு கிடைச்சிருக்கு.
40 பேர் போய், 40 எம்.பி.க்கள் டெல்லிக்கு போய் என்ன பண்றாங்க, என்ன பண்றாங்க அப்படின்னு எடுபடி எடப்பாடி கேட்டாரு. இப்ப பாத்தீங்களா? நம்ம தமிழ்நாட்டு எம்.பி-க்கள் பார்லிமென்ட்ல பாஜக காரங்களை பந்தாடிட்டு வந்திருக்காங்க. இதுவே அதிமுக அடிமைகள் அங்க போயிருந்தா என்ன பண்ணிருப்பாங்கன்னு உங்களுக்கே நல்லா தெரியும்.
கருப்புச் சிவப்பு படை கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை விடாமுயற்சியா தமிழ்நாட்டுக்காகப் போராடும். இப்ப சொல்லுங்க, இந்த மண்ணுல யார் ஆட்சி வேணும்? யார் ஆட்சி தொடரணும்? யார் ஆட்சி தொடரணும்? 200 தொகுதிகளுக்கு மேல எந்த அணி வெல்லணும்? தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?
வீரத்தின் விளைநிலம் திண்டுக்கல்
திண்டுக்கல் வீரத்தினுடைய விளைநிலம். திண்டுக்கல் ஒரு ஊரோட பேர் மட்டும் இல்ல, அது புரட்சியின் பெயர், எழுச்சியினுடைய பெயர். பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரா போராடி கணவனை இழந்த பிறகும், பச்சை குழந்தையைக் கையில வச்சுக்கிட்டு போராடின வேலுநாச்சியாரும் மானங்காத்த மருது சகோதரர்களும், தன் அண்ணன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பிறகு பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து தம்பி ஊமைத்துரையும் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்திய திட்டமிட்ட ஊர் இந்த திண்டுக்கல்.
ஆன்மீகமா… கோட்டை மாரியம்மன், பழனியாண்டவர்.
சுற்றுலாவா… குளு குளு கொடைக்கானல், சிலு சிலு சிறுமலை.
சாப்பாடா… தனித்துவமான பிரியாணி.
எல்லாத்துக்கும் மேல, காவலுக்கு ஃபேமஸான திண்டுக்கல் பூட்டு.
இன்னைக்குத் தமிழ்நாட்டோட உரிமைகளையும் திருடிட்டுப் போலாம்னு நினைச்சாங்க. உள்ளூர் அடிமைகளை அழைச்சுத் துணைக்கு வைச்சுக்கிட்டு டெல்லி கும்பல் வராங்க. திடமான பூட்டுக்குப் பேர் பெற்ற திண்டுக்கல் மக்கள் அவங்களுடைய சதியை முறியடிக்கணும்.
2026-ல் திண்டுக்கல் தீர்ப்பு என்ன?
அதுக்காகத்தான் உங்க ஆதரவைத் தேடி நான் வந்திருக்கிறேன். 1973-ஆம் ஆண்டு ‘திண்டுக்கல் தீர்ப்பு’ என்ற நாடகத்துல நான் நடிச்சேன். 2026 தேர்தல்ல, திண்டுக்கல் தீர்ப்பு முழுக்க முழுக்க திமுக பக்கம் தான் இருக்கணும் என்று கேட்க வந்திருக்கிறேன்.
உயிரே போனாலும் தமிழ்நாட்டு உரிமைகளுக்காக வாதாட நான் ரெடி! நியாயத்தின் பக்கம் நின்று நம்ம கூட்டணிக்கு ஆதரவுத் தீர்ப்பெழுத திண்டுக்கல் ரெடியா? ‘திராவிட மாடல் 2.0’ உறுதியா? நன்றி.
இப்போ, உங்க அனுமதியோட நமது வெற்றி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தப் போறேன். அனுமதி கொடுக்கிறீங்களா? அனுமதிக்கலாமா? அறிமுகப்படுத்தலாமா?

ஐ.பி. பேரை கேட்டாலே எதிரிகள் பிபி ஏறும்
முதல்ல ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர், எல்லாராலும் அன்போடு ‘ஐ.பி, ஐ.பி’ என்று அழைக்கப்படக்கூடிய ஐ. பெரியசாமி அவர்கள். திண்டுக்கல் மாவட்டத்தையே திமுக-வில நாங்க ‘ஐ.பி மாவட்டம்’னுதான் சொல்லுவோம். எதிரிகளுக்கு ஐ.பி பேரை கேட்டாலே பி.பி ஏறுது, இல்லையா? அந்த அளவுக்கு ஆளுமைத் திறன் கொண்டவர். கழகத்தையும் சரி, அவர்கிட்ட கொடுத்த துறையையும் சரி, இந்த மாவட்டத்தையும் சரி, பெரிய அளவுல வளர்த்த ஐ. பெரியசாமி அவர்களுக்கு ‘உதயசூரியன்’ சின்னத்துல வாக்களிக்கணும்.
அமைச்சர் சக்கரபாணிக்கு பாராட்டு
அடுத்து ஒட்டன்சத்திரம் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர், அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள். ஐ.பி அவர்களோட உடன்பிறவாத் தம்பி சக்கரபாணி அவர்கள். இந்த மண்டலத்தை ஐ.பி-யோடு சேர்ந்து வளர்த்து வரக்கூடியவர். மாவட்டச் செயலாளர், மண்டலப் பொறுப்பாளர், மாண்புமிகு அமைச்சர் என மிகச் சிறப்பாச் செயல்படுத்திக் காட்டக்கூடியவர்… செயல்படுத்திக் காட்டிட்டு இருக்காரு. பேருதான் அர. சக்கரபாணி, ஆனா உழைப்பால அவர் முழுச் சக்கரைபாணி! அவருக்கு ‘உதயசூரியன்’ சின்னத்துல வாக்களிக்கணும்.
ஐபி செந்தில்குமார்
அடுத்து திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமார் அவர்கள். மாண்புமிகு அமைச்சர் ஐ.பி. அவர்களுடைய மகனாக இருந்தாலும், செயல்பாட்டில் தன்னுடைய தனித்தன்மையால, செந்திலோட அப்பா ஐ.பி.ன்னு சொல்லக்கூடிய அளவுக்குப் பெருமை பெற்றுத் தரும் என்னுடைய அருமைத் தம்பி, கழகத் தம்பி, இளைஞரணியின் துணைச் செயலாளராக இருந்தவர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இப்போ சிறப்பாகச் செயல்படுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்துல நீங்கள் வாக்குகளை அளிக்கணும்.

நிலக்கோட்டை நாகஜோதி
அடுத்து நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் எஸ். நாகஜோதி அவர்கள். கழகக் குடும்பத்தைச் சார்ந்த நாகஜோதி, விராலிமலைப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவங்களுடைய வளர்ச்சிக்காகப் பாடுபடக்கூடியவர், கழகத் தொண்டும் மக்கள் தொண்டும் தொடர்ந்து செஞ்சுட்டு வரக்கூடிய அவருக்கு உதயசூரியன் சின்னத்துல வாக்கினை வழங்கணும்.
வேடசந்தூர் வீரா சாமிநாதன்
அடுத்து வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் வீ.ரா. சாமிநாதன் அவர்கள். அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர், மக்கள் சேவகர், வேடசந்தூர் தெற்கு ஒன்றியத்தினுடைய செயலாளர். அவருக்கு உதயசூரியன் சின்னத்துல வாக்கினை வழங்கிட வேண்டும்.
பழனி என். பாண்டி
அடுத்து பழனி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த என். பாண்டி அவர்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மூலமாக அரசியல் பணியைத் தொடங்கியவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினுடைய மாவட்டச் செயலாளர், கரும்பு விவசாயிகள் சங்கத்தினுடைய மாநிலப் பொதுச் செயலாளர், இது போன்ற பொறுப்புகளை வகிச்சவர். சிபிஎம் கட்சியோட மாநிலச் செயற்குழு உறுப்பினர், மக்களுக்காகப் போராடிச் சிறை சென்றவர். அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துல வாக்களிக்கணும்.
நத்தம் செல்வக்குமார்
அடுத்து நத்தம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கே. செல்வக்குமார் அவர்கள். தமிழர் தேசம் கட்சியினுடைய வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தினுடைய தலைவர். வழக்கறிஞர், முத்தரையர் சமுதாய மக்களோட நலனுக்காக, அவங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரக்கூடியவர். நமது கூட்டணிக்கு வலு சேர்க்க வந்திருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்துல வாக்கினை வழங்கிட வேண்டும்.
இந்த வேட்பாளர் வெற்றியை 100% உறுதியா? நன்றி. வேட்பாளர் உட்காரலாம், உங்க சீட்டு கன்பார்ம் ஆயிடுச்சு உட்காருங்க. உட்காருங்க.
திண்டுக்கல்ன்னு சொன்னா தமிழ்நாடே சொன்ன மாதிரி, அப்படிப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்துக்குக் கடந்த ஐந்து ஆண்டுகள்ல ஏராளமான திட்டங்கள் செஞ்சு தரப்பட்டிருக்கு. சும்மாவா? ரெண்டு அமைச்சர்கள் வேற வச்சிருக்கீங்க நீங்க. இருந்தாலும் நேரத்தின் அருமை கருதி சுருக்கமா சிலவற்றை மட்டும் நான் சொல்ல விரும்புறேன்.
காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், இது மூலமாக எட்டு லட்சம் மக்கள் பயனடையுறாங்க. நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி ஆகிய அரசு மருத்துவமனைகள்ல கூடுதல் கட்டடங்கள். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்ல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டுல உள்கட்டமைப்பு வசதிகள். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் திருக்குடமுழுக்கு விழா. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துல புதிய கட்டடங்கள். வேடசந்தூர் தொகுதியில 11 பாலங்கள். ஆத்தூர்ல கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
ஆத்தூர் ரெட்டியார் சத்திரத்துல அரசு கல்லூரி… ஆத்தூர்ல புதிய ஐடி பார்க். ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களுக்கு புதிய காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், காளாஞ்சிபட்டி ஊராட்சியில போட்டித் தேர்வு பயிற்சி மையம். அருள்மிகு பழனியாண்டவர் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. சிறுமலையில பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டிருக்கு.

தமிழ்நாட்டுக்கு ஏன் மிக முக்கியமான நாள்?
இப்படி எண்ணற்ற சாதனைகளை செஞ்சு கொடுத்துட்டுதான் உங்க ஆதரவை நான் உரிமையோட கேட்க வந்திருக்கிறேன். இன்னைக்கு தமிழ்நாட்டுக்கு மிக மிக ஒரு முக்கியமான நாள். ஏன்? இந்திய அரசியலுக்கே ஒரு மிக முக்கியமான நாள். அந்த அளவுக்கு ஒரு முக்கியமான சட்டத்தை நாம நிறைவேத்திட்டு, இன்னைக்கு தமிழ்நாடு பாதிப்படையாதுன்னு பிரதமரும், உள்துறை அமைச்சரும் சொன்னாங்க. ஆனா அவங்க சொன்னது ஒன்னு, அவங்க கொண்டு வந்த சட்டத்துல இருக்கிறது வேற ஒன்னு. எழுத்துப்பூர்வமா சட்டத்துல என்ன இருக்கோ அதுதான் மதிப்பு.
ஆனா அந்த கருப்புச் சட்டத்துல தமிழ்நாட்டுக்கு எத்தனை தொகுதிகள், நமக்கு என்ன சட்டப் பாதுகாப்பு இருக்கு, எந்த சென்சஸ் அடிப்படையில இதைப் பண்ணப்போறாங்க… இது போன்ற தகவல் எதுவும் தெளிவா இல்லை. 1971 சென்சஸ் அடிப்படையில தான் எந்தத் தொகுதி மறுவரையறையும் நடக்கணும். தொகுதி அளவுகளுக்கான அடிப்படையான 2011 சென்சஸ்ல எடுத்துக்கக் கூடாதுன்னு நாம போராடுறோம். அப்படிப் பண்ணா தமிழ்நாட்டினுடைய தொகுதிகள் இப்ப இருக்கக்கூடிய அளவு அதுல இருந்து குறைஞ்சுரும். அதுக்காக நாம ஒத்துக்க மாட்டோம்.
மிரட்டிய டெல்லிக்கு பதிலடி
மொத்தத்துல இப்ப இவங்க கொண்டு வரப் பார்த்த சட்டம் என்ன தெரியுமா? ஒரு பிளாங்க் செக் மாதிரி. அதுலதான் நம்முடைய கையெழுத்துப் போட சொன்னாங்க. இவங்க நம்மகிட்ட இருந்து எவ்வளவோ பிடுங்கப் போறாங்கன்னு தெரியாம நாம எப்படி இதை ஒத்துக்க முடியும்? தமிழ்நாட்டை மிரட்டிப் பார்த்தவங்களுக்கு இன்னைக்கு தக்க பதிலடி நாடாளுமன்றத்துல கிடைச்சிருக்கு.
நாம எவ்வளோ சொன்னோம்? இதுக்கு இப்ப ஏன் அவசரம்? பொறுமையா எல்லாரும் கலந்து பேசுவோம்னு கேட்டோம். இன்னைக்கு கூட காலையில ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில இது தொடர்பாக ஒரு கட்டுரை கூட நான் வெளியிட்டுருந்தேன். என்னன்னா, நாடாளுமன்ற மக்களவையில சும்மா சிம்பிள் மெஜாரிட்டி இருக்கிற ஒரு அரசு நெனைச்சா, மாநிலங்களுடைய தொகுதி எண்ணிக்கையை எப்படி வேணாலும், எப்ப வேணாலும் அவங்களுக்குச் சாதகமான முறையில மாத்திக்கலாம் என்பதற்காகத்தான் இப்ப தாக்கல் செஞ்ச சட்டம் வழிவகுக்குது. இதைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.
படிப்பறிவு இல்லாதவர்களா தமிழர்கள்? மோடி படிச்சது எங்கே?
நான் மட்டும் இல்ல, இந்தியா முழுக்க எல்லா எதிர்கட்சித் தலைவர்களுமே இதுல அவசரம் காட்ட வேண்டாம் என்று தான் கேட்டோம். 2023-லேயே மகளிருக்கு இடஒதுக்கீடு தர மசோதா நிறைவேறிடுச்சு. நாங்க ஆதரிச்சிருக்கோம். பாஜக நினைச்சா 2024 தேர்தல்லேயே மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுத்திருக்க முடியும். ஆனா அதை அவங்க செய்யல. இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போயிடல. தற்போதுள்ள தொகுதி எண்ணிக்கையிலேயே 33% பெண்களுக்குக் கொடுக்கலாம். 2024 தேர்தலிலேயே இதை நடைமுறைப்படுத்தலாம். பாஜக இதுக்குத் தயாரார? பெண்களுக்கு இடஒதுக்கீடு சட்டம் தான் 2023-ஆம் ஆண்டே நிறைவேறிடுச்சே… எல்லாருமே ஆதரிக்கிறோமே… பிறகு ஏன் தாமதம்? இதுதான் இந்தியாவினுடைய கேள்வி. இதைக் கேட்டா, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் என்ன சொல்றார் தெரியுமா? தமிழர்களைப் படிப்பறிவு இல்லாதவங்கன்னு இழிவாப் பேசுறார். நான் கேட்கிறேன், நம்ம பிரதமர் அவர்கள் எந்த காலேஜ்ல என்ன படிச்சார்? எங்க டிகிரி வாங்கினார்?
தமிழ்நாட்டு மக்கள் ஒருவேளை திருப்பிக் கேட்டுட்டா, பியூஷ் கோயல் நிலைமை என்ன ஆகும்? நினைச்சுப் பார்த்தாலே காமெடியா இருக்கு. அதனால வாயை அடக்குங்க.

எடப்பாடி பழனிசாமிக்கு 10 கேள்விகள்
தொகுதி மறுவரையறை தமிழர்கள் அரசியல் உரிமைப் போர் இது. தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அதிகாரமில்லாத அகதிகளாக ஆகாமல் தடுக்கக்கூடிய போர் இது. அதுல இன்னைக்கு நாம வெற்றி பெற்றிருக்கோம். இவ்வளவு முக்கியமான ஒரு பிரச்சனையில தமிழ்நாட்டுல ஒரு அடிமை மட்டும் எதுவும் பேசாம இருந்தாரு. யாரு? பழனிசாமி அவர்கள். பழனிசாமி அவர்கள இப்ப என்ன ஆச்சு பாத்தீங்களா? ஒன்றிய அரசு சிறப்பா பண்ணுவாங்க, அருமையா இருக்கும்னு பேசுனீங்களே, இதுக்கு பேரு கருத்தா? இதுக்கு பேரு நிலைப்பாடா? இது ஒரு கட்சி, இதுக்கு ஒரு தலைவர்? அதனாலதான் சொன்னேன், பழனிசாமி பேசாம கட்சியை கலைச்சுட்டு நீங்க பாஜாகவுல போய் சேர்ந்துருங்க. பத்துத்தோல்வி பழனிசாமி அவர்களே, உங்க ஓனரை டெல்லியில வச்சு வீழ்த்தியிருக்க இந்த நேரத்துல உங்ககிட்ட மக்கள் கேட்க ஆசைப்படுற 10 கேள்விகளை இப்ப கேட்கப் போறோம் உங்களிடத்துல.
- திருவள்ளுவருக்கு காவி அடிப்பது, மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கையில உங்கள் நிலைப்பாடு என்ன? இந்தியை ஒத்துக்கொண்டால்தான் 2000 கோடி ரூபாய் கல்வி நிதி எனும் தர்மேந்திர பிரதான் கருத்தை ஏற்கிறீர்களா? அப்படி இல்லையென்றால் பாஜாக தலைவர்களை மேடையில் வச்சுக்கிட்டு அதைச் சொல்ல முடியுமா? இதான் முதல் கேள்வி.
- நீட் விலக்கு நிபந்தனையோடுதான் திமுக கூட்டணி வச்சிருந்தது. உங்களால ஏன் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு தந்தால்தான் பாஜாக கூட்டணி என நிபந்தனை விதிக்க முடியல?
- கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக எஃப்சிஆர்ஏ (FCRA) சட்டத்திருத்தம் பற்றிய உங்களோட நிலைப்பாடு என்ன? உங்களுக்குத்தான் கூட்டணி வேற, கொள்கை வேறன்னு சொல்றீங்களே, உங்களால அப்ப தைரியமா இதை எதிர்க்க முடியுமா?
- ஒரு கற்பனைக்கு, கற்பனைக்காகச் சொல்றேன், என்டிஏ (NDA) கூட்டணி வெற்றி பெறுது என வச்சுக்கிட்டா, தமிழ்நாட்டுல அதிமுக ஆட்சிதான் அமையும்னு பாஜாக தலைவர்கள் உறுதி கொடுப்பாங்களா?
- கட்டி முடிக்காத எய்ம்ஸ் தவிர்த்து உங்க ஓனர் பாஜாக தமிழ்நாட்டிற்காக கடந்த 12 வருஷத்துல கொண்டு வந்த சிறப்புத் திட்டம் என்ன?
- மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், பிபிஎஸ்ஏ (BPSA) கல்விச் சட்டம், மகளிர் இடஒதுக்கீடு சட்டம், மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி சட்டத்தை நீக்கிட்டு கொண்டு வந்திருக்கக்கூடிய புதிய விபிஜி ராம் ஜி சட்டம் – இப்படி பாஜாக கொண்டு வந்திருக்கக்கூடிய ஒரு சட்டத்தோட பேரையாவது தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய மக்களுக்கு வாயிலேயே சொல்ல முடியுமா? எல்லாத்துக்கும் சமஸ்கிருதத்துல பேர் வச்சுட்டு, அதை ஆங்கில வரிவடிவத்தில் எழுதினா அது ஆங்கிலம் ஆயிடுமா? இதை எதிர்த்து உங்களால் பேச முடியுமா? இந்தித் திணிப்பையே எதிர்க்காத உங்களை எதுக்கு தமிழர்கள் நம்பணும்?
- முஸ்லிம் மக்களுடைய சொத்துக்களைப் பறிக்கிற வக்ஃப் சட்டத்தைக் கைவிடச் சொல்லி பாஜாக கிட்ட கேட்டீங்களா? நீங்க கேட்டதை மதிச்சாங்களா? அப்படிப்பட்ட கூட்டணி தொடர்வது சிறுபான்மை மக்களுக்கு நீங்க செய்யக்கூடிய துரோகம் தான?
- தொகுதி மறுவரையறையில வாஜ்பாய் செஞ்ச மாதிரி 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மோடிகிட்ட நீங்க வற்புறுத்துனீங்களா?
- பேரறிஞர் அண்ணாவும் மக்கள் திலகம் எம்ஜிஆரும் போற்றிய தந்தை பெரியாரை உங்க பாஜாக ஓனர் அவமதிக்கிறாங்களே, அதுக்கு உங்களோட பதில் என்ன? கூட்டத்தோட முகப்பிலிருந்த பெரியார் படத்தை எடுத்துட்டீங்களே!
- திராவிடம் என்பதே போலிக் கொள்கை என்று பாஜாக சொல்றாங்க. உங்க கட்சி பேர்ல திராவிடம் இருக்கு. பாஜாகக்காரங்க இப்படிப் பேசுறது உங்களுக்கு உறுத்தலையா? உங்க கட்சியினுடைய அடிப்படையையே மறுக்கிற ஒருத்தரோட கூட்டணி வச்சிருக்கக்கூடிய உங்களை அடிமை என கூப்பிடாம வேற எப்படி கூப்பிடுறது?
இத்தனை கேள்விகளையும் மக்கள் மனசுல இருக்கக்கூடிய கேள்விகள்தான். வழக்கம்போல இப்பவும் நீங்க பதில் சொல்லலன்னா, மக்களே ஏப்ரல் 23 எக்ஸாம்ல உங்களுக்கு பூஜ்ஜியம் மார்க் போட்டுருவாங்க. திரும்பவும் அரியர்தான், ஃபெயில்தான்… திரும்பவும் அரியர்தான், ஃபெயில்தான்.
ஆனா எங்க திராவிட மாடல், அஞ்சு ஆண்டுல எல்லா பாடத்துலயும் நூற்றுக்கு நூறு எடுத்திருக்கிறோம். இந்தியாவே திரும்பிப் பார்க்கிற எல்லா மாநிலங்களும் ஃபாலோ பண்ணக்கூடிய முத்திரை திட்டங்களை நிறைவேத்தியிருக்கிறோம். இதோட அடுத்தகட்டமாகத்தான் 2026 தேர்தல் அறிக்கையை நான் வெளியிட்டிருக்கிறேன். சாதாரண அறிக்கை இல்ல இது, சூப்பர் ஸ்டார் அறிக்கை.இப்போ இதுதான் நம்மளோட சூப்பர் ஸ்டார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
